Published : 03 Dec 2019 03:06 PM
Last Updated : 03 Dec 2019 03:06 PM

திறமைசாலி இளைஞர்கள் அரசியலுக்குத் தேவை: கேஜ்ரிவால் அழைப்பு

திறமைசாலி இளைஞர்கள் அரசியலுக்குக் கட்டாயம் வர வேண்டும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

குரு கோவிந்த் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசும்போது, ''அரசியலில் திறமை வாய்ந்த இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். மாணவர்களும் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்.

நாட்டுக்காக அனைத்தையும் கொடுக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்றால், உங்களை அரசியலில் இணைய அன்புடன் அழைக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் அர்விந்த் கேஜ்ரிவாலும் ஒருவர். ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் 'ஊழலுக்கு எதிரான இந்தியா' இயக்கம் தொடங்கப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரலில் லோக்பால் அமைப்பைக் கொண்டுவர வலியுறுத்தி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் சமூக சேவகர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

அவருடன் இணைந்து போராடிய அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கி டெல்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில் தற்போது டெல்லி முதல்வராக கேஜ்ரிவால் பணியாற்றி வருகிறார்.

ஐஐடி காரக்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த கேஜ்ரிவால், சிவில் சர்வீஸ் தேர்வெழுதி ஐஆர்எஸ் ஆகத் தேர்ச்சி பெற்றார். அப்பதவியை ராஜினாமா செய்து, கேஜ்ரிவால் அரசியலுக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x