Published : 03 Dec 2019 01:22 PM
Last Updated : 03 Dec 2019 01:22 PM

நீட் தேர்வு: விண்ணப்பிக்கும்போது கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்கள்

பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) அடுத்த ஆண்டு மே 3-ம் தேதி நடைபெறுகிறது.

நீட் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், எதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும், என்ன செய்யக்கூடாது, தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்த முழுமையான விவரங்கள் இதோ.

தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் ஓஎம்ஆர் முறையில் தேர்வு நடைபெற உள்ளது. மே 3, 2020-ல் மதியம் 2 மணி முதல் 5 மணிவரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். கருப்பு பால் பாயிண்ட் பேனா கொண்டு சரியான விடை உள்ள வட்டத்தை நிரப்ப வேண்டும். தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் மட்டும் தேர்வு நடைபெறும்.

அகில இந்திய அளவில் நடைபெறும் இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், மத்திய, மாநில அரசுகளின் இட ஒதுக்கீடுகள், தனியார் பல்கலைக்கழகங்களில் மருத்துவத்துக்கான சீட்டைப் பெறலாம்.

யார் எழுதலாம்?
12-ம் வகுப்பை முடித்தவர்களும் 2020-ல் 12-வது வகுப்புத் தேர்வை எழுத உள்ளவர்களும் நீட் தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர்.

வயது வரம்பு
17 வயது முதல் 25 வயது வரையிலான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது 31.12.2003 அன்றோ அதற்கு முன்னதாகவோ விண்ணப்பதாரர்கள் பிறந்திருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஓபிஎசி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் விதிவிலக்கு உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?
டிசம்பர் 2-ம் தேதி தொடங்கிய விண்ணப்பத் தேதி, டிசம்பர் 31-ம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

என்ன கட்டணம்?
பொதுப் பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1,500. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் க்ரீமி லேயர் அல்லாத ஓபிசி மாணவர்களும் ரூ.1,400-ஐச் செலுத்த வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்றுப் பாலினத்தவருக்கான கட்டணம் ரூ.800.

மார்ச் 27, 2020-ல் நீட் தேர்வு எழுதுவதற்கான அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியாகும்.

தேர்வு முறை
இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என்ற அடிப்படையில், இரண்டு பாடங்களில் இருந்தும் மொத்தம் 90 கேள்விகளுக்கு 360 மதிப்பெண்கள் வழங்கப்படும். உயிரியல் பாடத்தில் இருந்து கேட்கப்படும் 90 கேள்விகளுக்கு 360 மதிப்பெண்கள். ஆக மொத்தம் 180 கேள்விகளுக்கு 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

அதே நேரத்தில் ஒரு கேள்விக்கு ஒரு தவறான விடை அளிக்கும்பட்சத்தில், மொத்த மதிப்பெண்ணில் இருந்து 1 மதிப்பெண் கழிக்கப்படும்.

தமிழில் எழுதுவோர் கவனத்துக்கு

ஆங்கிலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கு ஆங்கிலத்தில் கேள்விக் குறிப்பேடு வழங்கப்படும். தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் எழுதுபவர்களுக்கு சம்பந்தப்பட்ட மொழியோடு, ஆங்கிலக் குறிப்பேடும் அளிக்கப்படும்.

மொழிபெயர்ப்புக் கேள்வியில் குழப்பம் இருந்தால், ஆங்கிலக் குறிப்பேட்டுக் கேள்வியே இறுதியானது. தமிழில் தேர்வெழுத விரும்புபவர்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் தேர்வு மையங்களில் மட்டுமே எழுத முடியும்.

மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே நாம் தேர்வெழுத விரும்பும் 4 நகரங்களைக் கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக நகரங்களின் பின்கோடுகளைச் சரியாகக் குறிப்பிட வேண்டும். இதில் குழப்பம் ஏற்பட்டாலோ, 4 நகரங்களைக் குறிப்பிடத் தவறும்போதோ, மற்ற பிற நகரங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்படும் என்று நீட் தேர்வை நடத்தும் என்டிஏ தெரிவித்துள்ளது.

இட ஒதுக்கீடு எப்படி?
தேசிய அளவிலான ஒதுக்கீட்டுக்கு 15% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 85% மாநில அளவிலான மருத்துவ இடங்களுக்கானது. 85 சதவீத மாநில ஒதுக்கீட்டில் 10% இடங்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கானவை. 15% தாழ்த்தப்பட்டோருக்கும் 7.5% பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல க்ரீமி லேயருக்குள் வராத ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

