Published : 09 Dec 2019 08:25 AM
Last Updated : 09 Dec 2019 08:25 AM

தேர்வுக்குத் தயாரா?- புரிந்து படித்தால் இயற்பியல் எளிது!: பிளஸ் 2 இயற்பியல்

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

பிளஸ் 2 இயற்பியலில், பாடங்களை முழுமையாக புரிந்து படிப்பது மட்டுமே புதிய வினாத்தாள் மாதிரிக்கு தயாராக உதவும். அதன் முதல் படியாக வினாத்தாள் அமைப்பில் இருந்து தொடங்கலாம் வாருங்கள் மாணவர்களே!

பகுதி-1: ஒரு மதிப்பெண் பகுதியின் 15 வினாக்கள், ’சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுது’வதாக உள்ளது.

பகுதி-2: சிறு வினாக்கள் அடங்கிய இரண்டு மதிப்பெண் பகுதியில் கொடுக்கப்பட்ட 9 வினாக்களில் 6க்கு விடையளிக்க வேண்டும். இதில் ஒன்று கட்டாய வினாவாகும்.

பகுதி-3: இதே வினா எண்ணிக்கை மற்றும் ஒரு கட்டாய வினாவுடன் குறு வினாக்கள் அடங்கிய 3 மதிப்பெண் பகுதி உள்ளது.

பகுதி-4: விரிவான விடையளிப்பதற்கான ‘அல்லது’ வகையிலான 5 மதிப்பெண்கள் வினாக்கள் இப்பகுதியில் உள்ளன. இந்த வினாக்கள் ஒரு முழு விரிவான வினாவாகவோ, பல குறு வினாக்களாகவோ அமைந்திருக்கலாம். அதிக மதிப்பெண்களுக்கு
அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள், அனைத்துப் பாடங்களையும் முழுமையாக படிப்பதுடன், அனைத்து வகையான வினாக்களுக்கும் முக்கியத்துவம் தருவது அவசியம். 1, 3, 4, 6 ஆகிய முக்கியமான பாடங்களில் இருந்து அதிகப்படியான வினாக்கள் எதிர்பார்க்கப்படுவதால், இப்பாடங்களை படிப்பதிலும், திருப்புவதிலும் கூடுதல் கவனம் தேவை.

மதிப்பெண் சரிவதற்கு கட்டாய வினாக்கள் காரணமாகக் கூடும். எடுத்துக்காட்டு கணக்குகள் மற்றும் இதர கணக்கீடுகளில் கணித
முறை படிகளை கவனமாக படித்து திருப்புதல் செய்வது, கட்டாய வினாக்களுக்கு பதிலளிக்க உதவும். கட்டாய வினாக்கள் பெரும்பாலும், உயர் சிந்தனையை சோதிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்பதால், கணக்கீடுகளின் கருத்து சிந்தனை தொடர்பான ‘ஏன், எவ்வாறு, காரணம் கூறுக...’ என்பதான வினாக்களைத் தொகுத்து பயிற்சி செய்தல் வேண்டும்.

விரிவான வினாக்களுக்கு பதிலளிக்கும் முன்னர், வினாக்களின் உட்பிரிவுகளை நன்கு படித்து உள்வாங்கிக் கொண்ட பின்னரே விடையளிக்க வேண்டும். தேவையான படவிளக்கங்களை உரிய அம்புக் குறிகள், நேர் மற்றும் எதிர் குறிகள் ஆகியவற்றுடன் குறிப்பதும் அவசியம்.

கடினம் களைவோம்

இயற்பியலை கடினமாகக் கருதும் மாணவர்கள், பாடங்களை முறையாக அணுகுவதன் மூலம் அந்த கடினத் தன்மையை களையலாம். பாடம் தோறும் உள்ள எளிமையான முகப்புக் கருத்துக்களை படித்துவிட்டு பாடத்துக்குள் செல்வது அவற்றில் முதல் படியாகும். பெரும் வினாக்களுக்கு படிக்கையில் படங்களை உள்வாங்கிக்கொண்டு, அதன் வழியிலாக பாடக் கருத்துகளை படிப்பது எளிமையாக இருக்கும். கணக்கீடு பகுதியில் அடிப்படையான சமன்பாட்டை புரிந்து படித்திருப்பது, கருத்துரு மற்றும் உயர்சிந்தனை வினாக்களை எதிர்கொள்ள உதவும். இறுதி சமன்பாடுகளை நாம் பகுத்து ஆராய்ந்தால், எவ்வித கடின வினாவுக்கும் பதிலளிப்பது எளிதாகும். பாடக்கருத்துக்களை மனப்பாடம் செய்யாது, புரிந்து எழுத முயற்சிப்பதுடன், ஆசிரியர் உதவியுடன் அவற்றை படிப்படியாக செம்மைப்படுத்துவதும் அவசியம்.

