Published : 04 Dec 2019 07:44 AM
Last Updated : 04 Dec 2019 07:44 AM

ஆய்வக உதவியாளர், காவலர் உட்பட அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 6000 பணியிடத்தை நிரப்ப அரசு முடிவு

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இப்பள்ளிகளில் 48 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கல்வி கற்பிப்பதற்காக 2.3 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆய்வக உதவியாளர், தட்டச்சர், காவலர் உட்பட ஆசிரியரல்லாத காலிப் பணியிடங்களை நிரப்ப கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் தட்டச்சர், எழுத்தர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், காவலர், தோட்டப் பராமரிப்பாளர், துப்புரவாளர் உட்பட ஆசிரியர் அல்லாத பல்வேறு பணிகளில் 6 ஆயிரம் இடங்கள் வரை காலியாக உள்ளன. இவை நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருப்பதால் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது.

குறிப்பாக எழுத்துப் பணிகளை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் கற்பித்தல் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதேபோல், காவலர்கள் இல்லாததால் பள்ளி வளாகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.

சமூக விரோதிகளால் இரவு நேரங்களில் கட்டிடங்கள் மற்றும் குழாய்களை சேதப்படுத்துதல் போன்ற சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன. துப்புரவு பணிகளுக்கு உள்ளாட்சி அமைப்பின் ஊழியர்களைக் கொண்டும், சில பள்ளிகளில் தற்காலிக ஊழியர்களைக் கொண்டும் சமாளிக்கின்றனர்.

எனவே, இப்பணிகளுக்கு பணியாளர்களை நியமிக்கக் கோரி அரசிடம் நீண்ட காலமாக கோரிக்கைவைக்கப்பட்டது. நிதிச்சுமை காரணமாக தாமதமான நிலையில், தற்போது அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து அனைத்துப் பள்ளிகளிலும் ஏற்கெனவே உள்ள காலியிடங்கள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் பணியாளர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகள் நிறைவடைந்ததும் பணியாளர்கள் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x