Published : 06 Dec 2019 07:20 AM
Last Updated : 06 Dec 2019 07:20 AM

செய்திகள் சில வரிகளில்: இன்ஸ்டாகிராமில் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடை

ஓய்வு வயதை குறைக்கும் திட்டம்: மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எம்.பி.க்களின் கேள்விகளுக்கு, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம் இல்லை. அல்லது 33 ஆண்டு பணி நிறைவு செய்தவர்களுக்கு ஓய்வளிக்கும் திட்டமும் இல்லை. ஓய்வு வயதை 60-க்குள் குறைக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை.

இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது தற்போது 60 ஆக உள்ளது. 33 ஆண்டு பணி நிறைவு செய்தவர்கள் அல்லது 60 வயது என கணக்கிட்டு, இவற்றில் எது முன்கூட்டி வருகிறதோ அவர்களுக்கு ஓய்வளிக்க முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதை தற்போது அமைச்சர் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடை

சான் பிரான்சிஸ்கோ

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்களில் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால், இன்ஸ்டாகிராமில் வயது வரம்புகள் எதுவும் கிடையாது. இந்நிலையில், 13 வயதுக்கு உட்பட்ட புதிய பயனாளிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் பயனாளிகளின் வயது பற்றிய விவரம் மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனால் 100 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக வலைதளத்தில், வயதுக்கு ஏற்ற பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை உதவும் என நிறுவனம் கூறியுள்ளது.

இணையத்தில் குழந்தைகளின் தனியுரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் விளக்கம் அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x