Published : 04 Dec 2019 08:59 AM
Last Updated : 04 Dec 2019 08:59 AM

தேர்வுக்குத் தயாரா? - இயற்பியல், வேதியியல், உயிரியல் இனி நம் வசம்: பத்தாம் வகுப்பு அறிவியல்

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

தற்போது பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பாடங்கள், வினாத்தாள் மாதிரி என அனைத்தும் புதிதாக இருக்கும். குறிப்பாக 4 மற்றும் 7 மதிப்பெண் வினாக்களை, தங்களது 9-ம் வகுப்பு வரை இவர்கள் சந்தித்திருக்க மாட்டார்கள். எனவே வினாத்தாள் அமைப்பை நன்றாக புரிந்துகொள்வதும், முழுத் தேர்வுகளை பலமுறை எழுதிப் பார்ப்பதும், புதிய மாற்றங்களுக்குத் தயாராக உதவும்.

வினாத்தாள் அமைப்பு

பகுதி-1: ஒரு மதிப்பெண் பகுதியின் 12 வினாக்களில் 10 புத்தக வினாக்களாகவும், 2 வினாக்கள் படைப்பு சார்ந்தும் இடம்பெறுகின்றன.
பகுதி-2: இரு மதிப்பெண் பகுதியில் (வி.எண்.13-22) கொடுக்கப்பட்ட 10 வினாக்களில் இருந்து 7-க்கு பதிலளிக்க வேண்டும். இவற்றில் கட்டாய வினாவான வி.எண்.22, இயற்பியல் கணக்கீடு பகுதியிலிருந்து இடம்பெறுகிறது.
பகுதி-3: 4 மதிப்பெண் பகுதியில் (வி.எண். 23-32) 10-லிருந்து 7 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். கட்டாய வினாவான வி.எண்.32, வேதியியல் கணக்கீடுகளில் இருந்து கேட்கப்படும்.
பகுதி-4: 7 மதிப்பெண் பகுதியில் ‘அல்லது’ வகையிலான 3 வினாக்கள் (வி.எண்.33-35) உள்ளன. இந்த மூன்றும் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் இருந்து தலா ஒரு வினாவாக அமைந்திருக்கும். ஒவ்வொரு வினாவும் 2 அல்லது 3 தனி வினாக்களின் தொகுப்பாகவும் இடம்பெற்றிருக்கும்.

தேர்ச்சி நிச்சயம்

ஒரு மதிப்பெண் பகுதியின் புத்தக வினாக்கள் 10-க்கும் தயாராவது எளிது. 2 மதிப்பெண்களில், இயற்பியலின் முதல் 3 பாடங்களில் இருந்து 2 வினாக்களையும், வேதியியலின் 5 பாடங்களில் 7,8,9 ஆகிய தொகுதிகளில் இருந்து 2 வினாக்களையும், உயிரியலின் 11 பாடங்களில் 20,21,22 ஆகிய தொகுதிகளில் இருந்து 3 வினாக்களையும் எதிர்பார்க்கலாம்.

4 மதிப்பெண் பகுதிக்கு இயற்பியலுக்கு 3,4 பாடங்களிலிருந்து ஒரு வினாவையும், வேதியியலின் 7,8,9 தொகுதிகளில் இருந்து 2 வினாக்களையும், உயிரியலின் 15,18,19,21,22 தொகுதிகளில் இருந்து 3 வினாக்களையும் எதிர்பார்த்து தயாராகலாம். 7 மதிப்பெண் வினா என்பது உட்பிரிவுகளில் இதர மதிப்பெண் வினாக்களைக் கொண்டது என்பதால், இப்பகுதியையும் தவிர்க்காது விடையளித்துப் பழக வேண்டும். 2 மற்றும் 4 மதிப்பெண்களுக்காக ஏற்கனவே படித்ததிலிருந்தே குறைந்தது 12 மதிப்பெண்களை பெற்று விடலாம். இந்த வகையில் எளிமையாக 40 மதிப்பெண்ணுக்கு தயாராகலாம்.

நேர மேலாண்மை

வினாத்தாள் வாசிப்புக்கான நேரத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்வது அறிவியல் தேர்வின் நேர மேலாண்மைக்கு பெரிதும் உதவும். ஒரு மதிப்பெண் பகுதியின் தெரியாத வினாக்களில் நேரம் விரயமாவதை தவிர்க்க வேண்டும். ஒரு மதிப்பெண் பகுதிக்கு 15 நிமிடம், 2 மதிப்பெண் பகுதிக்கு 30, 4 மதிப்பெண்களுக்கு 50, 7 மதிப்பெண்களுக்கு 50 என நிமிடங்களில் அதிகபட்ச நேரத்தை பிரித்து ஒதுக்கலாம். மீதமுள்ள 35 நிமிடங்களில் குறைந்தது 20 நிமிடங்களை சரிபார்த்தலுக்கு ஒதுக்கலாம். சரிபார்த்தலில் கணக்கீடுகளுக்கு அதிக கவனம் தேவை.