தவிர்க்க வேண்டிய தவறுகள்

ஒரே உச்சரிப்பு அல்லது வார்த்தைகளைக் கொண்ட வினாக்களுக்கு விடையை மாற்றி எழுதும் போக்கு அதிகமாக காணப்படுகிறது. பாடங்களை படிக்கும்போது தொடர்புள்ள அல்லது வேறுபடும் பாடக்கருத்துக்களை ஒப்பிட்டுப் படிப்பதும், வினாக்களை பல முறை வாசித்துஉணர்வதும் இத்தவறினை தவிர்க்க உதவும். ஒவ்வொரு பாடத்திலும் உள்ள முக்கிய பாடக்குறிப்புகள், வரையறைகள், விதிகள், விளக்க சமன்பாடுகள் இவற்றை குறிப்புகளின் வரிசையாக எழுதி வைத்துக்கொண்டு திருப்புதல் செய்வது குழப்பமின்றி பதிலளிக்கவும், விரைவான திருப்புதலுக்கும் உதவும். இதன் மூலம் தேர்வில் விரைவாக நினைவுகூரலும் சாத்தியமாகும்.

தேர்ச்சி நிச்சயம்

பாடப்பகுதியின் விதிகள், பண்புகள், பயன்பாடுகள், ஒற்றுமைகள், வேற்றுமைகள், முக்கிய சமன்பாடுகள், எளிய வினாக்கள் மற்றும் வரைபடங்கள் ஆகியவற்றை மட்டுமே தொகுத்துப்படிப்பதன் மூலம் தேர்ச்சிக்கான மதிப்பெண்களை குறிவைக்கலாம். இவற்றுடன் ஒரு மதிப்பெண் பகுதியின் எளிய வினாக்களில் தயாராவதும், பெரு வினாக்களுக்கான படங்களை வரைந்து பார்ப்பதும் தேர்ச்சி நிச்சயமாகும். 2, 5,7, 8 ஆகிய எளிமையான 4 பாடங்களும் மெல்லக் கற்கும் மாணவர்கள் முதலில் படித்தாக வேண்டிய பாடங்களாகும். இவற்றை முறையாக படித்தால் மொத்த மதிப்பெண்களான 70-க்கு 30 வரை எடுப்பது எளிதாகும்.

தேர்வு நேர மேலாண்மை

தேர்வுக்கு முந்தைய தினம் மற்றும் தேர்வு நாளன்று, முழுப் பாடங்களையும் படிப்பதற்கு பதிலாக, முக்கிய வினாக்களில் மட்டுமே திருப்புதல் செய்வது நல்லது. தேர்வின் நிறைவாக வினா எண் வரிசை, அனைத்து வினாக்களுக்கும் விடையளித்துள்ளோமா உள்ளிட்டவற்றை சரி பார்ப்பதும் அவசியம். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு மொத்தமாக 25 நிமிடங்கள். 2 மதிப்பெண் வினாக்களுக்கு தலா 3 நிமிடம். 3 மதிப்பெண் வினாக்களுக்கு தலா 6 நிமிடம். 5 மதிப்பெண் வினாக்களுக்கு தலா 10 நிமிடம். இவ்வாறாக நேரத்தை பிரித்து திட்டமிட்டு தேர்வெழுதினால், மிச்சமிருப்பதில் 30 நிமிடங்களை திருப்புதல் மற்றும் சரிபார்த்த
லுக்கு ஒதுக்க முடியும்.

- பாடக் குறிப்புகளை வழங்கியவர் வெ.ஸ்ரீதரன்,

முதுகலை ஆசிரியர்(இயற்பியல்),
அரசு மேல்நிலைப்பள்ளி, செம்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம்.

கூடுதல் கவனக் குறிப்புகள்

குறுவினாக்கள் பகுதிக்கு, விதிகள், பண்புகள், பயன்கள் உள்ளிட்டவற்றில் தினமும் தலா ஒன்று என எழுதிப் பழகுவது வெற்றிகரமான திருப்புதலாக அமையும். அவ்வப்போது படங்களை வரைந்து பார்ப்பது தேர்வில் விரைவாக விடையளிக்க உதவும். பாடப் பகுதியின் முக்கிய சமன்பாடுகளை வகைப்படுத்தி, பட்டியலிட்டு தொகுப்பாக வைத்துக்கொள்வதும் அதை அடிக்கடி எழுதிப்பார்த்து நினைவுகூருதலும் நல்லது. இவை கணக்கீடுகள் தொடர்பான வினாக்களை பிழையின்றியும், எளிமையாகவும் விடையளிக்க உதவும். மாதிரி வினாத்தாள்களின் மூலமாக முழுமையான தேர்வுகளை எழுதிப் பார்ப்பது, வினாத்தாள் மாதிரியின் புதிய மாற்றங்களை எதிர்கொள்ள உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x