Published : 30 Nov 2019 11:18 AM
Last Updated : 30 Nov 2019 11:18 AM

ஆராய்ச்சிகளில் இந்தியாவை விஐடி பல்கலைக்கழகம் முன்னெடுத்து செல்லும்: வேதியியல் பிரிவில் நோபல் பரிசு பெற்ற அடா இயோனத் பாராட்டு 

ஆராய்ச்சிகளில் இந்தியாவை விஐடி பல்கலைக்கழகம் முன்னெடுத்துச் செல்லும் என நோபல் பரிசு பெற்ற வேதியியல் ஆராய்ச்சியாளர் அடா இயோனத் தெரிவித்தார்.

விஐடி பல்கலைக் கழகத்தில் நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் சார்பில் நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் நேற்று தொடங்கியது.

இந்த கருத்தரங்கை இஸ்ரேலில் உள்ள விஸ்மேன் அறிவியல் மையத்தின் இயக்குனரும், வேதியியல் பிரிவில் நோபல் பரிசு பெற்ற அடா இயோனத் தொடங்கி வைத்துப் பேசும்போது, ‘‘மாணவ, மாணவிகள் ஆராய்ச்சியில் பெருமளவில் ஈடுபட வேண்டும். குறிப்பாக, பெண்கள் அதிகளவில் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். விஐடியில் உள்ள ஆராய்ச்சி மையங்களில் பல்வேறு வகையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை வைத்துப் பார்க்கும் போது இந்திய அளவில் விஐடியில் பெரும் அளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆராய்ச்சியில் இந்தியாவை விஐடி முன்னெடுத்து செல்லும். இந்த கருத்தரங்கில் நாம் பாடத்தோடு, பல்வேறு ஆராய்ச்சி யாளர்களின் தொடர்புகள், ஆராய்ச்சியில் புதிய சிந்தனைகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து நாம் பணியாற்ற வேண்டும், அதற்கான வழி வகைகளை நாம் உருவாக்கி கொள்ளவேண்டும்’’ என்றார்.

கருத்தரங்கில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, ‘‘எதிர்காலத்தில் நாம் நானோ தொழில்நுட்பத்தை தான் சார்ந்து இருப்போம். சமூக வளர்ச்சிக்கு நானோ தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் நானோ தொழில்நுட்பம் மூலம் மிக சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டு நாம் பயன்படுத்த முடியும். வளர்ந்த நடுகளின் தொழில்நுட்பங்களை நாமும் பயன்படுத்த கற்று கொள்ளவேண்டும். அதன்மூலம் நாமும் வளரலாம்’’ என்றார்.

கருத்தரங்கில் அமெரிக்காவின் டிரக்ஸ்எல் பல்கலைக்கழகத்தின், நானோ மெட்டிரியல்ஸ் மையத்தின் இயக்குனர் டாக்டர்.யூரி கோகாட்சி, கேரளாவின் மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சபு தாமஸ் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x