Published : 27 Nov 2019 08:44 AM
Last Updated : 27 Nov 2019 08:44 AM

உலகத்துக்கே அச்சுறுத்தலாக விளங்கும் பருவநிலை மாற்றத்துக்கு தீர்வு காண வேண்டும்: மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் அறிவுரை

எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில், குழந்தைகளிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக சென்னை தரமணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவசமாக வழங்கப்பட்ட நுண்ணோக்கியில் பொருட்களை வைத்து உற்றுநோக்கும் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள். படம்: க.ஸ்ரீபரத்

சென்னை

உலகத்துக்கே அச்சுறுத்தலாக விளங்கும் பருவநிலை மாற்றத்தக்கு தீர்வுகாண வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அறிவுரை வழங்கினார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளிடம் அறிவியல் ஆர்வத்தை உண்டாக்கும் நோக்கில், ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்ற புதுமையான திட்டத்தை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூலம் அறிவியல், ஆராய்ச்சி, அதன் மூலம்உலக மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அறிவியல் சார்ந்த கலந்துரையாடல்களும் நடத்தப்படுகின்றன.

அறிவியல் படைப்புகள்உருவாக்குவது குறித்தும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் இதுவரை சென்னை மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டத்தின் தொடர்ச்சியாக, ‘குழந்தைகளும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஆய்வும்’ என்ற நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சிஅறக்கட்டளை கூட்டரங்கில் திங்கள்கிழமை நடந்தது.

இதில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியதாவது:

குழந்தைப் பருவத்திலேயே அறிவியல் மீது ஆர்வம் ஏற்பட்டால், பிற்காலத்தில் அவர்கள் சிறந்த விஞ்ஞானிகள் ஆக முடியும். வருங்காலத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, பல சாதனைகளையும் படைக்க முடியும். சமீப காலமாகபருவநிலை மாற்றம் அனைத்து நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. அதை எதிர்கொள்வதற்கான ஆய்விலும், அதற்கான தீர்வுகளை கண்டுபிடிப்பதிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

நிலங்களில் பல வகைகள் உள்ளநிலையில், அவற்றுக்கு பொதுவானதீர்வு பலன் தராது. தமிழகத்தை பொறுத்தவரை சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளபடி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 வகையாக நிலங்களை வகைப்படுத்தி, அதற்கு ஏற்ற வகையில் தீர்வுகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மாணவர்கள் உருவாக்கிய படைப்புகளை அவர் பார்வையிட்டு மாணவர்களைபாராட்டினார். அனைத்து மாணவர்களுக்கும், மலிவு விலை நுண்ணோக்கி தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது. ஈ, கொசுக்களின் இறகுகள், இலைகள் ஆகியவற்றை அதன்மூலம் உருப்பெருக்கம் செய்து பார்த்து மாணவ,மாணவிகள் வியந்தனர்.

எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானி எஸ்.மலர்வண்ணன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர்மொ.பாண்டியராஜன் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x