Published : 05 Dec 2019 11:04 AM
Last Updated : 05 Dec 2019 11:04 AM

தேர்வுக்குத் தயாரா? - பிழையின்றி எழுதப் பழகலாம் வாங்க! 

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு, ஆங்கிலம் தவிர்த்த அனைத்து பாடங்களையும் எழுத தமிழ் மொழியே அடிப்படையாகிறது. தாய்மொழியான போதும் தமிழில் எழுத பெரும்பாலான மாணவர்கள் தடுமாறவே செய்கிறார்கள். அவர்களுக்காக நடைமுறை சார்ந்து, பிழையின்றி எழுதிப் பழகுவதற்கான எளிய வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழி திறக்கும் மொழி

ஒரு மனிதன் கையாளும் மொழியே அவனது அடையாளமாக திகழ்கிறது. ஒருவரை சந்திக்கும் வேளையில் அவரது மொழித் திறனைக்கொண்டே மதிப்பிடுகிறோம். எனவே மொழியை சரியாக பழகுவது, தேர்வுக்கு அப்பாலும் வாழ்க்கைக்கும் உதவும். ஒரு மாணவனைப் பொறுத்தவரை தனது அடைவுத் திறன்களை தேர்வின் வழியாகவே நிரூபிக்கிறார். அத்தகைய தேர்வின் பெரும்பகுதி எழுத்தின் வழியே அமைகிறது.

அந்த எழுத்துத் தேர்வுகளுக்கு அவர்களின் மொழித்திறனே வழி செய்கிறது. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் சிரத்தையுடன் படித்தாலும், மொழியின் பிழைகளால் மதிப்பெண் சரிவதை தடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். மொழித்திறன் வளர்ப்புக்கு என போதிய அவகாசம் ஒதுக்கவும் வாய்ப்பின்றி தடுமாறுகிறார்கள். எனவே இங்கே வழங்கப்படும் தமிழ் பாடத்தின் வாயிலான நடைமுறை உபாயங்களில் உகந்ததை அடையாளம் கண்டு, மாணவர்கள் தங்களை பட்டை தீட்டிக்கொள்ளலாம்.

வாசிப்பை நேசிப்போம்

தாய்மொழி தமிழில் பேசுதல், கேட்டலில் மாணவர்களுக்கு பிரச்சினை இருப்பதில்லை. வாசித்தல் மற்றும் எழுதுவதில் மட்டும்தான் தடுமாறுகிறது. பிழையின்றி எழுத விரும்புவோர், முதலில் பிழையின்றி வாசிக்கப் பழக வேண்டும். வாசிப்பை அதிகமாக்குவதும், அவற்றை நேசித்து செய்வதும் எழுத்துப் பிழைகளை தவிர்க்கச் செய்யும். இயல்பாக ஒரு செயல் இருந்தால் மட்டுமே அதில் ஒன்ற முடியும்.

எனவே கீழ்வகுப்பு மாணவர்களை வாய்விட்டு அழுத்தம் திருத்தமாய் வாசிக்க வலியுறுத்துகிறோம். வாசிப்பில் ஒழுங்கு பழகும்போது, அதன் அடுத்த நிலையாக பிழையின்றி எழுதுவது சாத்தியமாகும். வரிக்கு வரி உணர்ந்தும், பொருளறிந்தும் படிக்கும்போது வாசிப்பின் ருசி பிடிபடும். பொருளறியாது கடமைக்குப் படிப்பவர்கள் மனதில் சொற்கள் தங்காது. நெட்டுரு போட்டாலும் எழுதும்போது பிழைகள் எழவே செய்யும்.

வாசிப்பை வலியுறுத்தும் மாற்றங்கள்

புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய வினாத்தாள் மாதிரி ஆகியவை இயல்பூக்கமாய் புரிந்து படிப்பதையே வலியுறுத்துகின்றன. சொந்தமாக சிந்தித்து எழுதவும், பாடக் கருத்துகளின் அடிப்படையில் அடுத்த கட்டமாய் ஒன்றை யோசித்து எழுதவும் ஊக்குவிக்கின்றன.

மனப்பாடம் செய்வதை இந்த புதிய மாற்றங்கள் வலியுறுத்தவில்லை. படைப்புத் திறனை சோதிக்கும் வினாக்கள், உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்கள் போன்றவைக்கு பதில் அளிக்க, வாசித்திருப்பதும், பாடக் கருத்துக்களை முழுமையாக புரிந்துகொண்டிருப்பதுமே உதவும்.

