Published : 25 Nov 2019 01:00 PM
Last Updated : 25 Nov 2019 01:00 PM

சென்னை விமான நிலையச் சுவர்களில் தமிழ்க் கலாச்சாரம்: பள்ளி, கல்லூரி மாணவர்களின் ஓவியங்கள்!

சென்னை விமான நிலைய நிர்வாகம் சார்பில் சென்னையைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் நேற்று விமான நிலையச் சுவர்களில் ஓவியங்களை வரைந்தனர். அவர்களுடன் ஓவியத்தில் ஆர்வம் கொண்ட தன்னார்வலர்களும் இதில் கலந்து கொண்டனர்.

சென்னையைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் திரிசூலம் முதல் சென்னை விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கம் வரையிலான சுற்றுச்சுவர்களில் ஆர்வத்துடன் ஓவியங்களை வரைந்தனர். இதற்காக சுற்றுச்சுவர்கள் 400 பாகங்களாகப் பிரிக்கப்பட்டன. அவற்றில் கலை, இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, கோயில்கள் சார்ந்து எண்ணற்ற ஓவியங்கள் வரையப்பட்டன.

நேற்று (நவ.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 450-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரையப்பட்டன. சூழலியல், உடல் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு ஓவியங்களும் இதில் வரையப்பட்டன. ஒவ்வோர் ஓவியமும் கலை உணர்வுடன் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

ஓவியங்களை வரையத் தேவையான பெயிண்ட் உள்ளிட்ட உபகரணங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. யுனிவர்சல் சாதனையாளர்கள் புத்தகத்தில் (Universal Achievers Book of Records) இடம்பெற்று உலக சாதனையைப் படைப்பதற்காக ஒரே நேரத்தில் ஓவியங்களை வரைந்து சாதனை படைத்தனர். இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தூய்மையைப் பராமரிக்கவும் சென்னை வரும் வெளிநாட்டவர்கள் தமிழ்க் கலாச்சாரத்தை அறிந்து கொள்ளவும் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டதாகக் விமான நிலைய நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x