Published : 06 Dec 2019 08:08 AM
Last Updated : 06 Dec 2019 08:08 AM

பார்வையற்ற மாணவர்களும் இனி அறிவியல் படிக்கலாம்: டெல்லி பேராசிரியர் புதிய பிரெய்லி முறை கண்டுபிடிப்பு

புதுடெல்லி

பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களும் இனி அறிவியலை படிக்கும் விதமாக புதிய பிரெய்லி முறையை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் படிக்க உதவும் முறை பிரெய்லி. எழுத்துகள் வடிவமாக மாற்றப்பட்டு, அதை தடவி அறிந்து, அதுமூலம் பார்வையற்றவர்கள் வாசிக்க முடியும்.

இந்த முறையை பிரான்ஸ் நாட்டைசேர்ந்த லூயிஸ் பிரெய்லி என்ற அறிஞர் 1824-ம் ஆண்டில் கண்டுபிடித்தார். அவரின் நினைவாகவே இந்த படிக்கும் முறைக்கு பிரெய்லி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரெய்லி மொழி கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் வழக்கத்தில் உள்ளது. மொழிப்பாடம், கணிதம் போன்ற அடிப்படை படிப்புகளுக்கு மட்டுமே இந்த பிரெய்லி பாடத்திட்டம் உள்ளது.

இந்நிலையில், வேதியியல் பாடத்துக்கும் பிரெய்லி முறையை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் பி.எஸ். பாலாஜி வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து பேராசிரியர்பி.எஸ்.பாலாஜி கூறியதாவது: பார்வையற்ற மாணவர்கள் அறிவியல் படிக்கமுடியாத நிலை உள்ளது. இதை மாற்றி,வேதியியல் படிக்க வசதியாக எளிமையான முறையில் பிரெய்லி எழுத்துகளை உருவாக்கியுள்ளேன்.

தற்போது உருவாக்கியுள்ள பிரெய்லியை பார்வையற்ற மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும்படிக்கலாம். இதனை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் பிரெய்லி மொழியைதெரிந்திருக்க வேண்டிய அவசியம்இல்லை. வேதியியலைக் கற்பிப்பதற்கான முக்கிய மாதிரிகள், 3 டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எளிதில் மக்கும் பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

வேதியியலில் உள்ள எண்கள், குறிகள், பிளஸ், மைனஸ், வேதியியல் கணிதம் உள்ளிட்ட 6 முக்கிய வகைப்படுத்தலை பிரெய்லி மொழியில் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் (என்சிஇஆர்டி) இணைந்து இதை உருவாக்கினேன்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள வேதியியல் பிரெய்லி மொழியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லவேண்டும். அப்போதுதான் உலகில் உள்ள பல பார்வையற்ற மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x