Published : 22 Nov 2019 09:35 AM
Last Updated : 22 Nov 2019 09:35 AM

ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ரூ.40 கோடியில் 88 மாதிரி பள்ளிகள் உருவாக்கம்: தமிழக பள்ளிக்கல்வி துறை திட்டம்

கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக 88 மாதிரிப் பள்ளிகளை உருவாக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதல்கட்ட திட்டப்பணிகளுக்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் பள்ளிக்கல்விக் கான செலவினத்தைக் கட்டுப்படுத்தி, அதன் தரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த மாதிரிப்பள்ளிகளை உருவாக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தது. அதையேற்று இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த ஆண்டுஅறிவுறுத்தியது. இத்தகைய மாதிரிப் பள்ளிகளில் ஒரே வளாகத்தில் மழலையர் வகுப்புகள் முதல் பிளஸ் 2 வரை இருக்கும்.

இதுதவிர உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை, கண்காணிப்பு கேமரா, அனைத்து வசதிகளுடன் கூடிய அறிவியல் ஆய்வகம், சோலார் விளக்குகள், டிஜிட்டல் கரும்பலகை, விளையாட்டு மைதானம், நுண்கலைத்திறன் வளர்க்க வசதி, சில பிரிவுகளுக்கு ஆங்கில வழிக்கல்வி, வகுப்பறைகளில் ஒலிபெருக்கி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும்கழிப்பறை வசதிகள் என அனைத்துஅம்சங்களும் இடம்பெற வேண்டும். இதன்மூலம் பள்ளிகளில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக கல்வித்தரத்தை உயர்த்த முடியும். மாணவர்களின் கற்றல் திறனும் மேம்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் வருவாய் மாவட்டத்துக்கு ஒன்று வீதம் 32 அரசு மாதிரிப் பள்ளிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன. பொதுமக்களிடம் இதற்கு வரவேற்பு இருப்பதால் திட்டத்தை விரிவுபடுத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக கல்வி மாவட்ட அளவில் 88 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, முதல்கட்ட திட்டப்பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ரூ.26 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 32 மாதிரி பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த பள்ளிகளுக்கு வரவேற்பு இருப்பதால் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து கல்வி மாவட்ட வாரியாக ஒரு மாதிரிப்பள்ளி அமைக்கஅரசு முடிவு செய்துள்ளது. மொத்தமுள்ள 120 கல்வி மாவட்டங்களில் ஏற்கெனவே 32 மாதிரிப்பள்ளிகள் அமைக்கப்பட்டுவிட்டன.

மீதமுள்ள 88 கல்வி மாவட்டங்களில் ரூ.40 கோடியில் மாதிரிப்பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும். இதன்மூலம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், மைதானங்கள், குடிநீர் வசதிகள் மற்றும் கழிவறைகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட இதர தொழில்நுட்ப சாதனங்களை கல்வித்துறையே கொள்முதல் செய்து நேரடியாக அளித்துவிடும். இதுதவிர பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதலாக நிதி தேவைப்பட்டால் எம்.பி, எம்எல்ஏ பங்களிப்பு மற்றும் சமூகத் திட்டங்கள் மூலம் பெறப்பட்டு வழங்கப்படும்.

இதற்கிடையே புதிய மாதிரிப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறந்த 4 மாதிரிப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், துறை வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் மாதிரி பள்ளிகளாக மாற்றுவதற்கான வழிமுறைகள் அதற்கான செயல் திட்டங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டது. அனைத்து திட்டப் பணிகளையும் மே மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x