Last Updated : 29 Nov, 2019 05:45 PM

 

Published : 29 Nov 2019 05:45 PM
Last Updated : 29 Nov 2019 05:45 PM

விரைவில் காந்திபீடியா: காந்தியின் பேச்சு, எழுத்துகளைத் தொகுத்து உருவாக்குகிறது ஐஐடி

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஐஐடி ஆய்வாளர்கள் ஒன்றுசேர்ந்து காந்திபீடியாவை உருவாக்கி வருகின்றனர். ஐஐடி காரக்பூர், ஐஐடி காந்திநகர் மற்றும் தேசிய அறிவியல் அருங்காட்சியக மையம் ஆகியவை இணைந்து இதை மேற்கொள்கின்றன.

இதுகுறித்து ஐஐடி காரக்பூர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:

''காந்தியின் கடிதங்கள், புத்தகங்கள், பேச்சுகள் ஆகியவை அடங்கிய காந்திபீடியா உருவாக்கப்பட்டு வருகிறது. ஐஐடி காரக்பூர், ஐஐடி காந்திநகர் மற்றும் தேசிய அறிவியல் அருங்காட்சியக மையம் ஆகியவை இணைந்து இதை மேற்கொள்கின்றன.

காந்திபீடியா முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கட்டமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மகாத்மா எழுதிய 40 புத்தகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன.

மகாத்மா காந்தியின் சமூகத் தொடர்புகள், அவர் மீது தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களின் தகவல்கள், காந்தியால் உத்வேகம் அடைந்தவர்கள் ஆகியோர் குறித்த விவரங்களை மறு கட்டமைப்பு செய்ய இப்புத்தகங்கள் உதவும்.

முதல்கட்ட காந்திபீடியா மார்ச் மாதம் வெளியாக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தில் இத்தொகுப்பு வெளியாகும். அந்த வகையில் அடுத்த 4 கட்டங்களுக்கான தொகுப்பு வேலை மார்ச் 2024 வரை நீடிக்கும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்திபீடியா உருவாக்கத்தில் தலைமைப் பொறுப்பு வகிப்பவரும் ஐஐடி காரக்பூர் கணினி அறிவியல் துறைப் பேராசிரியருமான அனிமேஷ் முகர்ஜி கூறும்போது, ''இதற்காக முதன்முதலில் சத்திய சோதனை புத்தகத்தை எடுத்துள்ளோம்.

விரைவில் அவரின் நூற்றுக்கணக்கான கடிதங்கள், பேச்சுகள், புத்தகங்கள் ஆகியவை தளத்தில் பதிவேற்றப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x