Published : 22 Nov 2019 09:30 AM
Last Updated : 22 Nov 2019 09:30 AM

ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று வந்த பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா

ரஷ்யாவுக்கு அறிவியல் சுற்றுலா சென்றுவந்த தமிழக பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

’இந்திய ரஷ்ய தொழில் வர்த்தக சபை’ சார்பில் வேலம்மாள் நெக்சஸ்பள்ளியைச் சேர்ந்த 63 மாணவர்கள் கடந்த செப்டம்பர் 28 முதல்அக்டோபர் 6-ம் தேதி வரை ரஷ்யாவுக்கு அறிவியல் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அப்போது ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் கலாச்சார மையங்களை அவர்கள் பார்வையிட்டனர். மேலும், விண்வெளி வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடினர். இந்நிலையில், ரஷ்யா சென்று திரும்பிய மாணவர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் உள்ளரஷ்ய கலாச்சார மையத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்களை பாராட்டி ‘பிரம்மோஸ்’ விஞ்ஞானி ஏ.சிவதாணுப்பிள்ளை பேசியதாவது:

தொழில்நுட்பங்கள்

அறிவியல் வளர்ச்சியில் உலகஅளவில் ரஷ்யாதான் முன்னணியில் இருக்கிறது. ரஷ்யாவின் கலாச்சாரம், கண்டுபிடிப்புகள் உட்பட அனைத்து அம்சங்களும் தனித்துவம் கொண்டதாக இருக்கும். அத்தகைய சிறப்புடைய ரஷ்யா, இந்தியாவுக்கு மிகச்சிறந்த தோழமை நாடாக இருக்கிறது.

தொழில்நுட்ப ரீதியாக நாம் வளரதொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. நம்முடன் நல்ல நட்புறவு கொண்ட ரஷ்யாவின் கலாச்சாரம், கல்வி முறை, தொழில்நுட்பங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சாதிக்க வேண்டும்

அதற்காக இந்திய ரஷ்ய தொழில்வர்த்தக சபை உதவியுடன் நம் பள்ளி மாணவர்கள் ரஷ்யாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். ரஷ்ய விண்வெளி மையத்தை பார்வையிட்ட மாணவர்களுக்கு ராக்கெட் தயாரிப்பு, செயற்கைக்கோள் வடிவமைப்பு உள்ளிட்ட அடிப்படையான அம்சங்களை அங்குள்ள விஞ்ஞானிகள் விளக்கினர். இந்த பயணம் மூலம் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு விஞ்ஞானி, பொறியாளர் என உங்களுக்கு பிடித்த துறைகளில் மாணவர்கள் சாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

உறவுகள் மேம்படும்

விழாவில் ‘இந்து’ என்.ராம்பேசும்போது, ‘‘உலகில் நமக்குமிகவும் நம்பகமான நாடாகரஷ்யா உள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் ரஷ்யா பெரும் பங்காற்றியுள்ளது. எனவே, ரஷ்யாவுக்கு மாணவர்கள் அறிவியல் சுற்றுலா சென்று வந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

அங்கு விண்வெளி ஆய்வு மையம் உட்பட பல்வேறு இடங்களை அவர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த பயணம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். இதில் ஆக்கப்பூர்வமான பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பார்கள். மேலும், இத்தகைய பயணங்கள் இருநாட்டு உறவுகள் மேம்பட வழிவகுக்கும்” என்றார்.

இந்நிகழ்ச்சியின்போது சுற்றுலாவில் கிடைத்த அனுபவங்களை மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான ரஷ்யதுணைத் தூதர் அவ்தீவ் ஓலக் நிக்கோலவிச், ரஷ்ய அறிவியல் கலாச்சார மைய இயக்குநர் கென்னடி ஏ.ரகலேவ், இந்திய ரஷ்ய தொழில் வர்த்தக சபை தலைவர் ஆர்.வீரமணி, செயலாளர் பி.தங்கப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x