Published : 21 Nov 2019 09:43 AM
Last Updated : 21 Nov 2019 09:43 AM

ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை: ஜனவரி மாதம் வழங்க பள்ளிக்கல்வித் துறை திட்டம்

மாணவர்களைப் போல அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் க்யூஆர் கோடு வசதி கொண்ட ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின்கீழ் 37,211அரசுப் பள்ளிகள், 8,357 அரசு உதவிபெறும் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் 69 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மாணவர்களை போல ஆசிரியர்களுக்கும் க்யூஆர் கோடு வசதி கொண்ட ஸ்மார்ட் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு க்யூஆர் கோடு உடன் கூடிய ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இதையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களின் பெயர், முகவரி, செல்போன் எண், ரத்தப்பிரிவு உள்ளிட்ட முழு விவரங்கள் மற்றும் புகைப்படத்தை நவம்பர் 25-ம் தேதிக்குள் கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இந்தப் பணிகளை செய்ய தவறும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்கட்ட பணிகளை முடித்து ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதத்தில் ஸ்மார்ட் அட்டைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x