Published : 07 Dec 2019 08:03 AM
Last Updated : 07 Dec 2019 08:03 AM

உயர்கல்வியில் இணையான படிப்புகள் எவை?- தமிழக அரசு அரசாணை வெளியீடு

உயர்கல்வியில் எவை எவை இணையான படிப்புகள் என்பது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. உயர் கல்வியில் பல்வேறு புதிய படிப்புகளை பல்கலைக்கழகங்கள் அறிமுகம் செய்கின்றன. இந்த படிப்புகளில் பட்டம் பெறுபவர்களும் தமிழக அரசுப் பணியில் சேர விண்ணப்பிக்கின்றனர். இவர்களது சான்றிதழ்களை சரிபார்ப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால், எந்தெந்த பட்டப்படிப்புகள் ஏற்கெனவே உள்ள படிப்புகளுக்கு இணையானது என்பதை முடிவு செய்து அதன் விவரத்தை உயர்கல்வித் துறை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இதுதொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வி குழுமத்தின் ஆலோசனைக் கூட்டம் கடந்த நவம்பர் 6, 12 தேதிகளில் நடந்தது. இதில், ஏற்கெனவே இருக்கும் படிப்புகளுக்கு இணையான படிப்புகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, எந்தெந்த பட்டப்படிப்புகள் ஏற்கெனவே உள்ள படிப்புகளுக்கு இணையானவை, எவை இணையானது அல்ல என்ற விவரத்தை தற்போது அரசாணையாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.இ., பி.டெக். ஆடை (அப்பேரல்) தொழில்நுட்பம் படிப்பு, பி.இ., பி.டெக். ஜவுளி (டெக்ஸ்டைல்) தொழில்நுட்பத்துக்கு இணையானது அல்ல. இதேபோல, பி.இ. கம்ப்யூட்டர் அண்ட் கம்யூனிகேஷன் படிப்பு, பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு இணையானது அல்ல. இதுபோல பல்வேறு பரிந்துரைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

எம்எஸ்சி எலெக்ட்ரானிக் மீடியா படிப்பு, எம்எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படிப்புக்கு இணையானதா என்பது மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x