Published : 09 Dec 2019 07:55 AM
Last Updated : 09 Dec 2019 07:55 AM

10 நிமிடங்களில் ரத்த பரிசோதனை செய்யும் ‘மாப்ஸ்கோப்’- அண்ணா பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு

அண்ணா பல்கலைக்கழகம் புதுவகையான நுண்ணோக்கியைக் கண்டுபிடித்துள்ளது. ‘மாப்ஸ்கோப்’(Mobscope) என்று பெயரிடப்பட்டிருக்கும் இது அலைபேசி மற்றும் நுண்ணோக்கியின் கலவையாகும். வழக்கமான நுண்ணோக்கியின் மேற்பரப்பில் பூதக்கண்ணாடி இருக்கும் அல்லவா. ‘மாப்ஸ்கோப்’பில் அதற்குபதிலாக ஒரு அலைபேசி பொருத்தப்பட்டிருக்கும். இந்த அலைபேசிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பட்டையில் பூசப்பட்டிருக்கும் ரத்த மாதிரியைப் புகைப்படம் பிடிக்கிறது. பின்னர் அலைபேசியில் உள்ள செயலி, ரத்தத்தைச் சோதனை செய்து அடுத்த 10 நிமிடங்களில் முடிவளித்துவிடுகிறது.

நுண்ணோக்கி வழியாக 1000 மடங்கு பெரிதாக்கப்பட்ட ரத்த அணுக்களை அலைபேசி படம் எடுத்துக் கொள்கிறது. பின்னர் அதில் பொருத்தப்பட்டிருக்கும் செயலி ரத்த அணுக்களில் எத்தனை சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள், மற்றும் பிளேட்லெட்ஸ் உள்ளன என்பதை கணக்கிடுகிறது. இதன் அடிப்படையில் ரத்த சோகை உள்ளதா அல்லது மலேரியா, டெங்கு போன்றவற்றுக்கான நோய்க்கூறுகள் காணப்படுகிறதா என்பதை அலசி ஆராய்ந்து முடிவைத் தெரிவிக்கிறது. சராசரியாக ஒரு நுண்ணோக்கியின் விலை ரூ.40 ஆயிரமாகும். ஆனால், ‘மாப்ஸ்கோப்’ ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான செலவில் உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

‘மாப்ஸ்கோப்’-யை வடிவமைத்த திட்டக் குழுவின் தலைவரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் மின்னணு மற்றும் தகவல் தொடர்புதுறையின் தலைவருமான பேராசிரியர் முத்தன். அவர் கூறுகையில், “வழக்கமான நுண்ணோக்கியைக் கொண்டு செய்யப்படும் அத்தனை விதமான சோதனைகளையும் ‘மாப்ஸ்கோப்’ கொண்டு செய்யும்வகையில் இதில் செயற்கைநுண்ணறிவு தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கிறது” என்றார்.

‘மாப்ஸ்கோப்’ தரும் முடிவுகள் 85 சதவீதம் வரை துல்லியமாக இருப்பதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அங்கீகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x