Last Updated : 27 Nov, 2019 11:16 AM

 

Published : 27 Nov 2019 11:16 AM
Last Updated : 27 Nov 2019 11:16 AM

ஆசிரியருக்கு அன்புடன்! - 8: அக்கறையோடு கேட்கும் காதுகள்

பள்ளியில் மணி ஒலிக்கிறது. வகுப்பறையில் ஆசிரியர் பேசுவதை கவனிக்காமல் மாணவர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். புதிதாக பணியில் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் பார்த் வகுப்பறைக்குள் நுழைகிறார். உங்களுக்கு வகுப்பில் இருக்கப் பிடிக்கவில்லை என்றால் வெளியே போய்விடலாம் என்கிறார்.

அவர் சொல்லி முடித்ததும் ஒரு மாணவன் “ஹாய் என்ன சொல்ற? இந்தாளு என்ன சொல்றாருன்னே புரியல” என்கிறான். அவனை அமைதியாக இருக்குமாறு சகமாணவி சொல்கிறாள். அவளை கெட்டவார்த்தையால் திட்டுகிறான். பார்த் கோபம் கொள்கிறார். நீ இப்போதே வகுப்பை விட்டு வெளியேறலாம் என்று விடாப்பிடியாக அவனை வெளியே அனுப்பி வகுப்பறையின் கதவுகளை அடைக்கிறார்.

இரண்டு விதமான அணுகுமுறை

ஒரு தலைப்பு கொடுத்து அதை குறித்து மாணவர்கள் அனைவரும் கட்டுரை ஒன்றை எழுத பார்த் சொல்கிறார். ஒரு மாணவன் வேகமாக எழுந்து பார்த் அருகில் வந்து, “நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. என்னிடம் பேப்பர் இல்லை” என்று சொல்லும் போதே இடையிடையே கெட்ட வார்த்தை
களையும் பேசுகிறான். ஆசிரியரின் பையை எடுத்துக் கோபத்தோடு எறிகிறான்.

உங்களையும் இப்படி எறிந்துவிடுவேன் என்று கத்துகிறான். உனது கோபத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நானும் அப்படிக் கோபப்பட்டிருக்கிறேன். உன்னிடம் பேப்பர் இல்லை அவ்வளவுதானே. நான் தருகிறேன் என்று பார்த்ஒரு தாளைத் தருகிறார். பேனா யார்தருவார் என்று அவன் மீண்டும் கோபமாகக் கத்துகிறான். அதையும் தருகிறார். வகுப்பு முடிந்தபின் எழுதிய தாட்களை ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு மாணவர்கள் அனைவரும் வெளியேறுகின்றனர்.

இறுதியாக ஒரு மாணவி ஆசிரியரிடம் கேட்கிறாள், “முதலில் திட்டியவனை வெளியே அனுப்புனீங்க. உங்களிடம் அநாகரீகமாக நடந்து அதிகம் கெட்ட வார்த்தைகள் திட்டியவனை எதுவுமே சொல்லாமல் தாளும் பேனாவும் கொடுத்து எழுதச்சொல்றீங்க. உங்களது நடத்தைக்கான காரணம் என்ன?”

பார்த் பதில் சொல்கிறார். முதலில் திட்டியவன் சக மாணவியை மதிக்காததால் வெளியே அனுப்பினேன். எனது வகுப்பில் இருப்பவர்களின் மரியாதையைக் காக்க வேண்டியது எனது கடமை. இரண்டாவது மாணவன் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டான். அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். அதனால் பொறுத்
தேன்.

மெர்டித் என்ற அந்த மாணவி ஆச்சரியமுடன் கேட்கிறாள், “உங்களிடம் என்ன பேசினாலும் கேட்பீர்களா?”
ஆம். என்று புன்னகைக்கிறார் பார்த். மாணவ மாணவியர் எழுதியவற்றை வகுப்பறையில் வாசித்துக் காட்டுகிறார் பார்த். மாணவர்கள் என்ன பேசினாலும் அவர்களிடம் கனிவாகப் பேசுகிறார்.

எல்லாமே சரியாகிவிடும்!

மெர்டித் என்ற மாணவி அவளே எடுத்த பல்வேறு புகைப்படங்களை ஒன்றாக்கி ஓவியமாக ஆக்கும் திறன் பெற்றிருக்கிறாள். ஆனால், “உடல் பருமனைக் குறைக்க ஏதாவது செய்யலாம்” என்று அவளது தந்தை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறார்.

ஒருநாள், பார்த் தனியே வகுப்பறையில் இருக்கும்போது மெர்டித் வருகிறாள். “நான் உங்களுடன் பேசவேண்டும். என்னை பார்த்துக்கொண்டே என்னோடு பேசுவீர்களா?” என்று கேட்கிறாள். “பள்ளியின் ஆற்றுப்படுத்துனரிடம் பேசுகிறாயா” என்று பார்த் கேட்கிறார். “உங்களிடம்தான் பேசவேண்டும். தயவு செய்து நான் சொல்தைக் கேளுங்கள்” என்று கண் கலங்குகிறாள்.

“வாழ்க்கை சிக்கலானது. அதை எவ்வாறு கடக்க வேண்டும் என்று புரிந்துகொண்டால் போதும். அமைதியாக இரு” என்று பார்த் ஆறுதல் சொல்கிறார். அவள் அழுதபடியே அவர் மீது சாய்கிறாள். அவர் அவள் தன்மீது முழுமையாகச் சாய்ந்து விடாமல் மெதுவாகத் தள்ளுகிறார்.

“நீங்கள் எதுவும் சொல்லவேண்டாம். என்னைத் தட்டிக்கொடுத்து ‘எல்லாமே சரியாகிவிடும்!’ என்று மட்டும் சொல்லுங்கள்” என்று கதறி அழுகிறாள் மெர்டித். தற்செயலாக அந்த வகுப்பறைக்குள் ஆசிரியை ஒருவர் நுழைகிறார். அவரைப் பார்த்ததும் அழுதபடியே மெர்டித் வெளியே ஓடுகிறாள். மாணவியிடம் பெர்த் தவறாக நடந்துகொண்டதாக அந்த ஆசிரியை கோபம் கொள்கிறார்.

நிரந்தர ஆசிரியர் வருவது உறுதியாகி விட்டதால் வேறு பள்ளிக்கு மாறிச் செல்லப்போவதாக தனது வகுப்பறையில் பார்த் சொல்கிறார். “நீங்கள் எங்கள் குரலுக்
குக் காது கொடுத்தவர். நீங்கள் இங்கேயே இருக்க முடியாதா” என்று மாணவர்கள் வருத்தத்துடன் கேட்கிறார்கள். சமூகம் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் அனைவருமே பாதிக்கப்படுகிறோம்.

அதனாலேயே வாழ்வில் பற்றுதல் இல்லாத நிலையிலேயே பெரும்பாலும் இருக்கிறோம். இளம் பருவத்தினரை அவர்களது தடம் புரளாமலும், விழுந்துவிடாமலும் வழி நடத்த வேண்டியதே ஆசிரியரின் கடமை என்பதில் பார்த் நம்பிக்கையோடு இருக்கிறார். இளம் பருவத்தினரின் குரல்களுக்கு அக்கறையான காதுகளே வேண்டும் என்பதை 'டிட்டாச்மெண்ட்' திரைப்படம் அழுத்தமாகக் காட்சிப்படுத்துகிறது.

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x