Published : 04 Dec 2019 19:57 pm

Updated : 12 Dec 2019 10:47 am

 

Published : 04 Dec 2019 07:57 PM
Last Updated : 12 Dec 2019 10:47 AM

‘‘இந்திப் பசங்களும் எங்ககிட்ட தமிழ் கத்துக்கிறாங்க!’’- ஆச்சரியப்படுத்தும் அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்

hindi-students-learn-in-tamil

கோவை

‘‘உம் பேரென்ன?’’

என் கேள்வி புரியாமல் இருவரும் பேந்த, பேந்த விழிக்கிறார்கள்...

‘‘தும் ஹர நாம் கியா ஹை..?’’ ஆசிரியர் இடையில் புகுந்து கேட்கிறார்.

‘‘மேரா நாம் சத்தியம் குமார்..!’’

‘‘மேரா நாம் சுந்தரம் குமார்!’’ இருவரிடமும் பதில்.

‘‘உங்க சொந்த ஊர் எது?’’ நான் தமிழில் கேள்வி கேட்டேன்.

மறுபடியும் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

‘‘ஆப்கா கிர்கான்கெர் கியா ஹை?’’

இந்தியில் திரும்பவும் ஆசிரியர் கேட்கிறார்.

‘‘பிஹார்!’’ என கோரஸாய் இருவரிடமும் பதில்.
‘‘கியா ஆப் தமிழ் ஜானட்டே ஹேய்ன்?’’
‘‘தமிழ் தோடா தோடா மாலும் ஹை...’’

‘‘இப்படித்தான் சார் இவனுகளுக்கு தமிழ் தோடா தோடா.. நம்மளுக்கு இப்படி இந்தி தோடா, தோடா..!’’ என சொல்லிச் சிரிக்கிறார் ஆசிரியர் நடராஜ்.

அந்தச் சிறுவர்களுக்கு 9 வயது மற்றும் 6 வயது. சுட்டுப் போட்டாலும் ஒற்றை வார்த்தை தமிழ் தெரியாத இந்திப் பசங்க. ஆனால் அ, ஆ, இ, ஈ.. என 12 உயிர் எழுத்துகள், 18 மெய்யெழுத்துகள், 216 உயிர்மெய் எழுத்துகளை எழுதுகிறார்கள். அட்சரம் பிசகாமல் உச்சரிக்கிறார்கள். இடம் ஆர்.எஸ்.புரம் கோவை மாநகராட்சி (வடக்கு) ஆரம்பப் பள்ளி. மூன்று ஆசிரியர்கள் இவர்களுக்கு ஸ்பெஷல் கேர் எடுத்து தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதை எதேச்சையாகவே பார்த்தேன்.

‘‘இவங்களுக்கு இப்படி தமிழ் சொல்லிக் கொடுக்கிறது உங்களோட தவமா? இல்ல இவனுக இப்படி தமிழ் கத்துக்க ஏதாச்சும் கட்டாயமா?’’ என்று வேடிக்கையாகத்தான் ஆசிரியர்களிடம் கேட்டேன்.

‘அதெல்லாம் இல்லை!’ என்று இவர்கள் தம் பள்ளிக்கு வந்து சேர்ந்த விதத்தை கதை போல் விவரித்தார் இப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியா.

‘‘இவங்க அப்பா, அம்மா ஒரு ப்ளைவுட் வியாபாரிகிட்ட வேலைக்கு வந்திருக்காங்க. அவங்களுக்கு சத்தியம் குமார், சிவம் குமார், சுந்தரம் குமார்னு மூணு பசங்க. அதுல சிவன் குமார் ஊர்லயே பாட்டிகிட்ட இருந்துட்டான் போல. இவங்க ரெண்டு பேரும் அப்பா, அம்மா கூட வந்திருக்காங்க. பெரியவங்க வேலைக்குப் போயிருக்க, இவங்க வீட்லயே இருந்திருக்காங்க.

