Last Updated : 04 Dec, 2019 08:33 AM

 

Published : 04 Dec 2019 08:33 AM
Last Updated : 04 Dec 2019 08:33 AM

விளையாட்டை தெரிந்து கொள்ளுங்கள் - கூடைப்பந்து

கனடா நாட்டில் பிறந்து 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் உடற்கல்வி ஆசிரியராக இருந்தவர் ஜேம்ஸ் நிஸ்மித். ஸ்பிரிங்பீல்ட் என்ற கல்லூரியில் பணியாற்றிய அவர், தன்னிடம் படிக்கும்மாணவர்கள் தினமும் விளையாட்டுகளில் ஈடுபட்டு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரது விருப்பத்துக்கு பனிக்காலங்கள் தடையாக இருந்தன.

பனிக்காலங்களின்போது வெளியில்கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதால், மாணவர்கள் விளையாடுவதற்கு மைதானத்துக்கு வராமல் இருந்தனர். இப்படியே இருந்தால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுமே என்று கவலைப்பட்டார் நிஸ்மித்.

அவர்கள் உள்ளரங்கிலேயே ஆடுவதற்கு ஏற்ற விளையாட்டு ஒன்றை கண்டுபிடிக்க விரும்பினார். ஒரு கூடையை எடுத்து அதன் அடிப்பாகத்தை வெட்டியவர், அதை ஸ்பிரிங்பீல்ட் கல்லூரியின் விடுதியில் உள்ள பால்கனியில் மாட்டினார். பின்னர் மாணவர்களிடம் அந்தக் கூடைக்குள் துல்லியமாக பந்தை நுழைக்குமாறு கூறியுள்ளார்.

அப்படி துல்லியமாக பந்தை போடுபவர்களுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. பின்னர் இந்த விளையாட்டை 2அணிகள் மோதும் ஆட்டமாக மாற்றியுள்ளார் நிஸ்மித் கூடவே இந்த விளையாட்டுக்காக 13 முக்கிய விதிகளையும் வகுத்தார். இதன்படி 1891-ம் ஆண்டில் ஸ்பிரிங்பீல்ட் கல்லூரியில் முதல் முறையாக கூடைப்பந்து விளையாடப்பட்டது.

கல்லூரியின் விடுதியில் தொடங்கியகூடைப்பந்து விளையாட்டு அதன்பின்னர் உலகம் முழுவதும் வேகமாகபரவியது. இதைத்தொடர்ந்து சர்வதேசகூடைப் பந்து கூட்டமைப்பான ஃபிபா(FIBA), 1932-ம் ஆண்டு ஜூன் 18-ம்தேதி தொடங்கப்பட்டது. கூடைப்பந்து விளையாட்டுக்கான விதிகளைஃபிபா அமைப்பு மேலும் செதுக்கியது.

28 மீட்டர் நீளம் மற்றும் 15 மீட்டர் அகலம் கொண்டதாக கூடைப்பந்து மைதானங்கள் விளங்குகின்றன. இதில் போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு அணியிலும் தலா 5 வீரர்கள் பங்கேற்பார்கள். இதைத்தவிர ஒவ்வொரு அணியும் மாற்று வீரர்களாக 7பேரை மைதானத்துக்கு வெளியில் வைத்திருக்கலாம்.

போட்டியின்போது கூடைக்கு அருகில் சென்று அதற்குள் பந்தைச் செலுத்தினால் 2 புள்ளிகளும், அரைவட்டத்துக்கு வெளியில் இருந்து கூடைக்குள் பந்தைச் செலுத்தினால் 3 புள்ளிகளும், ஃப்ரீ த்ரோ மூலம் பந்தை கூடைக்குள் செலுத்தினால் 1 புள்ளியும் வழங்கப்படும்.

1936-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டியில் கூடைப்பந்து போட்டிகள் நடக்கின்றன. இதில் அமெரிக்க அணி அதிக முறை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x