Last Updated : 02 Dec, 2019 11:50 AM

 

Published : 02 Dec 2019 11:50 AM
Last Updated : 02 Dec 2019 11:50 AM

12 வயதில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதும் அசாம் சிறுவன்

அசாம்

அசாமின் சுராசந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் ஐசக் பாலலுங்கான் வைஃபே விரைவில் 10-ம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளார்.

குடும்பத்தின் மூத்த மகனான ஐசக், அசாமில் உள்ள மவுண்ட் ஆலிவ் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தார். அவரின் தந்தை கெங்கோலியன், சிறுவன் ஐசக்கை 10-ம் வகுப்புத் தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என்று அசாம் கல்வித்துறையிடம் கடந்த ஆண்டே வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனால் இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில், ஐசக்கின் ஐக்யூ மற்றும் உளவியல் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டார். ரிம்ஸ் மருத்துவ உளவியல் துறை நடத்திய சோதனையில், ஐசக்கின் ஐக்யூ 141 ஆக இருந்தது. இது அதீத அறிவுக்கூர்மை படைத்ததற்கான சான்றாகும்.

அதேபோல ஐசக்கின் வயதுக்குத் தகுந்த அறிவும் சோதிக்கப்பட்டது. அப்போது அவரின் உளவியல் வயது 17 ஆண்டுகள் 5 மாதங்களாக இருந்தது. இதைத் தொடர்ந்து அவரின் நிஜ வயதிலேயே 10-ம் வகுப்புத் தேர்வெழுத ஐசக்குக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரின் தந்தை கெங்கோலியன் கூறும்போது, ''எனது மகனுக்கு இந்த வாய்ப்பை அளித்த கல்வித் துறைக்கு நன்றியை உரித்தாக்குகிறேன். இந்த வாய்ப்பு இனி வரும் தலைமுறையினருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும்'' என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக சிறுவன் ஐசக், ''மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு விஞ்ஞானி ஐசக் நியூட்டனை மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு உத்வேகம் அளிப்பவர். அவரின் பெயர் எனக்கும் இருப்பதால் கூடுதல் மகிழ்ச்சி'' என்கிறார்.

அசாம் வரலாற்றில் 12 வயது சிறுவன் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதுவது இதுவே முதல்முறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x