இங்கே படிக்கிற ஒரு பையனோட அப்பா ஒருத்தர் அதைப் பார்த்துட்டு வந்து அவங்களைக் கூட்டிட்டு வந்தா இங்கே சேர்த்துக்குவீங்களா?’ன்னு கேட்டார். ‘கூட்டிட்டு வாங்க பார்க்கலாம்!’னு சொல்லிட்டேன். அடுத்த நாளே இந்தப் பசங்களை அப்பாவோட கூட்டிட்டு வந்துட்டார் அவர். இவனுக அப்பாவுக்கும் தமிழ் சுத்தமா தெரியலை. ஆனா, அவர் கூட வேலை செய்யற தமிழ் தெரிஞ்ச இந்திக்காரரை கூட்டிட்டு வந்திருந்தார். நாங்க தமிழ்ல பேசினதை இந்தியில மாத்தி அந்த மனுசன், இந்த பசங்க அப்பாவுக்கு சொல்ல, அவர் பசங்ககிட்ட இந்தியில கேட்டு, திருப்பி தமிழ் தெரிஞ்ச இந்திக்காரர்கிட்ட சொல்ல, அந்த இந்திக்காரர் அவங்க சொன்னதை எங்களுக்கு தமிழ்ல சொல்ல, அப்படித்தான் அட்மிஷன் போட்டோம்.

பையனுக்கு ஆதார் கார்டு விவரங்க வாங்கறதுக்குள்ளே ஒரு வழியாயிட்டோம். பள்ளிக்கூடம் சேர்த்த பின்னாடி, வகுப்புல உட்கார வைக்கவும், எழுந்திருக்க சொல்லவுமே படாத பாடுபட்டுட்டோம். அப்படிப்பட்டவங்களை அ, ஆ, இ, ஈ சொல்லிக் கொடுத்து புரிய வச்சதை சொன்ன பெரிய கதையா இருக்கும். அதுலயும் முதல் எழுத்து ‘அ’ இவனுக எழுதினப்ப நாங்க பட்ட சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது!’’ என்றார் உணர்வு பொங்கிட.

இன்னொரு ஆசிரியை சுமதி பேசும்போது, ''பெரியவன் சுந்தரத்துக்கு நான்தான் கிளாஸ் எடுக்கிறேன். பிஹார்ல மூணாம் வகுப்பு படிச்சிருக்கான். சில ஆங்கில எழுத்துகள், வார்த்தைகள் அவனுக்குத் தெரிஞ்சிருக்கு. உட்காருன்னா நின்னுட்டே இருப்பான். சைகை காட்டி, அவனைப் புடிச்சு அழுத்தி உட்கார வைக்கணும். இல்லேன்னா ஸ்டேண்ட் அப், சிட் டவுண்னு சொல்லி புரிய வச்சேன். போன செப்டம்பர்ல அவன் வந்தப்பதான் அந்த நிலை. இப்ப சொல்றது எல்லாம் புரிஞ்சுக்கிறான். ஒண்ணை சொல்லிக் கொடுத்துட்டோம்னா, அதைப் படிச்சு எழுதிட்டு, அடுத்த பாடத்தை எல்லோருக்கும் முன்னால வந்து கேட்கிறான். முதல்ல மத்த பசங்களோட ஒட்டாம இருந்தான். இப்ப எல்லா பிள்ளைகளோடவும் பழகிட்டான். நம்ம பசங்க இவனுக இந்தி வார்த்தைகள் ஒண்ணு ரெண்டைக் கத்துக்கிட்டானுக, அவனுக தமிழ் வார்த்தைக நாலஞ்சும் பழகிட்டானுக. ரெண்டு பேரும் வந்த மூணு மாசத்துல ஒரு நாள் கூட லீவு போட்டதில்லை. மாசா மாசம் பேரண்ட்ஸ் மீட்டிங். அதுக்கு இவங்க அப்பா தப்பாம வந்துடறார். இந்தி-தமிழ் தெரிஞ்ச ஆளையும் கூடவே கூட்டிட்டு வந்துடறார்!'' என்றார்.

