Published : 03 Dec 2019 07:37 AM
Last Updated : 03 Dec 2019 07:37 AM

கடற்படையின் முதல் பெண் விமானி துணைப் படைத் தலைவராக ஷிவாங்கி பொறுப்பேற்பு

நவீன உலகத்தில் ஆண்களுக்கு நாங்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்று பெண்கள் பலத் துறைகளில் சாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டிலே முதல்முறையாக கடற்படையின் விமானியாக ஷிவாங்கி என்ற பெண் பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார்.

பீகார் மாநிலம் முசார்பூரை சேர்ந்தவர் ஷிவாங்கி. இவர் கடந்த ஆண்டு இந்திய கடற்படையில் முதல் பெண் விமானியாகச் சேர்ந்தார். இதனையடுத்து, இந்திய கடற்படை அகாடமிக்கு ஜூன் மாதம் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், பயிற்சிகள் முடிந்து ஷிவாங்கி, துணைப்படை தலைவராக கடற்படையின் முதல் விமானியாக கொச்சியில் உள்ள கடற்படைத் தளத்தில் அதிகாரப்பூர்வாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளிலேயே கடற்படையின் டோர்னியர் என்ற கண்காணிப்பு விமானத்தை இயக்கி அசத்தினார். விமான போக்குவரத்துத் துறையில் பல அதிகாரிகள் இருந்தபோதும், முதல் பெண் விமானி ஷிவாங்கிதான். வரும் 4-ம் தேதி கடற்படை தின விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் கடற்படையின் முதல் பெண் விமானி ஷிவாங்கி பொறுப்பேற்றுக் கொண்டது சிறப்பாக அமைந்துள்ளது என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஷிவாங்கி கூறுகையில், “இந்த நாளுக்காகத்தான் நீண்டகாலமாக காத்திருந்தேன். என்னுடைய ஆசை தற்போது நிறைவேறிவிட்டது. மேலும், 3 கட்ட பயிற்சியை முடிக்க ஆவலுடன் உள்ளேன்” என்றார்.

ஷிவாங்கியின் சாதனை பயணம், நாட்டில் உள்ள பெண்களுக்கு முன்னுதாரணமாக நிச்சயம் அமையும். கடற்படை விமானியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஷிவாங்கிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x