Published : 06 Dec 2019 10:05 AM
Last Updated : 06 Dec 2019 10:05 AM

தேர்வுக்குத் தயாரா?- கற்பனை திறன் தேவைப்படும் பாடம்: பிளஸ் 1 இயற்பியல்

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

இயற்பியல், இதர பாடங்களில் இருந்து அடிப்படையில் வேறுபட்டது. இயற்பியல் கருத்துகளை புரிந்துகொள்ளவும், படிப்பதற்கும் கற்பனைத் திறன் மிகவும் அவசியம். எனவே அதற்கேற்ற மனநிலையில், கவனத்தைக் குவித்து இயற்பியல் பாடங்களை பயில்வது நல்லது.

வினாத்தாள் அமைப்பு

பகுதி-1: ஒரு மதிப்பெண் பகுதியின் 15 வினாக்களில் 7 வினாக்கள் வரைபுத்தகத்தில் இருந்து கேட்கப்படும்.

ஏனைய வினாக்கள் மாணவர்களின்திறன்களை சோதித்தறியும் வகையிலான, படைப்பு வினாக்கள், உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்கள் மற்றும்கணக்குகளாக அமைந்திருக்கும். இவற்றுக்குத் தயாராக பாடப்பகுதி முழுவதையும் புரிந்து படிப்பதுடன், கணக் குகளை எளிமையாக தீர்த்து பழகுவதும் அவசியம்.

பகுதி-2: இரு மதிப்பெண் பகுதியின் 9 வினாக்களில், 6-க்கு விடையளிக்க வேண்டும். அவற்றில் ஒன்று கட்டாய வினா.

பகுதி-3: மூன்று மதிப்பெண் பகுதியும் அதேப் போன்ற வினா எண்ணிக்கை மற்றும் ஒரு கட்டாய வினாவுடன் இருக்கும். பிரிவு 4: ஐந்து மதிப்பெண் பகுதியில்‘அல்லது’ வகையிலான 5 வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இவை பெரும்பாலும் விரிவான வினாக்களின் ஒற்றைவினாவாகவே கேட்கப்படுகின்றன.

தேர்ச்சி நிச்சயம்

ஒரு மதிப்பெண் பகுதியின் புத்தகத்தில் இருந்து கேட்கப்படும் 7 வினாக்களுக்கும் பதில் அளிப்பது எளிமையாக இருக்கும். மேலும் 1,2,6,7,5 ஆகிய பாடங்களில் உள்ள எளிமையான 5 மதிப்பெண் வினாக்களை குறிவைத்து படிப்பது, அப்பகுதியில் கணிசமான மதிப்பெண்களை பெற உதவும். 2 மற்றும் 3 மதிப்பெண்களுக்கு பாடங்கள்தோறும் உள்ள எளிய வரையறைகள், கூற்றுகள், வேறுபாடுகள் ஆகியவற்றை ஆசிரியர் துணையுடன் அடையாளம் கண்டு தொகுத்துப் படிப்பதும் தேர்ச்சியை உறுதி செய்யும்.

இவ்வகையில் மொத்த மதிப்பெண்ணான 70-ல் குறைந்தது 25 மதிப்பெண்களை பெறவும் வாய்ப்பாகும்.

அதிக மதிப்பெண்களுக்கு

ஒரு மதிப்பெண் பகுதியின் புத்தகத்துக்கு அப்பால் கேட்கப்படும் உருவாக்கப்பட்ட வினாக்கள், கணக்குகள் ஆகியவை மதிப்பெண் சரிவைஏற்படுத்தக் கூடும். எனவே, அவற்றுக்கு கூடுதல் கவனம் அளிப்பது அவசியம். அம்மாதிரியான வினாக்களை தொகுத்துப் படிப்பதும், கருத்துகளின் அடிப்படையிலான கணக்குகளை எளிமையாக தீர்த்து பயிற்சி பெறுவதும் நல்லது.

2 மற்றும் 3 மதிப்பெண் பகுதிக்கு பாடப்பகுதியில் உள்ள விதிகள், கூற்றுகள், வரையறைகள், பண்புகள், பயன்கள், எடுகோல்கள், வேறுபாடுகள், தேற்றங்கள் ஆகியவற்றை தொகுத்துப் படிப்பதும், பிழையின்றி எழுதி பார்ப்பதும் முக்கியம்.

2 மற்றும் 3 மதிப்பெண்களின் கட்டாய வினாக்கள் பெரும்பாலும் கருத்துரு வினாக்கள், தர்க்க வினாக்கள், கணக்குகள் வடிவில்அமைந்திருக்கும். பாடப்பகுதி முழுவதும் இம்மாதிரியானவற்றை அடையாளம் கண்டுபடிப்பதும், கணக்குகளை தீர்த்து பயிற்சி பெறுவதும்முழு மதிப்பெண் பெறுவதற்கு உதவும்.

