Published : 28 Nov 2019 05:21 PM
Last Updated : 28 Nov 2019 05:21 PM

மாதந்தோறும் கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி ரொக்கப் பரிசு: மத்திய அரசு அறிவிப்பு

மாதந்தோறும் கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம் கடந்த 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய மனிதவளத் துறை கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகளை அறிவித்துள்ளது.

இதற்காக, கர்தவ்யா இணையப் பக்கத்தை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடங்கிவைத்தார். இதன்படி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள், வினாடி வினா, விவாதங்கள் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு மாதமும் நடக்கும் போட்டிகளில், குடிமகனின் அடிப்படைக் கடமையைக் கொண்டு கேள்விகள் எழுப்பப்படும்.

ஒவ்வொரு மாதமும் 26-ம் தேதி கட்டுரைக்கான தலைப்பு கொடுக்கப்படும். இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் அடுத்த மாதம் 10-ம் தேதியன்று பதிவு செய்யவேண்டும். அடுத்த 6 நாட்கள் கழித்து 16-ம் தேதி தேர்வு மையம் ஒதுக்கப்படும். 26-ம் தேதி போட்டி நடத்தப்படும். உதாரணத்துக்கு கட்டுரைப் போட்டிக்கான முன்பதிவு நவம்பர் 26-ம் தேதி தொடங்கியுள்ளது. டிசம்பர் 26-ம் தேதி அதற்கான போட்டி நடைபெறும்.

இந்த சுழற்சி முறை போட்டிகள் அடுத்த ஆண்டு அக்டோபரில் நிறைவு பெறும். இதில் கலந்துகொள்ள மாணவர்கள் கல்லூரியில் படிப்பவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் இந்தி அல்லது ஆங்கில மொழியில் கட்டுரைகளை எழுதலாம். 2 மணிநேரம் இதற்காக ஒதுக்கப்படும்.

சிறந்த படைப்புகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். அதன்படி முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.12 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். நான்காவது பரிசாக ரூ.7,500 வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x