Last Updated : 28 Nov, 2019 05:38 PM

 

Published : 28 Nov 2019 05:38 PM
Last Updated : 28 Nov 2019 05:38 PM

சிபிஎஸ்இ தேர்வுக் கட்டண உயர்வு ஏன்?- மத்திய அமைச்சர் விளக்கம்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

சிபிஎஸ்இ தேர்வுக் கட்டண உயர்வு ஏன் என்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களைவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய ரமேஷ் பொக்ரியால், ''2020-ம் ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் எஸ்சி/எஸ்டி மாணவர்கள் உட்பட அனைவருக்கும் எல்லா பள்ளிகளிலும் ரூ.750-ல் இருந்து ரூ.1500 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லி அரசுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 1,299 சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன. இதில் அனைத்துப் பிரிவு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் ரூ.375-ல் இருந்து ரூ.1200 ஆக தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல அனைத்துப் பிரிவு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் ரூ.600-ல் இருந்து ரூ.1200 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ சுய நிதி வாரியம் மட்டுமல்ல தனித்துச் செயல்படும் ஒன்று. தனக்கான தேவைகளைத் தானே பூர்த்தி செய்யும் கொள்ளும் வாரியம் இது. மத்திய அரசிடம் இருந்தோ பிற அமைப்புகளிடம் இருந்தோ, தனது செலவுகளுக்காக எந்தத் தொகையையும் சிபிஎஸ்இ பெறுவதில்லை.

லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என்ற கணக்கீட்டில் தேர்வுக் கட்டணத்தை சிபிஎஸ்இ உயர்த்தியுள்ளது'' என்று தெரிவித்தார்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள், 9-ம் வகுப்பு படிக்கும்போதே பதிவு செய்ய வேண்டும், அதேபோல 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 11-ம் வகுப்பிலேயே பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் மாற்றம் செய்யப்பட்ட தேர்வுக் கட்டண விவரங்களை சிபிஎஸ்இ அண்மையில் அறிவித்தது.

சிபிஎஸ்இ வாரியத்தில் படித்த எஸ்சி, எஸ்டி மாணவர்கள், இதற்கு முன் தேர்வுக் கட்டணமாக ரூ.50 செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x