Published : 04 Dec 2019 05:51 PM
Last Updated : 04 Dec 2019 05:51 PM

குழந்தைகளுடன் உரையாடுவோம்!- மெல்ல நழுவும் கல்வி

கல்வி - படிப்பு, தேர்ச்சி, மதிப்பெண்களுக்கானது மட்டுமில்லை. சுகாதாரம், தற்காப்பு, சுய ஒழுக்கம், மனிதநேயம், அழகியல் சார்ந்த கலைகளையும் கற்பிப்பதாக இருக்க வேண்டும். இவை அனைத்திலும் இருந்து இன்றைய கல்வி மெல்ல நழுவிச் சென்றுகொண்டே இருக்கிறது. அதை மீட்டெடுக்க முயற்சிக்கும் புதிய தொடர் இது!

பத்தாம் வகுப்புக் குழந்தைகள், தங்கள் வகுப்பறைக்குள் எப்போதும் படிப்பு , தேர்வு என சுருங்கிப் போய்க் கிடந்ததைப் பார்த்த அந்த கணக்கு ஆசிரியரால் அமைதியாக இருக்க முடியவில்லை. ஒரு நாள் வகுப்பறையில் இடைவேளை முடிவதற்கு 10 நிமிடம் இருக்கும்போது அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார்.

'கணக்கைத் தவிர வேறு பேசுவோம்' என்று அவர் கூறிய உடனேயே அவர்களது மனதில் எழுந்த கொண்டாட்ட உணர்வு முகத்தில் பிரதிபலித்தது. ''பள்ளியில் படிக்கும்போது, பாடங்களும் தேர்வுகளும் தவிர வேறென்ன வேண்டும்?'' என்று கேட்டார் கணக்கு ஆசிரியர்.

அத்தனை விதமான பதில்கள் மளமளவென வந்து விழுந்தன. 'பிடித்தபடி பூ வேலை செய்து, அழகான வடிவமைப்புகள் செய்ய ஆசைப்படுகிறேன் மிஸ்!' என்றாள் ஒரு மாணவி. 'மிஸ் எனக்கு டூர் மட்டும் போதும், வேறெதுவும் வேண்டாம். ஒரு நாள்கூட இந்தப் பள்ளிக்கூடத்தில் வெளியே கூட்டிட்டுப் போகவே இல்லை மிஸ்!' என்று அங்கலாய்த்தார் ஒரு மாணவர்.

'நிறைய விளையாடணும், போட்டிகளுக்கு வெளியே போய் ஜெயிச்சு வரணும்' என்றார் ஒரு மாணவி. 'நம்ம சாப்பாட்டை நாமே செய்ய விவசாயம் செய்யக் கத்துக் குடுக்கணும் மிஸ்', இது மற்றொரு குழந்தையின் மன வெளிப்பாடு .

'மிஸ், கதைப் புத்தகம் நிறைய படிக்கணும், எப்பவும் பாடத்தையே படிச்சிட்டு இருந்தா சலிப்பா இருக்கு' என்கின்ற குரல்களும் வருகின்றன. 'எல்லாப் பாடத்தையும் ப்ராக்டிகலா செய்து பாத்து தெரிஞ்சுக்கணும்' என்கின்றனர் இன்னும் சில குழந்தைகள்.

'மிஸ், எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிஸ் நிறைய வேண்டும்' என்று சொல்ல, 'அப்படின்னா என்ன? விளக்கமா சொல்லுங்க!' என அந்த ஆசிரியர் கேட்கிறார். 'பாட்டு, நடனம், ஓவியம் இதெல்லாம்தான் மிஸ்' என்றது அந்தக் குழந்தை. மற்றொரு பெண் சிரிக்க ஏன்மா எனக் கேட்கிறார் ஆசிரியர். 'மிஸ் நான் சொல்றதைக் கேட்டு சிரிக்கக்கூடாது' என்பவள், 'சினிமா எடுக்க சொல்லித் தரணும்' என்கிறாள். இதைக் கேட்டு நாம் சிரிக்கக் கூடாதுதான்.

'தையல் சொல்லித் தந்தால் நன்றாக இருக்கும், கம்ப்யூட்டர் கற்றுக் கொடுத்தால் நன்றாக இருக்கும்'.. எனத் தொடர்ச்சியான குரல்கள். இப்படியாக அந்த வகுப்பறையில் 10 நிமிடத்திற்குள் பலரின் ஏக்கக் குரல்களும் வெளிப்பட்டன .

