Published : 03 Dec 2019 08:08 AM
Last Updated : 03 Dec 2019 08:08 AM

செய்திகள் சில வரிகளில்: இந்தியாவில் 4 ஆண்டுகளில் 750 புலிகள் அதிகரிப்பு

இந்திய ரயில்வே இயக்க விகிதம் சரிவு: தணிக்கை அறிக்கை

புதுடெல்லி

இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாள ரின் ரயில்வே துறை சார்ந்த தணிக்கை அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2017-18 -ம் ஆண்டில் இந்திய ரயில்வேயின் இயக்க விகிதம் 98.44% சரிவடைந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

வருவாய்க்கு எதிரான செலவினங்களின் அளவே சரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே ரூ.100 வருமானமாக பெறுவதற்கு ரூ.98.44 செலவு செய்ய செய்ய வேண்டியுள்ளது.

இந்தியாவில் 4 ஆண்டுகளில் 750 புலிகள் அதிகரிப்பு

புதுடெல்லி

மாநிலங்களவையில் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:

இந்தியாவில் உள்ள பல்வேறு வனப்பகுதி, உயிரியல் பூங்காவில் தற்போது 2,976 புலிகள் உள்ளன. புலிகளின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 750 அதிகரித்துள்ளது. சிங்கம், புலி, யானை மற்றும் காண்டாமிருகம் போன்ற மிருகங்கள் இந்தியாவின் சொத்துக்கள். ஏதேனும் மிருகங்கள் இறப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்தால், சிறப்பு விசாரணை நடத்தப்படுகிறது.

அழிந்து வரும் மொழியை வளர்க்க புதிய திட்டம்: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: அழிந்து வரும் மொழிகளை மேம்படுத்துவதற்காக புதிய திட்டம் மத்திய, மாநில பல்கலைக்கழகங்களில் செயல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளிக்கையில், “அழிந்து வரும் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மொழிகளை பாதுகாக்கவும், அதை மேம்படுத்தவும் பல்கலைக்கழக மானியக்
குழுவின்(யுஜிசி) நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

அந்த குழுவின் பரிந்துரையின்படி, மத்திய, மாநில பல்கலைக்கழகங்களின் புதிய திட்டம் செயல்படுத்தவுள்ளது. அழியும் நிலையில் உள்ள மொழிகள் அடையாளம் காணப்பட்டு, பல்கலைக்கழகங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. தனித்துவம் வாய்ந்த வடகிழக்கு மொழிகள், பழங்குடியின் மொழிகள், எண் மற்றும் கடலோர மொழிகளை அழியவிடாமல் செய்யும் தத்துவார்த்த வேலை நடந்து வருகிறது” என்றார்.

சுவீடன் அரச தம்பதியினர் 5 நாள் பயணமாக இந்தியா வருகை

புதுடெல்லி: சுவீடன் மன்னர் கார்ல் 16-ம் கஸ்டாசுப், அரசி சில்வியா ஆகியோர் இந்தியாவில் 5 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று காலை டெல்லி வந்தனர். குடியரசுத் தலைவர்மாளிகையில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் இரு நாட்டு பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு ஹைதராபாத் இல்லத்துக்கு வந்த அரச தம்பதியரை பிரதமர் மோடி வரவேற்றார். இதையடுத்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் அரச தம்பதியர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுவீடன் மன்னருடன் அந்நாட்டு உயர்நிலை வர்த்தக குழு இந்தியா வந்துள்ளது. மன்னரின் இந்தப் பயணத்தில் இந்தியா – சுவீடன் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x