Published : 25 Nov 2019 10:27 AM
Last Updated : 25 Nov 2019 10:27 AM

குட்டீஸ் இலக்கியம் 6: ஐம்பது பேரின் 50 சிறுகதைகள்

கிங் விஸ்வா

மன்னர் ராஜராஜர், தஞ்சையில் பிரமாண்டமாக ஒரு கோவிலைக் கட்ட நினைக்கிறார். அதற்காக, அனைத்து சிற்பிகளையும் அழைத்து, அவர்களை ஒருங்கிணைத்து பணியாற்ற வைக்கிறார்.

தான் கருவில் இருக்கும்போதே குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்ட தந்தையைத் தேடி அலையும் ஒரு இளைஞன், தன்னுடைய தந்தை அங்கிருக்கக் கூடுமென்று, அவரைத் தேடி வருகிறான். அப்போது கோவிலின் அஸ்திவாரம் அமைக்கப்பட்டு வந்தது. அதைக்கண்ட இளைஞன் உடனே, அஸ்திவாரத்தின் கட்டுமானத்தில் தவறு இருக்கிறது. அதைச் சரிசெய்ய வேண்டும் என்று சொல்கிறான். ஆனால், பிரதம சிற்பி சோமவர்மனின் மேற்பார்வையில் நடக்கும் கட்டுமானப் பணிகளில் குறை இருக்காது என்றெண்ணி, அவனது ஆலோசனையைக் கேட்காமல், அப்படியே தொடர்ந்து கட்டுகிறார்கள்.

எதிர்பாராத திருப்பம்

மூன்றடுக்கு வரை உயர்ந்த உடன், ஒருநாள் அந்தக் கோபுரம் அப்படியே சரிந்து தரைமட்டமாகிறது. பிரதம சிற்பி சோமவர்மர் அந்த இளைஞனைத் தேடி வருகிறார். ஆனால், அதற்குள்ளாக, சோமவர்மரின் சீடர்கள், இளைஞனின் மீதுள்ள பொறாமை காரணமாக அவனை கொலை செய்ய முயல்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து, சொந்த ஊருக்குச் செல்லும் இளைஞன், காட்டில் ஒரு புலியிடம் சிக்கிக் கொள்கிறான். அப்போது, “மகனே” என்றவைத்தபடி அங்கு வரும் சோமவர்மர், புலியுடன் சண்டை இடுகிறார். புலியின் மரணத் தாக்குதல் ஒருபுறமிருக்க, பிரதம சிற்பி தன்னை மகனே என்று அழைத்தவாறு புலியுடன் போராடுவது இன்னொருபுறமாக அந்த இளைஞனை வியப்பில் ஆழ்த்துகிறது.

ஒவ்வொரு கதையிலும் அதைச் சிறப்பான, மறக்க முடியாத கிளாசிக் ஆக மாற்றும் ஒரு கட்டம் இருக்கும். அப்படியான ஒரு
கட்டத்தை வலிந்து திணிக்காமல், கதையின்போக்கிலேயே வரவழைத்தால், அந்தக் கதாசிரியரின் திறமையை நாம் பாராட்டலாம். இந்தக் கதையில், கதையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் தருணம் இதுதான்.

மகாபாரதத்தில், அபிமன்யு தாயின் கருவில் இருந்தவாறே எப்படி யுத்தக் கலைகளை கற்றான் என்பதைப் படித்திருப்போம். இந்த கதையில், தந்தையின் சிற்பக் கலை மகனின் மரபணுவில் ஊறி, அவனுக்கு சிற்பக் கலை பற்றிய ஞானம் இருப்பதாக கதாசிரியர் கதையை அமைத்து இருக்கிறார். இப்படியாக இவர்கள் கட்டிமுடித்த அந்தக் கோபுரம்தான் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் என்று கதையை முடித்தவிதம் இன்னமும் சிறப்பு.

50 சிறுகதைகள்

இப்படிப்பட்ட அருமையான ஐம்பது சிறுவர் இலக்கியச் சிறுகதைகளை தொகுத்து‘சிறுவர் கதைக் களஞ்சியம்’ என்ற அருமை
யான புத்தகத்தைச் சாகித்திய அகாடமி வெளியிட்டுள்ளது. முதன்முறையாக தமிழ் மொழியில் சிறுவர் இலக்கியத்தில் பங்களிப்பு செய்த 50 படைப்பாளிகளின் கதைகளைத் தொகுத்து, 50 சிறுகதைகளை வெளியிட்டு உள்ளார்கள். இதுவரையில் தமிழில் வந்த சிறுவர் இலக்கியப் புத்தகங்களில் இது மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்பதற்கு மூன்று மிக முக்கியமான காரணங்கள் உள்ளன.

ஆளுமைகள்

தமிழில் சிறுவர் இலக்கியத்தில் இயங்கியஆகச்சிறந்த ஆளுமைகளான பாரதியார், பாரதிதாசன், மறைமலையடிகள், தூரன், கி வா ஜா, வை கோவிந்தன், தி ஜ ர, வாண்டுமாமா, பூவண்ணன், கொ மா கோதண்டம், கூத்தபிரான், அழ வள்ளியப்பா, எ சோதி, ரேவதி, பூதலூர் முத்து, வானொலி அண்ணா என்று 50 படைப்பாளிகளின் அற்புதமான கதைகள் ஒரே புத்தகத்தில் இடம்பெறுவது இதுவே முதல்முறை.

வரலாறு

ஒரு நல்ல படைப்பின் அடையாளமே, அது நடைபெறும் காலகட்டத்தை, அப்போதைய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்து
ஆவணப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதுதான். அந்த வகையில் இக்கதைகள் ஒவ்வொன்றுமே அவை நடைபெறும் சூழலை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தத் தவறவில்லை.

பன்முகத்தன்மை

சிறுவர் இலக்கியங்களில் பல்வேறு பாணிகள், தளங்கள், வகைகள் உள்ளன. அவற்றில், பேசாப்பொருள்கள் பேசும் வகை

- யதார்த்தமான உணர்வுகள்

- மன்னர் காலத்து கதைகள்

- தேவதைக் கதைகள்

- சமகால தர்க்கங்களும் நியாயங்களும் கொண்ட கதைகள்

என்று பல வகைகளின் வழியாக அறம், உணர்தல், சூழல் காப்பு, மனித நேயம், மூத்தோர்களிடத்தில் மரியாதை, சக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் என்று பல விஷயங்களை வலிந்து திணிக்காமல், கதையின் போக்கிலேயே சொல்லி இருப்பதுதான் இக்கதைகளின் சிறப்பு.

இதுபோன்ற அருமையான படைப்புகளைத் தேடிக் கண்டுபிடிக்க ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்த கிருங்கை சேதுபதி மற்றும் இரா.காமராசு ஆகிய இருவருக்கும் நன்றி சொல்வோம்.

- கட்டுரையாளர்: காமிக்ஸ் ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x