'மிஸ்.. எனக்கு உடம்பு சரியில்லை , நெஞ்சு வரை சளி இருக்கு' என ஒரு மாணவி ஆசிரியரிடம் வந்து கூறுகிறாள்.' ரொம்ப முடியலன்னா வீட்டுக்கு ஃபோன் பண்ணவா? போறீங்களாம்மா?' எனக் கேட்கிறார் ஆசிரியர். 'வீட்ல திட்டுவாங்க மிஸ், போகலை' என நெஞ்சைப் பிடித்து, வெடித்து அழும் மாணவியை சமாதானம் செய்து கடைசி பெஞ்ச்சில் படுக்க வைக்கும் ஆசிரியரால், வேதனைதான் பட முடிகிறது.

இப்படித்தான் நம் பள்ளிக் குழந்தைகள் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்து பள்ளியையே வீடாக நினைத்து நம்மிடம் வளர்கின்றனர். பள்ளிக் கல்விக்கென குறைந்தது 12 வருடங்கள் , தற்போது மழலையர் கல்வியும் சேர்த்தால் 14 வருட காலங்கள். இந்த நீண்ட பருவம் நிறைவடைந்த பிறகு குழந்தைகள் எவ்வாறு கல்லூரி வாழ்க்கையை எதிர்கொள்கின்றனர் என்பதற்கும் நம்மிடையே பல உதாரணங்கள் இருக்கின்றன.

பள்ளிக்குப் பிறகே அவர்கள் உண்மையான வாழ்க்கையை எதிர்கொள்கின்றனர் என்பதுதான் யதார்த்தம். அந்த வாழ்க்கையை எதிர்கொள்ளத் தேவையான வாழ்வியல் திறன்களை பள்ளிக் கல்வியில் அவர்கள் கற்கும் பாடப் புத்தகங்கள் மட்டுமே தந்து விடுகின்றனவா என்பதை ஆராய்ந்தால் இல்லை என்பது 100% பதிலாக இருக்கும். தேர்வு மட்டுமே மையப் பொருளாகி வினாக்களுக்கு விடை எழுதும் மரபுதான் காலம் காலமாக நம் கல்வி முறையில் கோலோச்சுகிறது.

அந்த 10-ம் வகுப்புக் குழந்தைகள் மேற்சொன்ன அனைத்து விருப்பங்களுமே திறன்களின் அடிப்படையில் பிறந்த ஆசைகள்தானே. உண்மையாக அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் கல்வி முறையைத்தானே நம் குழந்தைகளுக்குத் தர வேண்டும். அவற்றைத்தானே நாம் பாடங்களுடன் இணைத்துக் கற்பிக்க வேண்டும்.

வகுப்பறைகளில் எத்தனையோ புதிய முறைகளை அறிமுகப்படுத்துகிறோம். புதிய தேர்வு முறைகள், கற்றல் திறன்கள் , இலவசப் பொருட்கள், அரசின் திட்டங்கள், கற்பித்தலில் புதுமை, ஸ்மார்ட் வகுப்பறை என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் வகுப்பறையில் குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கற்றுக் கொள்ளுகிறார்களா என்று நம்மை நாமே ஒரு முறையாவது கேட்டுப் பார்த்திருக்கிறோமா?

மகிழ்ச்சியான கற்றலுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தித் தருவது நமது தலையாயக் கடமை. அது குறித்து அதிகமான திட்டமிடலையும் செயல் திட்டத்தையும் வகுக்க வேண்டியது அவசியம். கற்றலுக்கு ஏதுவான சூழல் முதலில், ஆசிரியர்கள்- மாணவர்களுடனான உரையாடலில்தான் ஆரம்பிக்கின்றது.

வகுப்பறைகளில் ஆசிரியர்- மாணவர் இடையிலான அக்கறையான, அன்றாடம் உரையாடல்தான் அச்சத்தையும் ஐயத்தையும் போக்குகிறது. கற்றலில் ஆர்வத்தைத் தூண்டுகிறது. கற்றல் குறைபாடுகளைக் களைகிறது. மாணவர் விருப்பத்தைப் புரிந்து கொள்ளவும் அதற்கேற்ப அவர்களை வழிகாட்டி, எதிர்கால வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றவும் இந்த உரையாடல் வழி வகுக்கும். அதை எப்படிச் செய்வது?

- உரையாடுவோம்.

உமா மகேஸ்வரி, ஆசிரியர் - தொடர்புக்கு: uma2015scert@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x