படைப்பு வினாக்களில் கவனம்

ஒரு மதிப்பெண் பகுதி, கட்டாய வினா, படைப்பு சார்ந்த வினாக்கள் ஆகியவை மதிப்பெண் சரிவதற்கு காரணமாகின்றன. மொத்த மதிப்பெண் 75-ல், 20% வினாக்கள் படைப்பு சார்ந்து இடம்பெறலாம்.

இந்த வகையில் 60 மதிப்பெண் புத்தகத்திலிருந்தும், 15 மதிப்பெண்கள் படைப்பு சார்ந்தும் அமையும். ஒரு மதிப்பெண்ணின் 2 படைப்பு வினாக்களுக்கு, ‘மேலும் அறிந்துகொள்’, ‘உங்களுக்குத் தெரியுமா’ ஆகிய பகுதிகளில் தயாராகலாம். மேலும் பாடப்பொருளை நன்கு புரிந்த பிறகே படிப்பது நல்லது.

இதர வினாக்களிலும் தலா 1 படைப்பு வினா இடம்பெற உள்ளது. இது ‘சாய்ஸ்’ வினாக்கள் மத்தியில் கேட்கப்படுவதால், உறுதியாக விடை அறியாதவர்கள் அதனை சாய்ஸில் விடுவது நல்லது. இந்த வகையில் மொத்தம் 15 மதிப்பெண்களுக்கு (2+2+4+7) படைப்பு வினாக்களை எதிர்பார்க்கிறோம்.

அதிக மதிப்பெண்களுக்கு

# 2 மற்றும் 4 மதிப்பெண் பகுதிகளின் வினாக்கள் இயற்பியல், வேதியியல், உயிரியலில் இருந்து முறையே 4,2,4 என்பதாக அமைந்திருக்கும்.

இதுவே 1 மதிப்பெண் பகுதியின் வினாக்கள் முறையே 3,3,5 என்றும் மிச்சமுள்ள 1 வினா ‘காட்சித் தொடர்பு’ என்ற கடைசிப் பாடத்திலிருந்து கேட்கப்படும்.

# தினத்துக்கு குறைந்தது 2 கணக்கீடுகளில் பயிற்சி பெறுவது வினாவுக்கான கடினத் தன்மையை எளிதாக்கும். எழுதிப் பார்ப்பதில் உரிய பயிற்சி மற்றும் தவறுகளில் இருந்து பாடம் கற்பதும் அவசியம்.

மாணவர்கள் அனைவரும் தலா ஒரு படம் என வரைந்து வகுப்பின் உள் சுவற்றை அலங்கரிப்பது, படிக்கும் இடத்தில் அவற்றை பார்வையில் வைப்பது போன்றவை படங்கள், பாகங்களில் தவறுகளைத் தவிர்க்க உதவும்.

# பாடநூலின் வினாப்பகுதிகளில் தினம் ஒன்றாக பிரித்துப் படிப்பது நல்லது. நூற்றுக்கு நூறு வாங்க விரும்பும் மாணவர்கள் தினத்துக்கு 2 பக்கங்களையேனும் முழுமையாக வாசிக்கலாம்.

# 4 மற்றும் 7 மதிப்பெண்களுக்கு தயாராவதற்கு புத்தகத்திலுள்ள ‘உயர் சிந்தனை வினாக்களி’ல் கவனம் செலுத்த வேண்டும். இயற்பியல், வேதியியல் கணக்குகளுக்கு எழுதி தீர்த்துப் பழகுவது நல்லது.

தீர்க்கும் முன்னராக உரிய சூத்திரத்தை எழுதி அதனை கட்டமிட்டுக் காட்டுவதும் அவசியம். நிறைவாக விடையுடன் அலகு எழுதுவதும் முழு மதிப்பெண் தரும்.

# 7 மதிப்பெண் பகுதியில் விடையளிப்பது எளிதாக இருக்கும். ஆனால், முழு மதிப்பெண் தரக்கூடிய வினாக்களை தேர்வு செய்வதில் கவனம் தேவை.

உட்பிரிவு வினாக்களில் 2 அல்லது 3 வினாக்களும் விடை அறிந்திருப்பின் மட்டுமே அவற்றை தேர்வு செய்து விடையளிக்கலாம்.

மேலும் குறைவான நேரத்தில் பதிலளிப்பதற்கு உகந்ததாகவும் இந்தத் தேர்வு அமைய வேண்டும். பிழை குறித்த ஐயம் உள்ளவர்கள், விதிகள் தொடர்பான வினாக்களை தவிர்த்துவிட்டு, ‘பயன்கள்’, ‘உறுப்புக்களைப் பற்றிய விபரம்’ போன்ற வினாக்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம்.

- பாடக் குறிப்புகளை வழங்கியவர்

எஸ்.மாலதி,
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்),
அரசு மேல்நிலைப் பள்ளி, வீரகேரளம்புதூர்,
தென்காசி மாவட்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x