மருத்துவ கவுன்சில் விதிகளின்படி மாற்றுத் திறனாளிகளுக்கு 5% இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதற்கு அவர்கள் மாற்றுத் திறனாளி சான்றிதழைப் பெற வேண்டியதுஅவசியம். இவர்கள் தேர்வெழுதும்போது எழுதுபவர்/ வாசிப்பவர்/ உதவியாளரை முன் அனுமதி பெற்று உடன் வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு மணிநேரத்துக்கும் கூடுதல் 20 நிமிடங்கள் இவர்களுக்கு ஒதுக்கப்படும்.

https://ntaneet.nic.in/ என்ற தளத்தின் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பிறகு பின்வரும் அடையாள அட்டைகளில் ஒன்றை உள்ளீடாகக் கொடுக்க வேண்டும்

என்னென்ன அடையாள அட்டைகள் செல்லும்?
* ஆதார் எண் (கடைசி 4 எண்கள்)
* பள்ளிக் கல்வி வாரியத்தின் 12-ம் வகுப்புப் பதிவெண்
* வாக்காளர் அடையாள அட்டை எபிக் (EPIC) எண்
* குடும்ப அட்டை
* புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்கு அட்டை
* அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் (பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்றவை)

முக்கியக் குறிப்பு: பெயர், பிறந்த தேதி ஆகிய தகவல்களை பள்ளிக் கல்வி வாரியத்தில் இருப்பதை மட்டுமே கொடுக்கவேண்டும். மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகிய இரண்டும் மாணவர்களுடையதாகவோ அல்லது அவர்களின் பெற்றோருடையதாகவோ மட்டும் இருக்க வேண்டும்.

கீழ்க்கண்ட விவரங்கள் JPG/ JPEG வடிவத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு அனுப்பப்பட வேண்டும்.

1. சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் (10 kb to 200 kb)
2. போஸ்ட் கார்டு அளவிலான புகைப்படம் (50 kb - 300 kb)
3. மாணவரின் கையெழுத்து (4 kb - 30 kb)
4. இடது கை கட்டைவிரல் ரேகை (10 kb - 50 kb) இடது கைவிரல் ரேகை இல்லாதவர்கள் வலது கை கட்டைவிரல் ரேகையைப் பயன்படுத்த வேண்டும்.

என்னென்ன விதிமுறைகள்?
01.09.2019 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ எடுக்கப்பட்ட புகைப்படத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெள்ளைப் பின்னணியில், 80% முகம் தெரிவது போலவும் காதுகள் தெளிவாகத் தெரியும்படியும் புகைப்படம் இருக்க வேண்டும். புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி, படத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

தொடர்ந்து கண்ணாடி அணிபவருக்கு மட்டுமே, கண்ணாடியை அணிந்து புகைப்படமெடுக்க அனுமதியுண்டு. புகைப்படம் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். வேறு நபர்களின் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்யும்பட்சத்தில், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெள்ளைக் காகிதத்தில் கேப்பிடல் எழுத்துகளாக இல்லாமல், கருப்பு பேனா மூலம் கையெழுத்து போட வேண்டும். அதை ஸ்கேன் செய்து விண்ணப்பத்தில் பயன்படுத்த வேண்டும்.

அதேபோல இடது கட்டைவிரல் ரேகையையும் நீல மையால் நிரப்பி வெள்ளைக் காகிதத்தில் வைத்து, ஸ்கேன் செய்வது அவசியம்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சான்றிதழையும் 100 kb முதல் 400 kb என்ற அளவில் ஸ்கேன் செய்து பய்ன்படுத்த வேண்டும்.

முக்கியக் குறிப்பு: விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது முகவரி, பின்கோடு, மொபைல் எண், இ-மெயில் முகவரி சரியாக உள்ளதா என்பதை கவனத்துடன் சரிபார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வெற்றிகரமாக அனுப்பப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தின் பிரதியை (Confirmed Page) என்டிஏவுக்கு அனுப்ப வேண்டியதில்லை. எதிர்காலத் தேவைகளுக்காக பணம் கட்டியதற்கான ஆதாரத்துடன் 4 பிரதிகள் எடுத்துவைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

விண்ணப்பப் படிவத்தில் 12-ம் வகுப்பை எழுத உள்ளவர்கள் 01 என்ற எண்ணைத் தேர்வு செய்யவேண்டும். மற்றவர்கள் 02 - 07 வரையிலான எண்ணைத் தேர்வு செய்யலாம்.

