Published : 22 Nov 2019 09:55 PM
Last Updated : 22 Nov 2019 09:55 PM

‘மதிப்பெண் குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல’- மாணவியின் ட்விட்டர் பதிவு: ‘அருமையாகச் சொன்னீர்கள்’- சுந்தர் பிச்சை பாராட்டு

தனக்குப் பிடிக்காத பாடத்தில் பூஜ்ஜியம் எடுத்ததும் பின்னர் பாடத்தை மாற்றியதால் சிறந்த மதிப்பெண் எடுத்து தேறியதையும் குறிப்பிட்டு மதிப்பெண் குறைவு திறனுக்கான மதிப்பீட்டு அல்ல என மாணவி குறிப்பிட்டதை அருமையாகச் சொன்னீர்கள் என கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், சென்னை கே.கே.நகரில் ஒரு எளியக்குடும்பத்தில் பிறந்த சாதாரண பள்ளியில் படித்து பட்டம் வாங்கி பின்னர் சிரமப்பட்டு அமெரிக்கச் சென்று படித்து கூகுள் நிறுவனத்தில் இணைந்து கூகுள் குரோமை அறிமுகப்படுத்தி அதன் தலைமை நிர்வாகியாக பதவி வகிப்பவர் சுந்தர் பிச்சை.

எந்தநிலை வந்தாலும் வந்தவழி மறவாத மனிதர், எளிய மனிதர் கூகுள் பிச்சை, உலகில் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக, சுய முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

மனிதரை மதிப்பிடுவது தேர்வு, மதிப்பெண்கள் அல்ல என்பது குறித்து பலரும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்தாலும் பெற்றோர்களும், சமுதாயமும் தேர்வு மதிப்பெண்ணை முன் வைத்தே தகுதியை அளப்பதால் பலர் விரும்பிய பாடம் எடுத்து படிக்க முடியாமலும், மனப்பாட முறைக்கும் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற சந்தர்ப்பத்தில் விரும்பாத பாடம் படித்த மாணவி அதில் பூஜ்ஜியம் வாங்கியதை குறிப்பிட்டு சமூகவலைதளத்தில் சாதாரணமாக பதிவிட அதற்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் இருந்து எதிர்பாராத பாராட்டு கிடைத்துள்ளது.

சாராஃபினா நான்ஸ் என்ற மாணவி, தனது ட்விட்டர் தளத்தில்,

''நான்கு ஆண்டுகளுக்கு குவாண்டம் இயற்பியல் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றேன். அதற்குப் பின்னர் எனது முக்கியப் பாடத்தை மாற்றிக்கொள்ளலாம், இயற்பியலை விட்டு வெளியேறி விடலாம் எனவும் அச்சத்துடனேயே நான் எனது பேராசிரியரை சந்திக்க சென்றேன். ஆனால் இன்றோ வானியல் இயற்பியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். இரண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளேன்.'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும்“தேர்வில் பூஜ்ஜியம் வாங்குவது உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல” என்றும் அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார்.

மாணவியின் இந்த ட்விட்டர் பதிவை தனது பக்கத்தில் பகிர்ந்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, “அருமையாகச் சொன்னீர்கள் , உத்வேகம் அளிக்கிறது ” எனப் பாராட்டியுள்ளார். சுந்தர் பிச்சையின் பாரட்டுக்கு பலரும் மகிழ்ந்து பதிவிட்டுள்ளனர். மதிப்பெண் உங்கள் திறனுக்கான மதிப்பீடு அல்ல என்பதை சுந்தர் பிச்சை போன்றோர் தவிர யாரால் உணர்ந்து பாராட்ட முடியும். இது தேர்வு மதிப்பெண்களே தங்களது தகுதி என எண்ணும் மனப்பான்மை உள்ளவர்கள் அதை மாற்றிக்கொள்ள உதவும் பதிவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x