Published : 29 Nov 2019 09:28 AM
Last Updated : 29 Nov 2019 09:28 AM

குழந்தை திருமணம் என்ற அவலம்

அன்பு மாணவர்களே...

இந்தியாவில் ஆணின் திருமண வயது 21 ஆகவும், பெண்ணுக்கு 18 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பெற்றோரின் அவசரத்தாலும் பல்வேறு காரணங்களாலும் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு கூட திருமணம் செய்து வைப்பது நடைமுறையில் உள்ளது. குழந்தை திருமணம் சமூகத்தின் அவலம் என்று சமூக போராளி சாவித்திரி பாய் பூலே அடிக்கடி கூறுவார்.

தேசிய குடும்ப நலத்துறையின் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.3 கோடி பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ளது. நாட்டில் நடக்கும் திருமணத்தில் 26.8 சதவீதம், 18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளுக்குதான் நடக்கிறது என்று கூறுகிறது.

உலக சுகாதார அமைப்பு குழந்தை திருமணம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், உலகளவில் 11 சதவீதம் குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ளது என்றும் ஒரு குழந்தையே குழந்தையை பெற்று எடுப்பதால் 23 சதவீதத்துக்கும் அதிகமாக குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறுகிறது.

பிறக்கும் குழந்தைகள், சராசரி எடையை விட குறைந்த எடையில் பிறக்கின்றன. சரியான வயதில் திருமண செய்யும் பெண்களை விட இரு மடங்கு உடல்நலப் பிரச்சினைகளுக்கு குழந்தை திருமணம் செய்து கொண்ட சிறுமிகள் ஆளாகின்றனர் என்று கூறுகிறது மற்றொரு அறிக்கை.

எனவே மாணவர்களே... உங்களுடன் படிக்கும் மாணவிக்கு திருமண ஏற்பாடு நடந்தாலும் அல்லது தங்களுக்கே திருமண ஏற்பாடு நடந்தாலும் அதை தடுத்து நிறுத்த 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். உங்களை பற்றிய தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை, சம்பந்தப்பட்ட துறைக்கு தெரியப்படுத்துவது கட்டாயம் என்று போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், குழந்தை திருமணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவதை கட்டாயமாக்க குழந்தை திருமண தடை சட்டத்திலும் விரைவில் திருத்தம் செய்யப்படவுள்ளது. மேலும், பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து உயர்த்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குழந்தை திருமணம் இல்லாத நாட்டை உருவாக்குவோம் மாணவர்களே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x