Published : 28 Nov 2019 03:43 PM
Last Updated : 28 Nov 2019 03:43 PM

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: முழு விவரம்

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அனைத்துப் பள்ளிகளிலும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் இருந்து பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அண்மையில் ஆணையிட்டது. இதைத் தொடர்ந்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இதன்படி 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு மார்ச் 30-ல் தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதி முடிவடைகிறது. 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15-ல் தொடங்கும் தேர்வு, அதே மாதம் 20-ம் தேதி முடிகிறது.

இரண்டு பொதுத் தேர்வுகளின்போதும் தேர்வெழுதும் மாணவர்கள் காலை 10 மணிக்குத் தேர்வு அறைக்கு வரவேண்டும். கேள்வித் தாளைப் படிக்க 10 நிமிடங்கள் வழங்கப்படும். தேர்வு பதிவெண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய 5 நிமிடங்கள் அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து 10.15 மணியில் இருந்து 12.15 மணி வரை, 2 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

எப்போது என்ன தேர்வு?

8-ம் வகுப்புக்கு:

தமிழ்- மார்ச் 30
ஆங்கிலம் - ஏப்ரல் 2
கணிதம் - ஏப்ரல் 8
அறிவியல் - ஏப்ரல் 15
சமூக அறிவியல் - ஏப்ரல் 17

5-ம் வகுப்புக்கு:

தமிழ்- ஏப்ரல் 15
ஆங்கிலம் - ஏப்ரல் 17
கணிதம் - ஏப்ரல் 20

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு முதல் இரண்டு பருவங்களுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றாவது பருவத்துக்கான புத்தகங்கள் இன்னும் வழங்காத நிலையில் பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5, 8-ம் வகுப்புக்கு எழுத்துத்தேர்வு 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மீதமுள்ள 40 மதிப்பெண்கள் கல்வி தொடர்பான வளரறி மதிப்பீடு செயல்பாடுகளுக்கு வழங்கப்படும்.

5-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் தொடர்பான அடிப்படைக் கருத்துகள், பயிற்சிகள் மற்றும் கற்றல் விளைவுகளைச் சோதிக்கும் வகையில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

8-ம் வகுப்புக்கு அனைத்து பாடங்களுக்கும் முப்பருவ அடிப்படைக் கருத்துகள் மற்றும் பயிற்சிகளை சோதித்தறியும் வகையில் நடைபெறும். எனினும் பொதுத்தேர்வுகள் எளிதாகவே இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x