Published : 06 Dec 2019 05:08 PM
Last Updated : 06 Dec 2019 05:08 PM

பாம்பு கடித்து சிறுமி பலி: கேரள அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி

கேரளப் பள்ளியில் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு மாநில அரசு அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் சுல்தான் பத்தேரி என்ற இடத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஷீஹல் ஷெரினை, கடந்த நவ.20 ஆம் தேதி வகுப்பறையில் இருந்தபோது பாம்பு கடித்தது. மாணவி இதுபற்றி ஆசிரியையிடம் தெரிவித்தும் அவர் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், மாணவியின் தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி சிறுமி ஷீஹல் இறந்தார். ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வரை கல்வித் துறை சஸ்பெண்ட் செய்தது. மேலும் பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகம் கலைக்கப்பட்டது.

இந்நிலையில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள ராகுல் காந்தி, தனது சொந்தத் தொகுதியான வயநாட்டுக்குச் சென்றார். மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். சம்பந்தப்பட்ட பள்ளிக்கும் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில் கேரள அமைச்சரவை, பாம்புக்கடியால் இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேபோல கிரிக்கெட் பேட் தலையில் பட்டு இறந்த ஆலப்புழாவைச் சேர்ந்த நவநீத் என்னும் சிறுவனுக்கும் ரூ.10 லட்சம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த நிதி, கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x