Last Updated : 28 Nov, 2019 05:45 PM

 

Published : 28 Nov 2019 05:45 PM
Last Updated : 28 Nov 2019 05:45 PM

தரமான கல்வி வேண்டி நாடு தழுவிய போராட்டம்: பாக். மாணவர்கள் அறிவிப்பு

இஸ்லாமாபாத்

தரமான கல்வி வேண்டி நவ.29-ல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

கட்டண உயர்வு, துன்புறுத்தல், கைது ஆகியவற்றுக்கு இடையே பாகிஸ்தான் மாணவர்கள், தரமான கல்வியும் நியாயமான கல்விச் சூழலும் வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இது தொடர்பாக பீக்கான்ஹவுஸ் தேசிய பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவரும் முற்போக்கு மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஹைதர் கலீம் கூறும்போது, ''ஒவ்வொரு மாணவரும் தனது சேர்க்கைக்கு முன்னர் கையெழுத்து போட வேண்டி உள்ளது. பொதுவாக இங்கு மாணவர் சங்கங்களை அமைப்பதில் தடையில்லை. எனினும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட சில உத்தரவுகள் மற்றும் தடைகள் விதிக்கப்படுகின்றன. இதனால் அவர்களால் அரசியலில் பங்கேற்க முடிவதில்லை. கல்லூரி வளாகங்களில் போராட்டங்களை நடத்த முடிவதில்லை.

சங்கங்களை உருவாக்குவதில் இருந்து மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்படவேண்டும் என்பதே எங்களின் முக்கியத் தேவை. அடுத்தபடியாக பாதுகாப்புப் படைகள் மாணவர்களின் நடவடிக்கைகளில் தலையிடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அதேபோல அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும்.

இது நடக்காவிட்டால் லாகூர் நீதிமன்றத்தை நாட உள்ளோம். உச்ச நீதிமன்றத்தை நாடும் முன்னால், இருக்கும் அனைத்து வழிகளையும் முயற்சித்துப் பார்க்க இருக்கிறோம். கடந்த ஆண்டிலும் இதே மாதிரியான போராட்டத்தை 16 நகரங்களில் நடத்தினோம்'' என்கிறார் கலீம்.

பிஎஸ்சி மாணவர் போராளி சித்ரா இக்பால் கூறும்போது, ''பலுசிஸ்தான் பல்கலைக்கழகங்களில் ராணுவப் படைகளை நிறுத்தி வைப்பது ஏன்? பல்கலைக்கழகங்கள் அனைத்தும் ராணுவப் பிரிவு போலத் தோற்றமளிக்கின்றன'' என்றார்.

முன்னதாக, பாகிஸ்தான் உயர் கல்வி ஆணையம் அண்மையில் கல்விக் கட்டண உயர்வை அறிவித்தது. அதைத் தொடர்ந்து போக்குவரத்து, நூலகம், கணினி, இணையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறைப்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x