Last Updated : 28 Nov, 2019 01:25 PM

 

Published : 28 Nov 2019 01:25 PM
Last Updated : 28 Nov 2019 01:25 PM

பள்ளிகளில் வாட்டர் பெல்: கோவாவிலும் அறிமுகம் 

பனாஜி

மாணவர்களிடையே உடல் வறட்சியை ஏற்படுத்தும் தாகத்தைத் தடுக்கும் விதமாக தினந்தோறும் இரண்டு முறை குடிநீர் இடைவேளை விடப்பட வேண்டும் என்று கோவா அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவா பள்ளிக் கல்வித்துறை அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் ஷைலேஷ் ஜிங்டே அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"பள்ளிகளில் மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் அருந்துவதில்லை. இதனால் உடல் வறட்சி ஏற்பட்டு, பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது. ஆகவே அனைத்துப் பள்ளிகளிலும் தினந்தோறும் இரண்டு முறை குடிநீர் இடைவேளை விடப்பட வேண்டும். குறிப்பாக இரண்டாவது பாடவேளை முடிந்த பிறகு 2 நிமிடங்களும் 6-வது பாடவேளை முடிந்த பின் 2 நிமிடங்களுக்கும் தண்ணீர் குடிக்க இடைவேளை அளிக்கப்படும். அப்போது சிறிய மணி ஒலிக்கப்பட வேண்டும். அப்போது மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்துள்ள குடிநீரையோ அல்லது பள்ளியில் உள்ள குடிநீரையோ குடிப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்."

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கேரள மாநிலம் கொச்சியில் வாட்டர் பெல் அடிக்கும் முறை அமலுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் மாணவர்கள் தண்ணீர் அருந்த தினமும் 3 முறை மணி அடிக்கும் பள்ளி பிரபலமானது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்துப்பள்ளிகளிலும் ஒவ்வொரு பாட வேளை முடிந்தவுடன், தண்ணீர் அருந்த, 10 நிமிடம் இடைவேளை விட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியது.

புதுச்சேரியில் அரசே, பள்ளிகளில் நாளொன்றுக்கு 4 முறை வாட்டர் பெல் அடிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் கோவா பள்ளிகளிலும் குடிநீர் இடைவேளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா. வரையறையின்படி ஒவ்வொரு பள்ளியிலும் சுகாதாரமான குடிநீர் இருக்க வேண்டும். சில பள்ளிகள் குடிதண்ணீர் வசதி செய்துகொடுத்தாலும்கூட மாணவர்கள் அதனை ஒழுங்காகப் பயன்படுத்துகின்றனரா என்பதைக் கண்காணிப்பதில்லை. அதேபோல் கழிவறை சுகாதாரத்தைக் கணக்கிலேயே கொள்வதில்லை. இதை நெறிமுறைப்படுத்த வேண்டும் என்பது பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x