Published : 22 Nov 2019 10:14 AM
Last Updated : 22 Nov 2019 10:14 AM

தித்திக்கும் தமிழ் 6- தனித் தமிழ் இயக்கம் தெரியுமா?

ஜெராக்ஸ் எடுத்துவிட்டுத் திரும்பி வந்த மலர், தன் அக்கா மதியிடம் அந்தக் கடையின் பெயரைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.

மலர்: அக்கா நம்ம வீட்டுக்குப் பக்கத்துல புதுசா வந்திருக்கிற ஜெராக்ஸ் கடைக்குப் பேர் என்ன தெரியுமா? ‘வெற்றி நகலகம்’.

மதி: அழகாயிருக்கு. நகலகம். முன்னாடி தமிழ்லயும் ஜெராக்ஸ் கடைன்னுதான் எழுதியிருப்பாங்க. இப்ப நிறையப் பேரு பெயர்ப்பலகைகள்ல நல்ல தமிழ்ச் சொற்களப் பயன்படுத்துறாங்க மலர். மலர்: ஆமாக்கா. ‘பனிக்கூழகம்’னுகூட ஒரு பெயர்ப்பலகையைப் பார்த்தேன்.

மதி: தமிழ்லதான் பெயர்ப்பலகை வைக்கணும்னு அரசு சொன்னப்ப ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழாக்கிப் பெயர்ப் பலகைகள்ல எழுதினாங்க. ‘jewellery’ங்கிற ஆங்கிலச் சொல்லை அப்படியே ஜீவல்லரின்னு தமிழ்ல எழுதிக்கிட்ருந்தாங்க. நிறைய ஆங்கிலச் சொற்கள் கலந்துதானே நாம தமிழைப் பேசுறோம். குழந்தைகளுக்குப் பேர் வைக்கும்போதுகூட ‘ஸ்டைலா’ இருக்கணும்னுதான நினைக்கிறோம். தமிழ்த் திரைப்படங்களுக்கும் ஆங்கிலம் கலந்துதான் பேர் வச்சிட்டிருந்தாங்க.

மலர்: உண்மைதான் அக்காமதி: நம்ம மொழியில அவ்வளவு பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கு. நம்மகிட்டயும் பிறமொழிச் சொற்களை மிகுதியாப் பயன்படுத்தினா நம்ம மொழியில இருக்கிற சொற்கள் மறந்தே போகும்கிற எண்ணமே இல்லாம இருக்கு. முன்னாடியும் இது போன்ற ஒரு சூழ்நிலையிலதான் தனித்தமிழ் இயக்கம்னு தூய தமிழ் மொழிச் சிந்தனை தோன்றுச்சு.

மலர்: தனித்தமிழ் இயக்கம், தூய தமிழ்ச் சிந்தனைன்னு ஏதேதோ சொல்ற. எனக்குப் புரியும்படி சொல்லேன். மதி: அந்தக் காலத்துலயும் பிற மொழிக்கலப்பால இதே போன்ற நிலை இருந்தது. இன்னைக்கு ஆங்கிலம் மட்டும் நமக்குத் தெரியுது. அன்னைக்கு சமஸ்கிருதச் சொற்கள் தமிழ் மொழியில நிறைய கலந்திருந்துச்சு. அதுமட்டுமில்லாம வெளியில இருந்து வந்த திசைச்சொற்களும் சேர்ந்திடுச்சு. தமிழ்ல சமஸ்கிருதச் சொற்களைக் கலந்து எழுதற உரைநடையை மணிப்பிரவாள நடைன்னு சொல்வாங்க.

மலர்: மணிப்பிரவாளமா? என்னக்கா இதுவே கடினமான சொல்லா இருக்கே.

மதி: சமஸ்கிருதச் சொற்களையும் தமிழ்ச்சொற்களையும் கலந்து எழுதுகிற வழக்கத்தைத்தான் மணிப்பிரவாள நடைன்னு சொல்வாங்க. மணியும் இடையிடையே முத்தும் கோர்த்த மாலையைப் போல, தமிழும் சமஸ்கிருதமும் கலந்த உரைநடை. இந்தநிலையிலதான் தமிழ் மொழி சமஸ்கிருதத்தோட உதவி இல்லாம தனியே இயங்கக்கூடிய வளமும் ஆற்றலும் பெற்ற மொழி. ஏன் தமிழை மட்டும் தனித்து எழுதவும் பேசவும்கூடாதுன்னு சொல்லி தனித்தமிழ்னு ஒரு சிந்தனை எழுந்துச்சு. இயக்கமாவே மாறிச்சு.

மலர்: யார் இந்த இயக்கத்தைத் தொடங்கினாங்க? மதி: மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், தேவநேயப் பாவாணர், நீலாம்பிகை அம்மையார், திரு.வி.க, தனிநாயக அடிகளார், பெருஞ்சித்திரனார் போன்ற தமிழறிஞர்கள்தான் தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்தெடுத்தவங்க. தொடர்ந்து தனித்தமிழ் இயக்கம் பத்தி விரிவாப் பேசுவோம்.

(மேலும் தித்திக்கும்)

கட்டுரையாளர்: தமிழ்த் துறை பேராசிரியை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x