Published : 09 Dec 2019 08:05 AM
Last Updated : 09 Dec 2019 08:05 AM

இந்த ஆண்டில் கடைசியாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்- டிச. 26-ல் பார்க்கலாம்

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம், வரும் 26-ம் தேதி ஏற்படுகிறது. அப்போது நெருப்பு வளையம் போல் பார்க்க முடியும்.

சூரியனை அனைத்து கிரகங்களும் சுற்றி வருகின்றன. அதேபோல் கிரகங்களுக்கு உள்ள நிலவுகளும் சூரியனை சுற்றி வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேகத்தில் சூரியனை சுற்றி வரும் போது சூரியனுக்கும் ஒரு கிரகத்துக்கும் இடையில் நிலவு வரும். அப்போது சூரியன் மறைக்கப்படும். அதைத்தான் சூரிய கிரகணம் என்கின்றனர்.

சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் ஒரே நேர்கோட்டில் நிலா வரும் நிகழ்வுகள் நடக்கின்றன. அப்போது பூமியில் விழும் சூரிய ஒளி மறைக்கப்பட்டு நிலவின் நிழல் பூமி மீது விழும். இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம்.

இதை முழு சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் என்று 3 வகையாகப் பார்க்கிறோம்.

சூரியனை நிலவு முழுமையாக மறைத்தால், அது முழு சூரிய கிரகணம். சூரியனை நிலவு முழுமையாக மறைக்காமல், சூரியனின் விளிம்புப் பகுதி ஒரு நெருப்பு வளையம் போல் காட்சி அளித்தால், அது நெருப்பு வளைய சூரிய கிரகணம். அதை ‘ரிங் ஆப் ஃபயர்’ என்கின்றனர்.

மூன்றாவதாக சூரியனுடைய ஒளி முழுமையாக மறையாமல், அதன்ஒளி குறையும். எனினும் பூமி மீது வெளிச்சம் இருக்கும். இது, பகுதி சூரிய கிரகணம். இவற்றில் டிசம்பர் 26-ம் தேதி, ‘ரிங் ஆப் ஃபயர்’ எனப்படும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதை உலகின் பல பகுதிகளிலும் பார்க்க முடியும். தமிழகத்தின் திருச்சி, காரைக்குடி, திண்டுக்கல், மதுரை, பழநி உட்பட பல இடங்களில் பார்க்க முடியும் என்பது சிறப்பு. இதுபோல் நிகழ்வது அரிதான ஒன்று.

டிசம்பர் 26-ம் தேதி காலை 8.07 மணி முதல் 11.18 மணி வரை, 3 மணி நேரத்துக்கும் அதிகமாக இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம். சென்னை, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் குறை சூரிய கிரகணமாக பார்க்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x