தமிழகத்தில் தேர்வு நடைபெறும் மையங்கள்

* சென்னை 4101
* கோயம்புத்தூர் 4102
* கடலூர் 4103
* காஞ்சிபுரம் 4104
* கரூர் 4105
* மதுரை 4106
* நாகர்கோவில் 4107
* நாமக்கல் 4108
* சேலம் 4109
* தஞ்சாவூர் 4110
* திருவள்ளூர் 4111
* திருச்சி 4112
* திருநெல்வேலி 4113
* வேலூர் 4114

கடைசியாக விண்ணப்பப் படிவத்தில் சரிபார்க்க வேண்டிய தகவல்கள்
* வசிக்கும் நாடு (Nationality)
* பாலினம்
* நிரந்தர முகவரி
* அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை (பாஸ்போர்ட் எண் / ரேஷன் கார்டு எண் / வங்கிக் கணக்கு எண்/ வாக்காளர் அட்டை (EPIC எண்) / ஆதார் எண்)
* பிறந்த இடம்
* தந்தை / தாய்/ பாதுகாவலரின் தொழில்
* தந்தை / தாய்/ பாதுகாவலரின் கல்வித் தகுதி
* தந்தை / தாய்/ பாதுகாவலரின் மொத்த ஆண்டு வருமானம்
* கேள்வித் தாளின் மொழி
* பன்னிரண்டாம் வகுப்பு / அதற்கு சமமான தேர்ச்சி / 12-ம் வகுப்பு தேர்வெழுதப் போகிறீர்களா?
* பத்தாம் வகுப்பு தேர்ச்சி/ அதற்கு சமமான மதிப்பெண்கள் விவரம்
* 10, 11, 12-ம் வகுப்பு படித்த இடம்
* மதம்
* சிறுபான்மை இனமா?
* மாற்றுத்திறனாளியா?
* 12-ம் வகுப்பு முடித்தது/ எழுதப்போகும் கல்வி நிறுவனம்
* படிப்பது (கிராமம்/ நகரம்)
* நீட் தேர்வுக்குத் தயாரான முறை
* விண்ணப்பதாரர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் / எந்த மாநிலத்தில் தேர்வெழுத விரும்புகிறார்?
* தேர்வுக் குறியீடு
* பள்ளிக் கல்வி வாரியம்
* எழுத விரும்பும் தேர்வு மையங்கள் / நகரங்கள்

பணம் செலுத்துவது எப்படி?
டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு மூலமாகவோ நெட் பேங்கிங் அல்லது யூபிஐ மூலமாகவோ விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். அதனுடன் 18% ஜிஎஸ்டி கட்டணமும் உண்டு.

பணம் கட்டி முடித்த பிறகு உறுதிப்படுத்தப்பட்ட பக்கம் (Confirmed page) தோன்றும். அது தோன்றியபிறகே முழுமையாக விண்ணப்பித்ததாக அர்த்தம்.

தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்லத் தடை செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன?
* காகிதங்கள், ஜாமெட்ரி பாக்ஸ், பவுச், கால்குலேட்டர், பேனா, ஸ்கேல், ரைட்டிங் பேட், அழிப்பான், பென் டிரைவ், Log டேபிள்.
* மொபைல் போன், ப்ளூடூத், இயர் போன், மைக்ரோபோன், பேஜர்.
* பெல்ட், தொப்பி, வாட்ச், பர்ஸ், கேமரா, பிரேஸ்லெட்.
* நகைகள், உலோக ஆபரணங்கள்.
* உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்.

தேர்வெழுதுவோர் என்ன உடைகளை அணியவேண்டும்?
* நீளமான கைகளைக் கொண்ட ஆடைகளுக்கு அனுமதியில்லை. கலாச்சார உடை அணிபவர்கள் 1 மணி நேரம் முன்பே தேர்வு மையத்துக்கு வந்து விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.
* உயரம் குறைவான செருப்புகளை மட்டுமே அணிய வேண்டும். ஷூக்களுக்கு அனுமதி இல்லை.

தேர்வு மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நேர ஒழுங்கு


தேர்வு நடைபெறும் நாள்
மே 3, 2020 (ஞாயிற்றுக்கிழமை)
கால அளவு 02- 05 pm (3 மணி நேரம்)
தேர்வு மையத்துக்குள் செல்ல வேண்டிய நேரம் 01.30-க்குள்*
தேர்வு மையத்துக்குச் சென்று உட்கார்வது 01.15-ல் இருந்து
அட்மிட் கார்டு பரிசோதனை 1.30 - 1.45 வரை
விடைத் தாள் வழங்கல் 1.45
விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்தல் 1.50
தேர்வு தொடக்கம் 02.00
தேர்வு முடிவு 05.00


*01.30-க்கு மேல் வருபவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வு முடிவுகள் ஒரு மாதத்துக்குப் பிறகு ஜூன் 4-ம் தேதி வெளியாகும்.

எஸ்சி/எஸ்டி சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் ஆகியவை நீட் விளக்கக் குறிப்பேட்டில் அளிக்கப்பட்டுள்ளன. அதைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழை தமிழகத்தில் சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) மட்டுமே வாங்க முடியும். தேர்வெழுத/ வாசித்துக் காட்ட உதவியாளர்கள் தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் அதற்கான படிவத்தையும் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

தேர்வெழுதும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள். உயரப் பறந்து சிகரம் தொடுங்கள்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x