Published : 02 Dec 2019 10:31 AM
Last Updated : 02 Dec 2019 10:31 AM

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் உணவு உண்பதை படமெடுத்து அனுப்ப உத்தரவு

கோப்புப்படம்

சென்னை 

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய அவர்கள் உண்ணும்போது புகைப்படம் எடுத்து அனுப்புமாறு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களின் மூலம், 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துணவு, சுகாதாரம், முன்பருவ கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு தினமும் தக்காளி சாதம், கலவை சாதம், பருப்பு சாதம் மற்றும் வேகவைத்த முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை சத்து மாவும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் முறையாக சென்று சேர்வதில்லை என்று பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய, அவர்கள் உணவு உண்ணும் போது புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில்..

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது: குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யவே அவர்கள் சாப்பிடும்போது புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்பில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்களுக்கு அனுப்பும்படி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், முட்டை மற்றும் உணவுகள் முழுமையாக குழந்தைகள் சாப்பிடுவதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x