Published : 04 Dec 2019 11:14 am

Updated : 04 Dec 2019 11:14 am

 

Published : 04 Dec 2019 11:14 AM
Last Updated : 04 Dec 2019 11:14 AM

ஆசிரியருக்கு அன்புடன்! - 9: கூட்டைப் பிய்த்துப் பறக்கும் பட்டாம்பூச்சி

with-love-for-the-author

மகாராஷ்டிராவில் கொங்கன் பகுதியில் இயற்கை எழில் மிகு கிராமம். ஜன்னலோரப் படுக்கை. ஜன்னலில் வழியும் இயற்கை. வயதான தாத்தாவைக் கவனித்துவிட்டுப் பள்ளிக்குக் கிளம்புகிறாள் சிறுமி நம்ருதா. தெருக்களில் குனிந்த தலை நிமிராத நடை. வழியில் சலீம் என்ற சிறுவன் அவளோடு பள்ளிக்கு இணைகிறான்.

நம்ருதா பத்தாம் வகுப்பு படிக்கிறாள். அடுத்த ஆண்டு கோலாப்பூரில் உள்ள இளையோர் கல்லூரியில் அவளைச் சேர்க்க போவதாக அவளின் மாமா சொல்லியிருக்கிறார். அது அவளுக்குப் பயத்தைத் தந்திருக்கிறது.


இயற்கையும், தனிமையும், சலீமும், சலீம் வீட்டுப் புறாக்களும், கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் தன்னையும் தவிர வேறு நட்பு வெளியிலும் பள்ளியிலும் நம்ருதாவுக்கு இல்லை. தோழிகள் அவளை விளையாட்டில் சேர்த்துக்கொள்வதும் இல்லை. தோலில் ஆங்காங்கே வெள்ளைத் தீற்றல்கள். வெண்புள்ளி (leucoderma) என்று சொல்லப்படும் தோல் நோயின் விளைவு அது. அதனாலேயே தனிமையைத் துணையாக்கி கொள்கிறாள் நம்ருதா.

பள்ளியில் தினந்தோறும் ஆசிரியர்கள் வருகிறார்கள், பாடங்களை நடத்துகிறார்கள். இடைவேளைகளில் பேச்சில் வகுப்பறை நிறைகிறது. பள்ளி முடிந்ததும் வீடு. வழியில் சில மாணவர்கள் நோயாளி என்று கேலி செய்வார்கள். “என் அப்பாவிடம் சொன்னால் இவர்களை அடித்தே கொன்னுடுவாரு” என்று சலீம் கோபம் கொள்ளுவான். எதுவும் வேண்டாம் என்று சொல்லித் தலை நிமிராமல் வீட்டுக்கு வந்துவிடுவாள் நம்ருதா.

மொழி என்றால் என்ன?

ஒருநாள் வகுப்பறைக்குள் புதிதாக நடுத்தர வயது மனிதர் ஒருவர் நுழைகிறார். “நான் உங்களது புதிய ஆசிரியர்” என்று சொல்லியபடியே சென்று அடைத்துக் கிடக்கும் ஜன்னல்களைத் திறக்கிறார். “ஒரு கேள்வி கேட்கிறேன். தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள். மொழி என்றால் என்ன?” என்று அவர் கேட்டது மாணவர்களுக்கு புரியவில்லை.
“சரி. இப்போது ஒரு சிறு விளையாட்டு. உனது டிபன் பாக்ஸில் என்ன இருக்கு?” - சப்பாத்தி சார். “உன்னிடம்?” -உப்புமா.

“அடடா...வித்தியாசமாக யாரேனும் மதிய உணவு கொண்டு வரவில்லையா?” சார் இவளிடம் கேக் இருக்கிறது என்று ஒரு குரல் எழுகிறது. “ஆகா, அதைக்கொடு”. டிபன் பாக்சை வாங்கி ஒரு கேக்கைக் கையில் எடுத்துக் கொள்கிறார்.

இப்போது நாம் மொழி தோன்றாத பழங்காலத்தில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். என்னிடம் கேக் இருக்கிறது. உங்களுக்கு கடுமையான பசி. கேக் வேண்டும் என்று எப்படிக் கேட்பீர்கள்? மெதுவாகச் சில கரங்கள் உயர்கின்றன. ஒரு மாணவி எழுந்து கையால் வயிறைத்தொட்டு, கேக்கைக் காட்டி, கொடுங்கள் என்று சைகையில் கேட்கிறாள்.

மகிழ்ச்சி. ஆனால், இதில் வார்த்தைகள் இல்லையே தவிர சைகை மொழி இருக்கிறது. அதுவும் இல்லாமல் எப்படி இதை வாங்குவீர்கள் என்று கேட்கிறார். ஒரு மாணவி எழுந்து வந்து படாரென்று அவரின் கையில் இருந்த கேக்கைப் பறித்துச் சாப்பிடத் தொடங்குகிறாள்.

