Last Updated : 05 Dec, 2019 11:31 AM

 

Published : 05 Dec 2019 11:31 AM
Last Updated : 05 Dec 2019 11:31 AM

ஊருணியை சீரமைப்பது உட்பட பல்வேறு பணிகள் மூலம் மாணவர்களை தன்னார்வத் தொண்டர்களாக்கிய பேராசிரியர்: இன்று உலக தன்னார்வத் தொண்டர் தினம்

சமூக அக்கறை, பொதுநலத் தொண்டை கற்றுக் கொடுத்து மாணவப் பருவத்திலேயே தன்னார்வத் தொண்டர்களாக உருவாக்கவே கல்வி நிறுவனங்களில் நாட்டுநலப்பணித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் இருந்தாலும், பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் ‘கடமைக்கு’ தான் செயல்படுகிறது. இதை மாற்றிக் காட்டும் விதமாக மாணவர்களை தன்னார்வத் தொண்டர்களாக உருவாக்கி வருகிறார் காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அலுவலரும், தமிழ்ப் பேராசிரியருமான ஜெயமணி.

ஆண்டுதோறும் கல்லூரி சார்பில் நடத்தப்படும் நாட்டுநலப் பணித் திட்டம் மட்டுமின்றி கல்லூரிக்கு வெளியிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், முதியோர் இல்லச் சேவைகள், ரத்த தான முகாம்கள் நடத்தி மாணவர்களை சமூக ஆர்வலர்களாக மாற்றி வருகிறார்.

மேலும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மூலம் தேவகோட்டை அருகே வேட்டைக்காரன்பட்டியில் ஊருணியைச் சீர்படுத்தியது அக்கிராம மக்களிடையே பாராட்டைப் பெற்றது. இதேபோல் பணம் வாங்காமல் வாக்களிப்பது, மதுவின் தீமை, தலைக்கவசம் அணிதல், நெகிலியின் தீமை, கழிவறையைப் பயன்படுத்துதல், நீரின் சிக்கனம், இயற்கை வேளாண்மை ஆகியன குறித்தும் வீடு, வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதுதவிர காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் கல்வியறிவு பெறாத முதியோருக்கு கையெழுத்திட கற்றுக்கொடுப்பது, கோயில் உழவாரப் பணிகள், தெருக்களைச் சுத்தப்படுத்துதல், நிலவேம்புக் குடிநீர் வழங்குதல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்மூலம் கல்வி கற்பதைத் தாண்டி பொது வெளியில் பொதுநலத் தொண்டு செய்ய மாணவர்களைத் தயார்ப்படுத்தி வருகிறார். மாணவர்களை தன்னார்வலர்களாக மாற்றி வரும் இவருக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் 5 விருதுகள் கிடைத்துள்ளன.

இது குறித்து பேராசிரியர் ஜெயமணி கூறுகையில், நாட்டு நலப்பணித் திட்டம் உருவாக்கிய நோக்கமே சுயநலம் இல்லாத பொதுநலனை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களை சமூகம் சார்ந்த தன்னார்வத் தொண்டர்களாக மாற்ற வேண்டும் என்பதற்குத்தான். கடந்த 2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களை உருவாக்கி இருக்கிறேன், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x