5 மதிப்பெண் பகுதிக்கு ‘படம், விளக்கம், நிரூபித்தல், முடிவுகள்’ என்ற வரிசையில் பாடக்கருத்துகளை பிரித்து படிப்பது நினைவில் கொள்ளவும், அதே வரிசையில் தேர்வில் எழுதவும் எளிமையாக இருக்கும்.

'சாய்ஸ்’ வினாக்களில், முழு மதிப்பெண் தரக்கூடிய வினாக்களை மட்டுமே தேர்ந்தெடுத்து எழுதலாம். சந்தேகத்துக்கு வாய்ப்புள்ள கணக்கு தொடர்பான வினாக்களை சாய்ஸில் விட்டுவிடலாம்.

நேர மேலாண்மை

தேர்வின் தொடக்கமாக வினாத்தாள்வாசிப்பதற்கு வழங்கப்படும் கால அவகாசத்தை பொறுப்பாக பயன்படுத்துவது, தேர்வின் நேர மேலாண்மைக்கும், குழப்பமின்றி வினாக்களை தெரிவு செய்து விடையளிக்கவும் உதவும். ஒரு மதிப்பெண் பகுதிக்கு அதிகபட்சம் 30நிமிடங்கள் ஒதுக்கலாம். இரு மதிப்பெண் பகுதியில் வினாவுக்குத் தலா 2-4 நிமிடங்களையும், அதேபோன்று 3மதிப்பெண்ணுக்கு தலா 5-7 நிமிடங்கள் மற்றும் 5 மதிப்பெண்ணுக்கு தலா 10-12 நிமிடங்களும் ஒதுக்கலாம். இவ்வகையில் நிறைவாக கிடைக்கும் உபரி நேரத்தில், 15 நிமிடங்களையேனும் மீள்பார்வை மற்றும் சரிபார்த்தலுக்கு ஒதுக்கலாம். வினா வரிசை, ஒரு மதிப்பெண் பகுதியில் ’ஆப்ஷன்’ உடன் விடையை எடுத்து எழுதுவது ஆகியவற்றையும் சரிபார்க்கலாம். சமன்பாடுகள், விதிகள், படங்களின் பாகம் குறித்தல் ஆகியவற்றையும் சரிபார்ப்பது அவசியம்.

பாடக் குறிப்புகளை வழங்கியவர்

க.பிரபு, முதுகலை ஆசிரியர் (இயற்பியல்), அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாலாஜாபாத், காஞ்சிபுரம் மாவட்டம்.

கூடுதலான கவனக் குறிப்புகள்

தேர்வுகளில் கேட்கப்படும் ‘நிரூபித்தல்’ வகை வினாக்களில் மாணவர்கள் அதிகளவில் தவறிழைக்கிறார்கள். எனவே, அவற்றை வெறுமனே மனப்பாடம் செய்யாமல், நன்றாக புரிந்து படிப்பதும் எழுதி பார்ப்பதும் அவசியம்.

படங்களுக்கு தனி மதிப்பெண் உண்டு என்பதால், விரிவான விடையளி பகுதியின் படங்களை பென்சிலால் வரைவதுடன், பாகங்களை கவனமாக குறிப்பதும் முக்கியம். ஒரு மதிப்பெண் மற்றும் சிறு வினாக்களை குறு மற்றும் விரிவான வினாக்களில் அடையாளங்கண்டு படிப்பது திருப்புதலில் உதவும். சமன்பாடுகளை வருவித்தலில், கவனக் குறைவால் மாணவர்கள் அதிகம் தவறிழைக்கிறார்கள். எனவே அவற்றை முறையாக புரிந்துகொண்டு படிப்பதுடன் அதிகம் எழுதிப் பார்த்து திருப்புதல் செய்ய வேண்டும்.

பிளஸ் 1 பாடங்கள், அடுத்துவரும் பிளஸ் 2 மற்றும் உயர்கல்விக்கும், அடிப்படையானவை என்பதால் மாணவர்கள் கூடுதல் சிரத்தையுடன் படிப்பது நல்லது. மேலும் போட்டித் தேர்வுக்கான வினாக்கள் பலவும் பிளஸ் 1பாடங்களின் பாடக் கருத்துகளை அடிப்படையாக கொண்டே கேட்கப்படுவதால், அவற்றை மனதில் கொண்டும் தேர்வுக்குத் தயாராவது மாணவரின் எதிர்காலத்துக்கு உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x