சபாஷ், இப்படித்தானே செய்திருக்க முடியும்! ஒருவரிடமிருந்து பறிக்காமல் நாகரிகமாகக் கேட்கவும் எண்ணங்களை பகிரவும் உருவானதே மொழி. அதுவே நம்மை மனிதனாக ஆக்கியது என்று உரையாடத் தொடங்கும் அந்தப் புதிய ஆசிரியரின் பெயர் ஆனந்த்.

நம்பிக்கைத் தரும் சொற்கள்

மறுநாள் ஆசிரியர் ஆனந்தின் வகுப்பறைக்குள் தடைகள் உடைந்து புதிய காற்று நிறைகிறது. படிப்பது, எழுதுவதில் சிறந்தவளாக இருந்தாலும் யாருடனும் பேசாமல் நம்ருதா தனியாகவே இருப்பதை ஆசிரியர் கவனித்துக்கொண்டே இருக்கிறார். மாலையில் அவள் வீட்டுக்குச் சென்று தாத்தாவிடம் பேசுகிறார். “தனக்கு வந்திருக்கும் நோய் சாதாரணமானது என்று நம்ருதா உணர்ந்து கொண்டால் போதும். நன்றாக படிக்கிறாள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் என் வீட்டிற்கு அனுப்புங்கள். தினமும் மாலையில் மாணவிகளுக்கு இலவசமாக பாடம் சொல்லித்தருகிறேன்” என்கிறார்.

நம்ருதா ஆசிரியரின் வீட்டுக்குப் படிக்கச் செல்கிறாள். சலீமோடு சேர்ந்து ஆசிரியரும் அவளோடு பள்ளிக்கு செல்வது வழக்கமாகிறது. நிறைய பேசுகிறார். தானும் சிறு வயதில் மிகவும் பயந்த சுபாவமாக இருந்தது, மற்றவர்களைப்போல ஆக வேண்டும் என்று நினைத்தது, கல்வி, வாசிப்பு மூலம் பெற்ற நம்பிக்கை என்று நிறைய பேசுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்குள் தன்னம்பிக்கை தலைதூக்க அவளும் தலை நிமிர்ந்து நடக்கத் தொடங்குகிறாள்.

ஆசிரியர் நினைத்தால்...

ஒருநாள் பள்ளி முடிந்து நம்ருதா சலீமோடு வீடு திரும்பும் வழியில் வழக்கம் போல கிண்டல் செய்த இளைஞனின் அருகே சென்று அவனது சைக்கிளை எட்டி உதைக்கிறாள். துணிவோடு நடக்கிறாள். இயற்கையை ரசிக்கிறாள். வாசிக்கிறாள். படிப்பில் அதிகக் கவனம் செலுத்துகிறாள். வகுப்பறையில், மரத்தடியில் என்று ஆனந்த்
சாரின் பாடங்கள் தொடர்கின்றன. பட்டுப்புழு கூட்டுப்புழுவாகிப் பட்டாம் பூச்சியாகக் கூட்டைப் பிய்த்து சிறகடித்துப் பறக்கிறது.

கோலாப்பூரில் இளையோர் கல்லூரியில் 11-ம் வகுப்புப் படிக்கிறாள். அவள் விரும்பிய நாகரிக உடைகளை அணிகிறாள். நகரத்தில் தலைநிமிர்ந்து பயணிக்கிறாள். இன்றைய தலைமுறையைக் குறை சொல்வதை விட்டுவிட்டு அவர்களைப் பரிவோடு வழிநடத்துவதே ஆசிரியரின் கடமை என்பதை ‘Imago’ என்ற மராத்தி மொழிப்படம் அழுத்தமாக எடுத்துக்காட்டுகிறது.

பல்வேறு அழுத்தங்கள் இருந்தாலும் ஆசிரியர் நினைத்தால் வகுப்பறையின் கதவுகளை அல்லது ஜன்னல்களையாவது திறக்கலாம். வழக்கமான சூழல்களைச் சிறிதாவது உடைக்கலாம். பாடப் புத்தகத்தை தாண்டிச் சிறிது வாசிக்கலாம். கூட்டுப்புழுக்கள் பொறுமையாக இருந்தால் ஒருநாள் பட்டாம்பூச்சி ஆகலாம் என்பதை படத்தின் இறுதிப் பகுதி வார்த்தைகள் இன்றிக் காட்சி வழியாக நம் மனதை நிறைக்கிறது.

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்.


ஆசிரியருக்கு அன்புடன்பட்டாம்பூச்சிகூடுசொற்கள்ஆசிரியர்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x