Published : 04 Dec 2019 11:31 AM
Last Updated : 04 Dec 2019 11:31 AM

தேர்வுக்குத் தயாரா? - அதிக மதிப்பெண்களுக்கு அசத்தல் வழிமுறைகள் - பிளஸ் 1 தமிழ்

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

பிளஸ் 1 தமிழ் வினாத்தாள் 5 பகுதிகளாக அமைந்துள்ளது. பகுதி-1, 14 ஒரு மதிப்பெண்களுக்கான ‘பலவுள் தெரிக’ வகையிலான வினாக்களை கொண்டிருக்கிறது.

பகுதி-2, குறுவினா எனப்படும் 2 மதிப்பெண் வினாக்களுக்கானது. இப்பகுதி 3 பிரிவுகளாக உள்ளது. செய்யுள் வினாக்களுக்கான முதல் பிரிவில் கொடுக்கப்பட்ட 4 வினாக்களில் இருந்து 3-க்கு பதிலளிக்க வேண்டும்.

உரைநடைக்கான பிரிவு-2ல் மூன்றில் 2 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். இலக்கண மற்றும் மொழிப் பயிற்சிக்கான 3-வது பிரிவில் 9-ல் 7-க்கு பதிலளிக்க வேண்டும். இந்த வகையில் 3 பிரிவுகளையும் உள்ளடக்கிய 2 மதிப்பெண் பகுதியில் கொடுக்கப்பட்ட 16-ல் 12 வினாக்களுக்கு பதில் அளிப்போம்.

தலா 4 மதிப்பெண்ணுக்கான சிறுவினாக்கள், பகுதி-3ல் கேட்கப்படுகின்றன. இப்பகுதியும் 3 பிரிவுகளாக உள்ளது. செய்யுள் பகுதியின் 4லிருந்து 2 வினாக்கள், உரைநடையின் 4லிருந்து 2 வினாக்கள் மற்றும் மூன்றாம் பிரிவில் 4லிருந்து 3 வினாக்கள் என்பதாக அவை அமைந்துள்ளன. இந்த மூன்றாம் பிரிவில் பலவகையான மொழிப்பயிற்சி மற்றும் இலக்கண வினாக்கள் இடம்பெறும்.

- குறிப்புகளை வழங்கியவர் யூ.ஆசைமணி,

பிளஸ் 1 தமிழ் பாட நூலாசிரியர் மற்றும் முதுகலைத் தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, அல்லிநகரம், சிவகங்கை மாவட்டம்.

பிளஸ் 1 தமிழ்

# 1 மதிப்பெண்: ஒவ்வொரு இயலுக்குப் பின்னாலும் தலா 4 அல்லது 5 ஒரு மதிப்பெண் வினாக்கள் உள்ளன. இவ்வாறு 8 இயல்களில் மொத்தம் 40 வினாக்களுடன், இலக்கணப் பகுதியின் 20 வினாக்களையும் குறிவைத்து படித்தாலே இப்பகுதியின் 14-க்கு 10 மதிப்பெண்கள் உறுதி.
# 2 மதிப்பெண்: முதல் 4 இயல்களின் குறுவினாக்களை மட்டுமே (மொத்தம் 19) படித்தால், அதில் இருந்து எப்படியும் 4 வினாக்களுக்கு விடையளித்து விடலாம். இந்த வகையில் 8 மதிப்பெண்கள் உறுதி.
# 4 மதிப்பெண்: திருக்குறள் வினாவுக்கு (வி.எண்.39), 3, 5 இயல்களின் வாழ்வியல் தலைப்பின் கீழான திருக்குறள் குறித்த 5 அணிகளைப் படித்தாலே ஒரு 4 மதிப்பெண் உறுதி.

மனப்பாடப் பகுதி: பாடநூலின் 7 மனப்பாடப் பாடல்கள் மற்றும் 20 குறள்களை மட்டுமே மனப்பாடம் செய்து 4+2 என முழு மதிப்பெண்களை பெறலாம். இவ்வாறு 28 மதிப்பெண்கள் எடுப்பது எளிதாகும்.

இப்போதிருந்தே தயாராகலாம்

மேல்நிலை மாணவர்கள் பொதுவாக தமிழுக்கு போதிய நேரம் ஒதுக்குவதில்லை. அவர்களுக்கு உதவும் வகையில், இப்போதிருந்தே பொதுத் தேர்வுக்கு தயாராகும் வழிமுறைகளை பார்ப்போம். கிடைக்கும் சிறு ஓய்வுகள், பாட இடைவெளிகள், மற்ற பாடங்கள் படிக்கும்போது சிறு மாற்றத்துக்காகவும் தமிழை எடுத்துப் படிக்கலாம். தமிழ் இயல்பாகவே சோர்வகற்றும். குழுவாக அமர்ந்து ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு தயாராகலாம். ஆளுக்கொரு துணைப்பாடக் கதையை சொல்லிப் பழகலாம்.

ஒரு மதிப்பெண், மனப்பாடப் பாடல்கள், பிற தனித் தொகுப்புகள் ஆகியவற்றை கைவசம் வைத்திருந்து, கிடைக்கும் இடைவெளியில் எல்லாம் சிறு திருப்புதல் செய்யலாம். அதுபோன்றே 4, 6 மதிப்பெண் பகுதிகளை, ஒரு வினா-விடைக்கு ஒரு தாள் என ஒதுக்கி, அதற்குள் அடங்கும் வகையில் உட்தலைப்புகள், மேற்கோள்கள், முக்கிய கருத்துக்கள் ஆகியவற்றை மட்டுமே குறித்துவைத்து திருப்புதல் செய்யலாம். இந்த முறையில் பழகுவது உயர்கல்வி நிலைகளிலும் உதவும்.

