Published : 05 Dec 2019 02:46 PM
Last Updated : 05 Dec 2019 02:46 PM

நெட் தேர்வில் சமஸ்கிருதம்: தேர்வர்கள் கவலை

நெட் தேர்வில் சமஸ்கிருதம் சார்ந்த கேள்விகள் கேட்கப்படுவதால், சமஸ்கிருதத்தைப் புரிந்து பதிலளிக்க சிரமமாக உள்ளதாகத் தேர்வர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமையே (என்டிஏ), இந்தத் தேர்வையும் நடத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை நீட் தேர்வு நடைபெறுகிறது.

ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் இந்தத் தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கும். இரண்டு தாள்களிலும் அப்ஜெக்டிவ் வகைக் கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். முதல் தாளில் 50 கேள்விகள் கேட்கப்படும். கேள்விக்குத் தலா 2 மதிப்பெண்கள் என்ற வீதத்தில் 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். இரண்டாம் தாளில் 100 கேள்விகள் கேட்கப்பட்டு 200 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

அந்த வகையில் இந்த முறை டிசம்பர் 2-ம் தேதி முதல் தேர்வு தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித் திறனை சோதிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தேர்வில் சமஸ்கிருதக் கேள்விகள் சிரமத்தை அளித்ததாகத் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ''டிசம்பர் மாதத்தில் நடைபெற்று வரும் தேர்வுக்காக பாடத்திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரத்யக்‌ஷா மற்றும் அனுமனா உள்ளிட்டவை சேர்க்கப்பட்டன. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் தேர்வுகளில் அவை சேர்ந்த கேள்விகள் கேட்கப்படுகின்றன.

ஒவ்வொரு தாளிலும் குறைந்தது 2 கேள்வியாவது இடம்பெற்று வருகிறது. இதனால் சமஸ்கிருதத்தைப் புரிந்து பதிலளிக்க சிரமமாக உள்ளது'' என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x