Published : 02 Dec 2019 07:57 AM
Last Updated : 02 Dec 2019 07:57 AM

நிலநடுக்க எச்சரிக்கைக்கு ஆழ்கடல் கேபிள்களை பயன்படுத்தலாம்

நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னதாக அதை கண்டறியப் பல தொழில்நுட்பங்கள் சமீபகாலமாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடலடியில் தேசங்கள் கடந்து விரிவுபடுத்தப்பட்டிருக்கும் தொலைத்தொடர்பு கேபிள்களை நிலநடுக்க எச்சரிக்கை ஏற்படுத்தும் சாதனமாக பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்மொழிந்துள்ளனர். கடலோர நகரங்களில் இந்தத் திட்டம் நிச்சயம் பலன் தரும் என்கிறார்கள்.

கடலடியில் 20 கி.மீ. நீளம் உள்ள கண்ணாடி தொலை வடத்தைக் கொண்டு இந்த சோதனையானது நடத்தப்பட்டது. அப்போது, கடலோர பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்கள் செய்யக்கூடிய பணியை ஆழ்கடலில் உள்ள தொலைத்தொடர்பு கேபிள்களால் செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு முடிவு‘சயின்ஸ்’ ஆய்விதழில் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 3.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஆழ்கடல் கேபிள்களின் மூலம் பதிவாயின. கடல் அடியில் பொருத்தப்பட்டிருக்கும் கேபிள்களில் லேசர் ஒளியைப் பாய்ச்சி, நிலநடுக்கத்தால் அது எவ்வாறு கேபிள் கம்பிக்குள்ளேயே சிதறுகிறது என்பதை கணக்கிட்டனர்.

ஒவ்வொரு 2 மீட்டர்வரை அந்த கேபிளுக்குள் ஒளி சிதறும் விதத்தைஅளந்தனர். இப்படியாக 20 கீ.மீ. நீளம் கொண்ட கேபிள் கண்காணிக்கப்பட்டது.

நிலநடுக்க எச்சரிக்கை நடவடிக்கைகளில் இதுவரை கோட்டை விட்டதை இந்த தொழில்நுட்பத்தின் வழியாக சரி செய்துவிட முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதற்கு முன்பு, நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி தொலை வடங்கள் மட்டுமே நிலநடுக்கத்தைக் கண்காணிக்க பயன்படுத்தப்பட்டன. இவற்றில் ஒலி அமைப்பில் ஏற்படும் இடைஞ்சலை உணரும் தொழில்நுட்பம் செலுத்தப்பட்டது. ஆனால், தற்போது நடத்தப்பட்டிருக்கும் ஆராய்ச்சியின் மூலம் கடலடியிலும் உள்ள கண்ணாடி தொலை வடங்களை கொண்டு நிலநடுக்கம் ஏற்படுவதை கணிக்கமுடியும். குறிப்பாக கடலோர பகுதிகளில் நிலநடுக்க கண்காணிப்பு நிலையங்கள் குறைவாக இருப்பதால் இந்த தொழில்நுட்பம் கைகொடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா ரைஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோனதான் அஜோ பிராங்கிளின் இது குறித்துக் கூறுகையில், “ஒவ்வொரு முறையும் கடலடியில் ஏற்படும் நில அதிர்வுகளை துல்லியமாக கணக்கிட முடியாமல் போவதினால்தான் மிக மோசமான நிலநடுக்கத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியாமல் போய்விடுகிறது. இந்நிலையில் கடலடியில் செல்லும் கேபிள்களை கொண்டு நிலநடுக்கத்துக்கான எச்சரிக்கை விடுக்க முடியும் என்பது நிலநடுக்கவியலில் (சீஸ்மாலஜி) மிக முக்கியமான முன்னேற்றமாகும்” என்றார்.- பிடிஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x