எனவே பாடங்களை வரிக்கு வரி வாசித்துப் பழகினால், மொழித் திறன் மேம்படுவதுடன் மதிப்பெண்கள் உயரவும் வாய்ப்பாகும். பாடங்கள் நடத்தப்படுவதற்கு முன்பாக, பின்பாக என இந்த முழுமையான வாசிப்பை ஓரிரு முறை செய்யலாம். தேர்வு நெருக்கத்தில் முழுமையான வாசிப்புக்கு நேரம் இருக்காது என்பதால், முக்கியக் கருத்துக்கள், கூற்றுகள், வார்த்தைகள் அடிப்படையிலும் வாசித்து கடக்கலாம்.

முறையாக எழுதிப் பழகுக

எழுத்துப் பிழைகளை தவிர்க்க வாசித்துப் பழகுவது அடிப்படை என்று பார்த்தோம். பிழைகள் அதிகமாக நேரும் மாணவர்கள், வாசிப்பை அழுத்தம் திருத்தமாய் செய்வது நல்லது. சரியான உச்சரிப்பு முறை மட்டுமே வாசிப்பை திருத்தமாக்கும். இலக்கண முறைப்படி எழுத்துக்களை அதற்கான மாத்திரை அளவுடன் உச்சரிக்கும்போது, பேச்சு சிறக்கும். உச்சரிப்பின் கூர்மையும், தெளிவும் ஆளுமையை வளர்த்தெடுக்கும்.

வாசிப்பில் திருப்தியடைந்தவர்கள், அதனை முறையாக எழுத்தில் வடிக்க முயற்சிக்க வேண்டும். எழுதும்போது இடறும் ’லகர-ளகர’, ’ரகர-றகர’ தகராறுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். இதற்கு தமிழ் பாடத்தின் அடிப்படை இலக்கணம் கைகொடுப்பதுடன், எழுதியதை சுயமாக திருத்தி சரிபார்ப்பதும் உதவும். பிழைகளை உள்வாங்குவதுடன் அடுத்த முறை கவனமாக அவற்றை தவிர்க்க முயல்வதும் அவசியம்.

மெல்லக் கற்போரும் பிழை தவிர்க்கலாம்

எழுத்து மொழியில் பிழை தவிர்ப்பது அனைவருக்கும் அவசியமானது. இந்தப் பிழைகளால் உயர் மதிப்பெண் எடுக்க விரும்புவோருக்கு சற்றே மதிப்பெண்கள் சரியும் என்றால், மெல்லக் கற்போருக்கு பெரும் பாதகத்தை உண்டு பண்ணும்.

மெல்லக் கற்போர் தேர்வில் வெற்றி பெற சிரமப்பட்டு மனப்பாடம் செய்யவே முயற்சிப்பார்கள். இந்த கட்டாய மனப்பாடம் ஆங்காங்கே மறதிகளை விட்டுச் செல்லும். இதனால் படித்தது தொடர்ச்சியின்றி தொக்கி நிற்கும். எழுத முயற்சிக்கும்போது கோர்வையாக நினைவு கூற வாய்ப்பின்றி தவறுகள் அதிகம் இழைப்பதோ, எழுதாமல் விடுவதோ செய்வார்கள்.

மேம்படுத்தும் உத்திகள்

படிக்கத் தொடங்கும்போது 2 முக்கிய உத்திகளை பின்பற்றிப் பழகலாம். முதலில் பாடத்தை கவனித்த வகையில் அவற்றை ஒரு கதைபோல சொல்ல முயற்சிக்க வேண்டும். அப்போது ஒரு தொடர்ச்சியும், கவனமும் இயல்பாகக் கூடிவரும்.

பின்னர் கவனித்ததையும், கற்றதையும் அடிப்படையாகக் கொண்டு பாவனையாய் பாடம் நடத்திப் பழகலாம். தனியாகவோ நண்பர்களுடனோ இவற்றை செய்யலாம்.

இதன் மூலம் எழுதத் தடுமாறும் மாணவர்கள் கூட பாடக் கருத்துக்களை உள்வாங்கவும், அவற்றை வெளிப்படுத்தவும் முன்வருவார்கள்.



இவை தயக்கங்களை உடைத்து மொழியை கையாளும் திறன்களை அதிகரிக்கும். அடுத்தக்கட்டமாக, வாசித்துக் கற்றதையும், பேசியதையும் தொகுத்து சிறு வரிகளில் எழுதத் தொடங்கலாம்.

இப்போது கற்றலின் இடைவெளிகள் தூர்க்கப்பட்டு, மொழித்திறன் கூடி வரும். எழுதியதை தாங்களாக சரிபார்ப்பதன் மூலம் பிழைகளை படிப்படியாக தவிர்க்கலாம்.. தமிழ் மட்டுமன்றி தமிழ் வழி இதரப் பாடங்களிலும் இந்த முறைகளைப் பின்பற்றலாம்.

- பாடக் கருத்துக்களை வழங்கியவர்:
த.ரேவதி, பட்டதாரி ஆசிரியர் (தமிழ்),
நகராட்சி உயர்நிலைப்பள்ளி, இராஜகோபலபுரம், புதுக்கோட்டை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x