Published : 30 Nov 2019 12:43 PM
Last Updated : 30 Nov 2019 12:43 PM

குட்டிக் கதை 15: மனமிருந்தால் மார்க்கமுண்டு!

அன்று கவிதாவின் அம்மாவிற்கு திடீரென்று உடல் நிலை சரியில்லை. மாதக்கடைசி என்பதால் கவிதாவின் அப்பாவிடமும் பணம் பற்றாக்குறையாக இருந்தது.

“கவிதா உன்கிட்ட அப்பப்போ கொடுத்த பணத்தை உண்டியலில் சேர்த்து வைத்து இருக்கியே, அதை எடுத்துட்டு வா!”

“அப்பா, அது வந்து… உண்டியலில் பணம் இல்லை”

“என்ன? பணம் இல்லையா, இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல இருக்குமே, அவ்வளவு பணத்தை என்ன செய்தாய்?”

“அதெல்லாம் அப்பறம் சொல்றேன், இப்போ உங்க நண்பர்கள் யார்கிட்டயாவது போய் பணம் வாங்கிட்டு வாங்கப்பா”

“சரி, நான் போய் யார் கிட்டயாவது வாங்கிட்டு வரேன், அதுவரை அம்மாவைப் பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு அப்பா சென்றார்.

கவிதாவின் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை என்ற கவலை ஒருபக்கம் இருந்த போதிலும், கவிதாவின் உண்டியலில் இருந்த பணம் என்ன ஆயிற்று என்ற குழப்பமும் தொடர்ந்தது.

அப்பா, நண்பர் ஒருவரிடம் கடனாகப் பணம் பெற்று வந்தார். கவிதாவின் அம்மாவை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். இரண்டு, மூன்று நாட்களில் அம்மாவுக்கு உடல் நிலை சரியாகி விட்டது.

அன்று கவிதாவின் அப்பா அலுவலகத்தில் இருக்கும்போது கவிதாவின் பள்ளியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

“சார், நீங்க கவிதாவின் அப்பாதானே?”

“ஆமாம், கவிதாவிற்கு என்ன ஆச்சு?”

“பதற்றப்படாதீங்க சார், கவிதா நல்லாதான் இருக்கா, நாளைக்கு மதியம் ரெண்டு மணிக்கு நீங்களும் உங்க மனைவியும் எங்க பள்ளிக்கு வரணும் சார், பள்ளியில ஒரு பாராட்டு விழா இருக்கு, அதனால கண்டிப்பா வந்துடுங்க”

“சரி வர்றோம் மேடம்”

மாலை வீட்டுக்கு வந்தவுடன் “என்ன கவிதா, நாளைக்கு உங்க பள்ளியில ஏதோ பாராட்டு விழாவாமே, யாருக்கு பாராட்டு விழா?” என்று கேட்டார் அப்பா.

“தெரிலயேப்பா, ஏதோ விழா இருக்குன்னு மட்டும் தெரியும், மத்த விவரம் எதுவும் தெரியலை”

“சரி மா, நாளைக்கு மதியம் கம்பெனியில லீவ் சொல்லிட்டு அம்மாவையும் கூட்டிக்கிட்டு வர்றேன்”

மறுநாள் மதியம் சரியாக இரண்டு மணிக்கு விழா தொடங்கியது.

“இன்றைய விழாவில் பாராட்டு பெறுபவர் யார் தெரியுமா? பத்தாம் வகுப்பில் படிக்கும் கவிதா” என்றவுடன் பலத்த கரகோஷம் கேட்டது. கவிதாவின் பெற்றோருக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது.

“அப்படி கவிதா என்னதான் செய்தான்னு உங்க எல்லோருக்கும் ஆச்சரியமா இருக்கும், கவிதாவுகே இந்த விஷயம் தெரியாது, என்ன கவிதா, நீ என்ன செய்திருக்கன்னு உனக்குத் தெரியுமா?”

கவிதாவிற்கு ஒரே குழப்பம். “பரிசு வாங்கற அளவுக்கு நான் என்ன செய்தேன்னு எனக்கு தெரியலங்க மேடம்”

“நமது நாட்டு எல்லையில் காவல் காக்கும் படை வீரர், கொடி நாள் நிதிக்காக உங்களால் முடிந்த நிதியைக் கொடுங்கன்னு சொன்னோம். எல்லோரும் 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் என்று வழங்கினார்கள். ஆனால் கவிதா மட்டும் 2,500 ரூபாய் வழங்கினாள். குடும்பத்தை மறந்து நாட்டுக்காகத் தியாக வாழ்க்கை வாழும் படை வீரர்களுக்காக தனது சேமிப்பு முழுவதையும் வழங்கியமைக்காக இந்தப் பாராட்டு விழா. மேலும் இப்பள்ளியின் பழைய மாணவர்கள் கவிதாவைப் பாராட்டி ரூ.2,500 வழங்கி உள்ளனர்”

இந்த சின்ன வயசில உதவி செய்யற மனசு இருக்கறது எவ்வளவு பெரிய விஷயம்னு எல்லோரும் பாராட்டினர். கவிதாவின் பெற்றோருக்கும் அளவு கடந்த சந்தோஷம்.

நீதி: உதவி செய்யும் மனம் இருந்தால் அனைத்துமே சாத்தியம்தான்.

- கலாவல்லி அருள், தலைமை ஆசிரியர், ஊத்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி.

முந்தைய அத்தியாயம்: குட்டிக் கதை 14: பெற்றோர் சண்டை- பிள்ளைக்குக் கேடு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x