Published : 21 Nov 2019 08:42 AM
Last Updated : 21 Nov 2019 08:42 AM

கழிப்பறையை சுத்தம் செய்ய தண்ணீர் தேவையில்லை: புதிய திரவ வழிமுறை கண்டுபிடிப்பு

வாஷிங்டன்

கழிப்பறையை ஒரு முறை சுத்தம் செய்ய6 லிட்டர் தண்ணீர் வீணாக செலவு செய்யப்படுவதாகவும், அதை குறைக்க ‘பாக்டீரியா-விரட்டும் பூச்சு’ என்ற திரவத்தைகண்டுபிடித்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர் கள் கூறுகிறார்கள்.

உலக கழிப்பறை தினம் நவம்பர் 19-ம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தில் கழிப்பறையின் நன்மை, அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், கழிப்பறையில் வீணாகும் தண்ணீர் குறித்தும், அதை சரிசெய்ய புதிய வழிமுறைகள் பற்றியும் ஒரு ஆய்வு கட்டுரையானது நேச்சர் சஸ்டைனபிலிட்டி இதழில் வெளியிடப்பட்டது.

அதில், ஒரு முறை கழிப்பறையை பயன்படுத்திய பின்னர், அதை சுத்தம் செய்ய 6 லிட்டர் தண்ணீர் பயன்படுத்துவதாகவும், கோடிக்கணக்கான மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத அதேவேளையில், உலகம் முழுவதும் ஒரு நாளில் 141 பில்லியன் தண்ணீர் இதற்காக செலவு செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆய்வு கட்டுரை குறித்து, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தக்-சிங் வோங் கூறுகையில், “நாங்கள் வலுவான உயிர் ஈர்க்கப்பட்ட, திரவ, கசடு மற்றும் பாக்டீரியாவை விரட்டும் பூச்சு ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் கழிப்பறையை சுயமாக சுத்தம் செய்யமுடியும்.

திரவ-செறிவூட்டப்பட்ட மென்மையான மேற்பரப்பு (எல்இஎஸ்எஸ்) திரவத்தை பீங்கான் கழிப்பறை கோப்பையில் இரண்டு வகையில் தெளிக்க வேண்டும்.

முதலில் தெளிப்புக்கு பயன்படுத்தப்படும் திரவமானது, மூலக்கூறு ஒட்டப்பட்ட பாலிமர்களில் இருந்து உருவாக்கப்பட்டது. இது மிகவும் மென்மையான மற்றும் தண்ணீரை ஒட்டவிடாமல் விரட்டும் அடித்தளத்தை உருவாக்கும்.

கழிப்பறை கோப்பையில் தெளிக்கும் முதல் திரவம், மிகவும் மென்மையான மேற்பரப்பை உருவாக்கும் அதே வேளையில், 2வது திரவ தெளிப்பு வழுக்கும் மேற்பரப்பை உருவாக்கும். அதில் உள்ள நானோஸ்கோபிக், ஏற்கனவே கோப்பையில் இருக்கும் திரவத்தை சுற்றி ஒரு மெல்லிய மசகு எண்ணெய்யை உட்செலுத்துகிறது.

இப்போது கழிப்பறையை பயன்படுத்தும்போது, அதில் நமது கழிவுகள் எதும் ஒட்டாது. அதேபோல் எந்த தொற்று கிருமிகளும் கழிப்பறையில் உருவாகாது.

இந்த திரவங்கள் ஒருமுறை கழிப்பறை கோப்பையில் பயன்படுத்தப்பட்டால், சுமார் 500 முறைக்கு மேல் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய தேவையில்லை.

இந்த வழிமுறைகளை உலக மக்கள் பயன்படுத்தினால், கழிப்பறையில் வீணாகும்தண்ணீரை, பல மடங்கு மிச்சப்படுத்தலாம். இந்த திரவங்களை சிறுநீர் கோப்பைகளிலும் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x