Published : 06 Dec 2019 05:47 PM
Last Updated : 06 Dec 2019 05:47 PM

பள்ளிப் பாடத் திட்டத்தில் அம்பேத்கர்: டெல்லியில் கேஜ்ரிவால் அறிமுகம்

பள்ளிப் பாடத் திட்டத்தில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு குறித்த கையேட்டை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று டெல்லியில் அறிமுகப்படுத்தினார்.

பாபா சாகேப் என்று அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். சட்ட வல்லுநர், இதழியலாளர், எழுத்தாளர், சமூக நீதிக்கான புரட்சியாளர் எனப் பன்முகத் தன்மை வாய்ந்தவர். விடுதலைக்குப் பின், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக அம்பேத்கர் பொறுப்பேற்றார்.

அம்பேத்கர், பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் வல்லுநராக விளங்கினார். இந்திய அரசியலமைப்புச் சாசன வரைவுக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உயிரிழந்தார். அவரின் நினைவு தினமான இன்று, அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றைக் கையேடாக முதல்வர் கேஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.

6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பாடத் திட்டத்தில், அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் சேவை குறித்த கையேடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய கேஜ்ரிவால், ''தலித்துகளின் தலைவராக மட்டுமே அம்பேத்கர் அறியப்படுகிறார். சமூகத்துக்கு அவர் ஆற்றிய பணிகளை மக்கள் குறைத்து எண்ணி விட்டனர்.

தனியார் பள்ளிகளும் தங்களின் பாடத் திட்டத்தில் அம்பேத்கர் குறித்துச் சேர்க்க வேண்டும். இன்னும் சில ஆண்டுகளில் அம்பேத்கர் குறித்த முழுமையான பாடத் திட்டத்தை நம்மால் உருவாக்க முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x