Published : 21 Nov 2019 11:48 AM
Last Updated : 21 Nov 2019 11:48 AM

நேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு; காரணம் சொல்லும் ஆசிரியர்!

பள்ளிக்கு வராமல் விடுமுறை கேட்டு நேர்மையாக லீவ் லெட்டர் எழுதிய அரசுப் பள்ளி மாணவனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திருவாரூர், மேலராதாநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தீபக். அவர் கடந்த 18-ம் தேதி வகுப்பு ஆசிரியர் மணிமாறனுக்கு விடுமுறைக் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், ''எனது ஊரில் கபடிப் போட்டி நடைபெற்றது. நான் அங்கு சென்று பார்த்தேன். அதனால், எனது உடல் சோர்வாக உள்ளதால் இன்று மட்டும் விடுப்பு தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறப்பட்டிருந்தது.

இக்கடிதத்தை, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆசிரியர் மணிமாறன் வெளியிட்டிருந்தார். இப்பதிவு இணையத்தில் வைரலானது.

பொதுவாக காய்ச்சல், வயிற்றுவலி, உறவினர் இறப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே மாணவர்களின் விடுமுறைக்கான காரணங்களாக இருக்கும். ஆனால் விளையாட்டைப் பார்க்கச் சென்றதால் விடுமுறை தேவை என்று மாணவர் நேர்மையாக நடந்துகொண்டது எப்படி? அத்தகைய சூழலை உருவாக்கிய ஆசிரியர் மணிமாறனிடமே கேட்டோம்.

'கதைத் திருவிழாக்கள் நடத்துவது, நாடகம் உருவாக்குவது, களப்பயணம் மேற்கொள்வது, விதைப் பண்ணை, நெல் திருவிழா, புத்தகக் கண்காட்சி ஆகியவற்றுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வது என தொடர்ச்சியான செயல்பாடுகளை மேற்கொள்வது எங்கள் வழக்கம்.

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க, பள்ளியில் கருத்துச் சுதந்திரப் பெட்டி வைத்திருக்கிறோம். இதில் அவர்கள் விரும்பும் கருத்துகளை எழுதிப் போடலாம். இதன்மூலம் ஆசிரியர் மாணவர் இடைவெளி குறைந்தது. எதையும் பயப்படாமல் நேர்மையாக எங்களிடம் சொல்ல ஆரம்பித்தனர்.

கபடிப் போட்டிக்குச் சென்ற தீபக்

இந்த லீவ் லெட்டரை எழுதிய 8-ம் வகுப்பு மாணவன் தீபக் அடிப்படையிலேயே புத்திசாலி. 80 சதவீதத்துக்கும் அதிக மதிப்பெண்கள் பெறுபவர். அதிக வாசிப்புத் திறன் கொண்டவர். எதையும் நேரடியாகப் பேசுவார். பள்ளிக்குத் தேவையான பொருளை வாங்குவதாகச் சொல்லிவிட்டு சில சமயங்களில் மறந்துவிடுவேன். 'ஏன் சார் மறந்துவிட்டு வந்தீர்கள்?' என்று கேட்பார். போன் செய்து அதை ஞாபகப்படுத்துவார்.

கடந்த சின தினங்களுக்கு முன்பு அவர்களின் ஊரில் கபடிப் போட்டி நடந்திருக்கிறது. அதிகாலை 5 மணி வரை போட்டி நீண்டதால், அதைக் கண்டு களித்த தீபக் சோர்வடைந்து விட்டார். இதனால் விடுமுறை வேண்டும் என்று நண்பனிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டார்.

நானும் எதேச்சையாகக் கடிதத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். அதற்கு இத்தனை வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நாம் எதனை விதைக்கிறோமா; அதுவே அறுவடைக்குப் பலனாகக் கிடைக்கின்றது- நேர்மை'' என்று நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் ஆசிரியர் மணிமாறன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x