Published : 25 Nov 2019 07:27 AM
Last Updated : 25 Nov 2019 07:27 AM

நகர்ப்புறங்களை விட பின்தங்கியுள்ள கிராமங்கள் நாட்டில் எழுத்தறிவு 78 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய புள்ளியியல் துறை தகவல்

புதுடெல்லி

ஏழு வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களில் 77.7 சதவீதத்தினர் எழுத்தறிவு பெற்றிருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டிருக்கும் கணக்கெடுப்புத் தெரிவித்துள்ளது. 2017 ஜூலை - 2018 ஜூன் ஆகிய காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் முடிவு இது.

தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 75வது சுற்றில் கல்விக்கும் இடம்தரப்பட்டது. அதில் கிராமப் புறங்களில்73.5 சதவீதமும் நகரப்புறங்களில் 87.7 சதவீதமும் அடிப்படை கல்வி அறிவு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 30.6 சதவீத கிராமத்தினர் 57.5 சதவீத நகரத்தினரை மேல்நிலைப் பள்ளிக் கல்வி சென்றடைந்துள்ளது.

கல்லூரி படிப்பைப் பொருத்தவரை கிராமங்களில் 5.7 சதவீதத்தினர், நகரங்களில் 21.7 சதவீதத்தினர் மட்டுமேஇளநிலை பட்டப் படிப்பை முடித்திருக்கிறார்கள். இதன் சராசரியை கணக்கிடும்போது 15 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் 10.6 சதவீதத்தினர் மட்டுமே 2018-ம் ஆண்டில் பட்டதாரி ஆகி இருக்கிறார்கள்.

3-35 வயதுக்கு உட்பட்டவர்களில் 13.6 சதவீதத்தினர் பள்ளிக்கூடத்தில் சேரவில்லை என்பதும் 42.5 சதவீதத்தினர் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தாலும் ஒரு முறைகூட பள்ளிக்குச் சென்றதில்லை என்பதும் 43.9 சதவீதத்தினர் தொடர்ந்து படித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. ஆண்களில் 11 சதவீதம் பேர் பள்ளியில் சேரவில்லை. 42.7 சதவீதம் பேர் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தாலும் பள்ளிக்குச் செல்வதில்லை. 46.2 சதவீதம் பேர் தொடர்ந்து படித்துவருகிறார்கள். பெண்களில் 16.6 சதவீதம் பேர் பள்ளியில் சேர்க்கப்படவில்லை. 42.2 சதவீதத்தினர் பள்ளியில் சேர்க்கப்பட்டாலும் செல்வதில்லை. 41.2 சதவீதத்தினர் மட்டுமே பள்ளி சென்று கொண்டிருக்கிறார்கள்.

அரசு செலவழிக்கும் பணம்

உயர்கல்வி படித்து வருபவர்களில் 96.1 சதவீதத்தினர் கலை, அறிவியல் பட்டப் படிப்பை மேற்கொள்கின்றனர். 3.9 சதவீதத்தினர் மட்டுமே மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளை படித்துவருகிறார்கள். கலை, அறிவியல் பட்டப்படிப்பை படித்துக் கொண்டிருப்பவர்களில் மாணவர்கள் 55.8 சதவீதம் . 44.2 சதவீதத்தினர் மாணவிகள். தொழில்முறை கல்வியில் 65.2 சதவீதத்தினர் மாணவர்கள், 34.8 சதவீதத்தினர் மாணவிகள்.

இலவச கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் பள்ளி பை, புத்தகங்கள், எழுது பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கிராமப்புற மாணவர்களில் 57 சதவீதத்தினர் முறையாகப் பெற்றுள்ளனர். நகர்ப்புறங்களிலோ 23.4 சதவீதத்தினர் மட்டுமே இலவச கட்டாய கல்வியும் அது தொடர்பான சலுகைகளையும் பெற்றுள்ளனர்.

3-35 வயதுக்கு இடைப்பட்ட இந்தியப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு அரசு செலவழிக்கும் நிதி குறித்த விவரமும் இதில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு கிராமப்புற மாணவருக்கும் ஆண்டுக்கு ரூ.5,240, ஒவ்வொரு நகர்ப்புற மாணவருக்கும் ரூ.16,308 அரசால் செலவழிக்கப்படுகிறது. இவ்வாறு புள்ளி விவரத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x