Published : 09 Dec 2019 08:14 AM
Last Updated : 09 Dec 2019 08:14 AM

நிகழ்வுகள்: டிசம்பர் 11- சர்வதேச மலை நாள்

மனித உரிமை நாள்- டிசம்பர் 10

சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை ஐநா பொது அவை 1948 டிசம்பர் 10 அன்று ஏற்றுக்கொண்டது. இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ம் நாளை சர்வதேச மனித உரிமை நாளாகக் கொண்டாட ஐநா தீர்மானித்தது. இன, மத, மொழி, பாலின, அரசியல் கருத்துநிலை சார்ந்த வேறுபாடுகள் இன்றி அனைத்து மனிதர்களுக்கும் மனித உரிமைகள் இயல்பிலேயே பொருந்தும் என்பதை உணர்த்தும் நாள் இது. இந்த பிரகடனம் 500 மொழிகளில் படிக்கக் கிடைக்கிறது.மிக அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் இதுவே. உலகில் மனித உரிமைகளின் நிலை மேம்படவும், மனித உரிமைகள் பாதுகாக்கவும் இளைஞர்களின் பங்களிப்பை கொண்டாடுவதே 2019-ம் ஆண்டுக்கான கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.

சர்வதேச மலை நாள்- டிசம்பர் 11

உலக மக்கள் தொகையில் 15 சதவீதத்தினருக்கு மலையும் மலை சார்ந்த பகுதிகளும்தாம் வாழ்விடமாக இருந்து கொண்டிருக்கிறது. விலங்குகள், தாவரங்களில் கால்பகுதி மலைகளில் இருக்கின்றன. தூய்மையான நீர் உட்பட பல்வேறு வளங்களின் பெட்டகமாக மலைகள் திகழ்கின்றன. மலைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐநா 1992-ல் மலைகளைப் பாதுகாப்பதற்கான பிரகடனத்தை ஏற்றது. 2002-ம் ஆண்டை சர்வதேச மலைகள் ஆண்டாக அறிவித்தது. 2003 முதல் டிசம்பர் 11 சர்வதேச மலைகள் நாளாகக்கொண்டாடப்பட்டு வருகிறது. மலைகளில் வாழும் இளைஞர்களின் வளமான எதிர்காலத்துக்கு கல்வி, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பு, தரமான பொதுச்சேவைகள் ஆகியவற்றை வலியுறுத்துவதே 2019-ம்ஆண்டுக்கான கருப்பொருளாகும்.

கென்யா விடுதலை நாள்- டிசம்பர் 12

பிரிட்டனின் ஆளுகைக்கு கீழே 19-ம்நூற்றாண்டின் பிற்பகுதியில் கென்யா வந்தது. 1920-ல் பிரிட்டனின் காலனி நாடானது. கென்யாவில் வாழ்ந்த ஆப்பிரிக்கர்கள் அரசியல் அதிகாரத்தில் பங்குகோரி போராடிவந்தனர். நீண்ட போராட்டங்களின் விளைவாக 1944-ல் ஒருஆப்பிரிக்கர் நாடாளுமன்ற உறுப்பினரானார். 1950களில் விடுதலை கோரி புரட்சிகள் வெடித்தன. இவற்றின் மூலம் காலனிஆதிக்கத்தின் கீழ் இருந்த ஆப்பிரிக்க மக்களுக்குச் சில சமூக பொருளாதார சலுகைகள் கிடைத்தன. 1960-களில் ஆப்பி
ரிக்கர்களின் அரசியல் பங்கேற்பு அதிகரித்தது. 1963 டிசம்பர் 12 அன்று கென்யா, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை அடைந்தது. 1964 டிசம்பர் 12 அன்று குடியரசானது. ஜெமோ கென்யட்டா கென்யாவின் முதல் குடியரசுத் தலைவரானார்.

நாடாளுமன்றம் தாக்கப்பட்ட நாள்- டிசம்பர் 13

2001 டிசம்பர் 13 அன்று புதுடெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தில்தீவிரவாதிகள் துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலை நடத்தியஐந்து தீவிரவாதிகள், காவல்துறை அதிகாரிகள் உட்பட 15 பேர் மரணமடைந்தனர். இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டபோது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தது. அமைச்சரவை வாகனங்களின் பெயருடன் கட்டிடத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்ஈ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது அமைப்புகளை சேர்ந்தவர்கள்தான் இந்தத் தாக்குதலை நிகழ்த்திய தீவிரவாதிகள் என்று கண்டறியப்பட்டது. இதை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சினை வலுத்தது. இந்தத் தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடையவராகக் கைது
செய்யப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த அஃப்சல்குரு என்பவருக்கு 2013 பிப்ரவரி 9 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

- தொகுப்பு: கோபால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x