பள்ளியின் மற்றொரு ஆசிரியர் நடராஜ். இவர் முன்பு கோவை சீரநாயக்கன் பாளையம் பள்ளியில் ஆசிரியராக இருந்துள்ளார். அங்கு ஒரு இந்தி மாணவனுக்கு தமிழ் கற்பித்திருக்கிறார். அந்த அனுபவத்தில் அவருக்கு சில இந்தி வார்த்தைகள் தெரியும். அதை வைத்து இம்மாணவர்கள் இருவருக்கும் முதல் மாதம் வகுப்பெடுத்துள்ளார். அவர் அனுபவத்தை இப்படி சொன்னார்:

‘‘இவங்களுக்காவது பக்கத்து வீட்டுக்காரங்க, கூட வேலை செஞ்ச ஆளு இங்கே கொண்டு வந்து விட்டாங்க. சீரநாயக்கன்பாளையத்துல நான் முதல்ல கத்துக் கொடுத்த இந்தி மாணவனுக்கு அது கூட இல்லை. அவன் அப்பா அம்மா ரோட்ல பானி பூரி வித்துட்டு இருந்தாங்க. பள்ளிக்கூடம் போகாம இருந்த பையனை நானே பார்த்துட்டுதான் அந்தப் பள்ளிக்கூடத்துல எடுத்தேன். இப்ப அவன் தமிழ், இங்கிலீஷ் நல்லாவே கத்துக்கிட்டான். அதை விடவும் இவனுக நல்லா வருவானுக!’’ என நம்பிக்கையுடன் பேசினார்.

வடமாநிலத்திலிருந்து நிறையபேர் குடும்பம், குடும்பமாக தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் கோவை, திருப்பூரில் மிகுதியாகவே வசிக்கிறார்கள். மொழிப் பிரச்சனையால் இவர்களின் பிள்ளைகள் பள்ளி செல்வதே இல்லை. அதில் நிறைய பேர் குழந்தைத் தொழிலாளர்களாகவும் உருவெடுக்கிறார்கள். அவர்களில் சிலரைக் கண்டுபிடித்து குழந்தைத் தொழில் முறை ஒழிப்பு மூலம் நடவடிக்கை எடுக்கும் என்ஜிஓக்கள், அவர்களை குழந்தைத் தொழில் ஒழிப்புக் கல்வி கற்பிக்கும் மையங்களில் சேர்க்கிறார்கள். இவர்களில் வடமாநிலக் குழந்தைகளும் உள்ளார்கள்.

‘‘அப்படியான மையங்களில் இவர்களைச் சேர்க்காமல், எடுத்த எடுப்பிலேயே எந்த ஒரு தயக்கமும் இன்றி பள்ளியில் சேர்த்து, ஸ்பெஷல் கேர் எடுத்து தமிழ்ப் பாடம் கற்பித்தும் கொடுக்கிறீர்கள் என்பது ஆச்சரிய விஷயம் மட்டுமல்ல, ‘கைநிறைய சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளைக் கவனிப்பதும் இல்லை. அக்கறை செலுத்துவதும் இல்லை; தரமான கல்வி போதிப்பதுமில்லை’ங்கிற சராசரி விமர்சனங்களையம் உடைச்சிருக்கீங்க!’’ என ஆசிரியர்களை மனதாரப் பாராட்டி, கைகூப்பி பாராட்டிவிட்டு விடை பெற்றேன்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

இந்திப் பசங்கதமிழ் கத்துக்கிறாங்கஆச்சரியப்படுத்தும் பள்ளிஆரம்பப் பள்ளிஆசிரியர்கள்இந்திப் பசங்களின் தமிழ் ஆர்வம்இந்திப் பசங்க தமிழ்ஆசிரியர்களுக்குப் பாராட்டு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author