Published : 05 Dec 2019 07:49 AM
Last Updated : 05 Dec 2019 07:49 AM

செஸ், சுடோகு விளையாட்டில் புது கண்டுபிடிப்பு; காப்புரிமை பெற்ற மாற்றுத் திறனாளிக்கு விருது: துணை குடியரசுத் தலைவர் வழங்கினார்

உலகிலேயே இளம் வயதில் காப்புரிமை பெற்ற மாற்றுத் திறனாளிக்கு தேசிய விருது வழங்கி குடியரசு துணைத் தலைவர் கவுரவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஹிருதயேஷ்வர் சிங் பாட்டி. தசைநார் தேய்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர், அசாத்திய திறமையுடன் இதுவரை 7 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். அவற்றில் மூன்றுக்கு அவர் பெயரிலேயே காப்புரிமையும் பெற்றுள்ளார்.

அவருக்கு சமூக நலத் துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில், 'தலைசிறந்த படைப்பாற்றல் சிறுவன் 2019' என்ற விருதை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்றுமுன்தினம் வழங்கினார். சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு பங்கேற்றார்.

அப்போது, சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார். அவர்களில் ஒருவர்தான் ஜிருதயேஷ்வர் சிங். இதுகுறித்து அவருடைய தந்தை சரோவர் சிங் கூறியதாவது:அரிதான நோயால் சற்கர நாற்காலியில் முடங்கியவனாக என் மகன் இருந்தாலும் செஸ் விளையாட்டில் பல புதுமைகளை கொண்டு வந்துள்ளார்.

வழக்கமான செஸ் போட்டியில் 1 ஜோடி விளையாடும். ஆனால் ஹிருதயேஷ்வர், 3 ஜோடிகள் விளையாடும் வட்ட வடிவிலான செஸ், 30 ஜோடிகள் விளையாடும் வட்ட வடிவிலான செஸ் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளார். அவற்றுக்கு முறையாக விண்ணப்பித்து காப்புரிமையையும் பெற்றுள்ளார். அத்துடன் 16*16 சுடோகு உள்ளிட்ட 7 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். இவ்வாறு சரோவர் சிங் கூறினார்.

அவரைப் பாராட்டி பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளன. பல்வேறு நிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தி தன்னம்பிக்கை உரை நிகழ்த்தி வருகிறார் ஹிருதயேஷ்வர் சிங்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்காக பாடுபட்டோருக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த விருதுகள் முதன் முதலில் கடந்த 1969ம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கும் சிறந்த நிறுவனங்கள் / தனிநபர்களுக்கும், மாற்றுத் திறன் கொண்ட சிறந்த பணியாளருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து, மாறிவரும் சூழலை கருத்தில் கொண்டு தேசிய விருதுகள் திட்டம் மறுஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கு அதிகாரம் அளித்தலுக்கான தேசிய விருதுகள் திட்டத்தின்படி 13 பிரிவுகளாக மொத்தம் 63 விருதுகள் வழங்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x