Last Updated : 02 Dec, 2019 09:34 AM

 

Published : 02 Dec 2019 09:34 AM
Last Updated : 02 Dec 2019 09:34 AM

இந்திய கிரிக்கெட் வரலாறு: ஸ்பின்னர்களின் சகாப்தம் தொடங்கியது

இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, தான் எதிர்கொண்ட முதல் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 5-0 என்ற கணக்கில் இழந்தார் பட்டோடி. ஆனால் அதன் பிறகு சுதாரித்துக் கொண்டவர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை டிரா செய்தார். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் தன் பேட்டிங் திறமையால் பட்டோடி வெல்ல, அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்தது.

இந்திய அணியின் கேப்ட னாக பட்டோடி இருந்த காலத்தில் தான் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் தொடங்கியது.

பகவத் சந்திரசேகர், பிஷன் சிங் பேடி, வெங்கட்ராகவன் என்று இந்த காலகட்டத்தில் வரிசையாக சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் அறிமுகமானார்கள். இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை வெல்வதில் சந்திரசேகர் முக்கிய பங்கு வகித்தார். மற்ற அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களைப் பார்த்து பயந்ததுபோல், இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களைப் பார்த்து பேட்ஸ்மேன்கள் பயப்படத் தொடங்கினார்கள்.

டெஸ்ட் போட்டிகளில் பொதுவாக பிரசன்னாவுக்கும், சந்திரசேகருக்கும் அதிக வாய்ப்புகளைக் கொடுத்துவந்தார் பட்டோடி.

வெங்கட்ராகவனுக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் துவண்டு போகாத வெங்கட்ராகவன், தனக்கும்
ஒரு நாள் வரும் என்று காத்திருந்தார்.

நியூஸிலாந்துக்கு எதிராக டெல்லியில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு வெங்கட்ராகவனுக்கு கிடைத்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களையும் வீழ்த்தி தனது சக்தியை நிரூபித்தார் வெங்கட்ராகவன். இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற அவர் முக்கிய
காரணமாக இருந்தார். 1968-ல் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்திய துணைக்கண்டத்துக்கு வெளியே நமது அணிக்கு கிடைத்த முதலாவது தொடர் வெற்றி இது.
பேடியும், பிரசன்னாவும் இந்த டெஸ்ட் தொடரில் மாறி மாறி விக்கெட்களை அள்ளினர். அவர்கள் இருவரும் பந்துவீச்சில் கலக்க,
இந்தியாவின் புதுமுகமான அஜித் வடேகர் பேட்டிங்கில் வித்தை காட்டினார். இதன்மூலம் இந்திய அணியின் துணைக் கேப்டனாகவும் அவர் உருவெடுத்தார்.

சுழற்பந்து வீச்சாளர்களின் வருகையால் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி தலையெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் பேட்டிங்கிலும் ஒரு புதிய நாயகன் உருவெடுத்தார். அவர்தான் சுனில் கவாஸ்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x