தேர்வறை கவனக் குறிப்புகள்

வினாத்தாளைக் கவனமாக, ஒருமுறைக்கு இருமுறை படித்து விடையை உறுதி செய்த பின்னரே எழுதத் தொடங்க வேண்டும். மொழித்தாளில், முடிந்த அளவுக்கு வினாத்தாளின் வினா வரிசையிலே விடைத்தாளை நிரப்புவது நல்லது.

ஏதேனும் வினாவுக்கு விடை தெரியாது போனாலும், விடையை முற்றிலும் தவிர்க்காது வினா தொடர்பாகத் தாம் அறிந்த கருத்துக்களை சொந்த நடையில் எழுதி வைத்தால் முழு மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கலாம்.

நெடுவினாவுக்கு அதிகபட்சமாக ஒன்றரை பக்கங்களில் எழுதினால் போதுமானது. அதன் உள்தலைப்புகள் மறந்துவிட்டால் பத்தியில் உள்ள முக்கியச் சொற்களைக் கொண்டும் தலைப்பிடலாம்.

அதிக மதிப்பெண்களுக்கு

ஒரு மதிப்பெண் பகுதியின் 14-ல் 10 மதிப்பெண்களுக்கு ஏற்கனவே பார்த்துவிட்டோம். மிச்சமுள்ள 4 ஒரு மதிப்பெண் வினாக்களை பாடங்களில் உள்ளிருந்து, ‘நூல்வெளி, பெட்டிச் செய்தி, சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்திலுள்ள முக்கியச் செய்திகள், சான்றோர் சித்திரம்’ ஆகியவற்றின் மூலம் தயாராகலாம்.

2 மதிப்பெண் பகுதியில் 1, 2 ஆகிய பிரிவுகளின் 7 வினாக்களில் ஏதேனும் ஒரு வினா ‘உள்ளிருந்து’ கேட்கப்படலாம். பிரிவு 3: இவற்றுக்கு, அனைத்து இயல்களிலும் உள்ள மொழிப்பயிற்சி மற்றும் இலக்கண வினாக்களில் தயாராகவேண்டும். குறிப்பாக ‘புணர்ச்சி விதி, பகுபத உறுப்பிலக்கணம், மயங்கொலிச் சொற்கள், கலைச்சொற்கள், இலக்கணப் பகுதியின் பின்னுள்ள 2 மதிப்பெண் வினாக்கள்’ ஆகியவற்றை படித்தாக வேண்டும்.

4 மதிப்பெண் பகுதியின் முதல் 2 பிரிவுகளுக்கு, அனைத்து இயல்களின் 4 மதிப்பெண் வினாக்களையும் படித்தால் போதும். ‘இடம் சுட்டி பொருள் விளக்குக’ வினாவுக்கு கூடுதல் கவனம் தேவை. கட்டுரை, வரவேற்புரை, பத்திரிக்கைகளுக்கு கடிதம் எழுதுதல் ஆகியவற்றில் சிறப்பு கருத்துக்களை சேர்த்தல், வாக்கியத் தொடர் அமைத்து பயிற்சி பெறுதல் ஆகியவை முழு மதிப்பெண் பெற உதவும். ‘இடம்சுட்டிப் பொருள் விளக்குக’, ‘தமிழாக்கம் தருக’ ஆகியவற்றை தனியாக எழுதி, தொகுத்து வைத்துப் படிப்பது நல்லது.

நிச்சயம் கேட்கப்படும்

இவற்றில் முதல் வினா (வினா எண்.39), 3, 5-வது இயல்களின் ‘வாழ்வியல் பகுதியில் (திருக்குறளில்) பயின்று வரும் அணி’ குறித்தான வினாவாகவோ, நேரடியாக அணியைச் சுட்டியோ அமைந்திருக்கும். வி.எண்.40, இலக்கிய நயம் பாராட்டல்/ பத்தியிலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு விடை எழுதுதல் / வரவேற்புரை எழுதுதல் / கடிதம் எழுதுதல் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒன்றாகக் கேட்கப்படுகிறது.

இதில் ‘இலக்கிய நயம் பாராட்டல்’ கேட்கப்படவே வாய்ப்பு அதிகம். வி.எண் 41, பழமொழியை வாழ்க்கை நிகழ்வுடன் பொருத்தி எழுதுதல் அல்லது கவிதை எழுதுதல் இடம்பெறுகிறது. வி.எண்.42, தமிழாக்கம் / ஆங்கிலப் பழமொழியை தமிழில் எழுதுதல் ஆகியவை இடம்பெறுகின்றன.

பகுதி 4-ல் நெடுவினாக்கள் இடம்பெறுகின்றன. ‘அல்லது’ வகையிலான, செய்யுள், உரைநடை, துணைப்பாடம் என மூன்று 6 மதிப்பெண் வினாக்கள் இங்கு கேட்கப்படும். மனப்பாடப் பகுதியான பகுதி-5ல், செய்யுள் மற்றும் குறள் ஆகியவை 4+2 என 6 மதிப்பெண்களுக்கு உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x